RTI விண்ணப்பத்தினை அடுத்து செங்காமம் சுகாதார நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
றிப்தி அலி
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்தினை அடுத்து ஒரு தசாப்தத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த பொத்துவில், செங்காமம் சுகாதார நிலையம் புனரமைப்பு செய்யப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
செங்காமம் சுகாதார நிலையம் மக்களின் பாவனைக்கு வழங்கப்படாமல் பல வருடங்களாக மூடப்பட்டுள்ள விடயம் கடந்த ஜனவரி மாதம் பேஸ்புகின் ஊடாக வெளிக்கொணரப்பட்டது.
இது தொடர்பில் மேலதிக தவல்களை பெறும் நோக்கில், கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் விண்ணப்பமொன்றினை சமர்ப்பித்திருந்தோம்.
இந்த நிலையில் - புனரமைப்பு செய்யப்பட்ட செங்காமம் சுகாதார நிலையம், கடந்த மார்ச் 21ஆம் திகதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸினால் மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
தாய், சேய் நல விடயங்களை மேம்படுத்தல் மற்றும் சிறந்த பொதுச் சுகாதார சேவையை மக்களுக்கு வழங்கல் போன்ற நோக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் ஐவெநசயெவழையெட ஆநனiஉயட ஊழசிநஇனால் இந்த சுகாதார நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.
எனினும், "குறித்த பகுதியில் கடமையாற்றிய பொதுச் சுகாதார மருத்துவ மாது கடந்த 2010ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அப்பகுதிக்கு நிரந்தர மருத்துவ மாது நியமிக்கப்படாமையினால் குறித்த நிலையம் மூடப்பட்டிருந்தது" என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ.ஏ. வாஜித் தெரிவித்தார்.
இந்நிலையமானது சேதமடைந்து, ஏனைய சுகாதார வசதியின்றி செயற்படாமல் காணப்படுவதற்கு இப்பிரதேசத்தினை அண்டியுள்ள மக்களின் மோசமான நடவடிக்கையும் வழிவகுத்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த சுகாதார நிலையம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு வழங்கிய பதிலிலேயே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தகவல் அதிகாரியான டாக்டர் வாஜித் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)