ஜனாதிபதியின் 3 வெளிநாட்டு விஜயங்களிற்கான விமான டிக்கெட்டுகளுக்காக 1.6 கோடி ரூபா செலவு

ஜனாதிபதியின் 3 வெளிநாட்டு விஜயங்களிற்கான   விமான டிக்கெட்டுகளுக்காக 1.6 கோடி ரூபா செலவு

றிப்தி அலி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மூன்று வெளிநாட்டு விஜயங்களிற்கான விமான டிக்கெட்டுகள் கொள்வனவிற்காக மாத்திரம் ஒரு கோடி 61 இலட்சத்து 37 ஆயிரத்து 992 ரூபா ஜனாதிபதி செயலகத்தினால் செலவளிக்கப்பட்டுள்ள விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது.

கடந்த 2022.07.20ஆம் திகதி பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் முதல் ஆறு மாத காலப் பகுதிக்குள்ளேயே இந்த மூன்று விஜயங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த மூன்று வெளிநாட்டு விஜயங்களின் போது இங்கிலாந்து, ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நான்கு நாடுகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்துள்ளார்.

இதில் முதலாவது விஜயமாக கடந்த வருடம் செப்டம்பர் 17 – 20ஆம் திகதி வரையான நான்கு நாட்கள் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபதின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதாக இங்கிலாந்தின் தலைநகர் லண்டன்  சென்றுள்ளார்.

இதற்கான விமான டிக்கெட் கொள்வனவிற்காக 56 இலட்சத்து 96 ஆயிரத்து 140 ரூபா ஜனாதிபதி செயலகத்தினால் செலவளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜப்பானின் டோக்கியோவிற்குச்  சென்றுள்ளார். இதன்போது, அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடாவினையும் ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதனையடுத்து, பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜப்பானிலிருந்து ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.

குறித்த இரு நாடுகளுக்குமான ஐந்து நாள் விஜயத்திற்கான விமான டிக்கெட்டுகளுக்காக 59 இலட்சத்து 3 ஆயிரத்து 300 ரூபா நிதி ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடம் எகிப்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான 27ஆவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நான்கு நாள் விஜயமொன்றினை அந்நாட்டுக்கு மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்திற்காக 45 இலட்சத்து 38 ஆயிரத்து 552 ரூபா பெறுமதியான விமான டிக்கெட்டு ஜனாதிபதி செயலகத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2022.07.22ஆம் திகதி முதல் 2023.02.28ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்களிற்காக செலவளிக்கப்பட்ட நிதித் தொகை மற்றும் ஜனாதிபதியுடன் வெளிநாடுகளுக்கு பயணித்தவர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களைக் கோரி கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு தகவலறியும் விண்ணப்பமொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், குறித்த தகவல் கோரிக்கை 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும உரிமைச் சட்டத்தின் 5 (1) (ஆ) (i) மற்றும் 5 (1) (ஆ) (ii) ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த மார்ச் 15ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது.  

"அரசின் பாதுகாப்பை அல்லது அதன ஆள்புல இறைமையை அல்லது தேசிய பந்தோபஸ்தை பாதிக்கக்கூடியதாக இருக்குமிடத்து தகவலைப் பெற அணுகுதலுக்கான வேண்டுகோளொன்று மறுக்கப்படுதல் வேண்டும்" என தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 5 (1) (ஆ) (i) பிரிவு குறிப்பிடுகின்றது.

அதுபோல் குறித்த சட்டத்தின் 5 (1) (ஆ) (ii) பிரிவில், "அத்தகைய தகவல் இரகசியமாகத் தரப்பட்டு அல்லது அதிலிருந்து பெறப்பட்டு உள்ளவிடத்து, ஏதேனும் அரசுடனான அல்லது சர்வதேச சட்டத் தின் கீழ் சர்வதேச உடன்படிக்கைகள் அல்லது கடப்பாடுகள் தொடர்பில் இலங்கையின உறவுகளுக்கு பாரதூரமாக பாதகமாகவிருக்குமிடத்து அல்லது அவ்வாறிருக்கும் சாத்தியமுள்ளவிடத்து தகவலைப் பெற அணுகுதலுக்கான வேண்டுகோளொன்று மறுக்கப்படுதல் வேண்டும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிராகரிப்பிற்கு எதிராக ஜனாதிபதி செயலகத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜெயவர்த்தனவிடம் மேற்கொள்ள்பட்ட மேன் முறையீடும்,  இச்சட்டத்தின் 5 (1) (ஆ) (i) பிரிவின் கீழ் கடந்த மே 2ஆம் திகதி நிராகரிப்பட்டது.

இந்த நிராகரிப்புக்கு எதிராக கடந்த மே 8ஆம் திகதி தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டது. இதன் விசாரணைகள் ஆகஸ்ட் 03, ஒக்டோபர் 05, நவம்பர் 30 ஆகிய தினங்களில் இடம்பெற்றதுடன் இதன் இறுதி விசாரணையின் போது, "டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தகவல் கோரிக்கைக்கான பதில்  வழங்கப்படும்" என ஜனாதிபதி செயலகத்தின் சட்ட உதவியாளர் எல்.ஜி ஹெக்டரினால் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய கடந்த டிசம்பர் 11ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மூன்று வெளிநாட்டு விஜயங்களிற்கான விமான டிக்கெட்டுகள் கொள்வனவிற்காக மாத்திரம் ஒரு கோடி 61 இலட்சத்து 37 ஆயிரத்து 992 ரூபா ஜனாதிபதி செயலகத்தினால் செலளிக்கப்பட்டுள்ளமை  தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயங்களின் போது மேற்கொள்ளப்பட்ட ஏனைய செலவு விபரங்கள் மற்றும் ஜனாதிபதியுடன் பயணித்தவர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்படவில்லை.

இதேவேளை, பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டினை மீட்டெடுப்பதற்காக பல்வேறு நிபந்தனைகளுடன் சர்வதேச நாணய நிதியத்தினால் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், நாட்டுக்குத்; தேவையான வருமானத்தினை அதிகரிப்பதற்காக பல்வேறு வரிகள் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதுடன் மின்சாரக் கட்டணமும், நீர்க் கட்டணமும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, வெட் என அழைக்கப்படும் பெறுமதி சேர் வரி எதிர்வரும் ஜனவரி 01ஆம் திகதி முதல் 18 சதவீதமாக அதிகரிக்கப்படுகின்றது. இதனால் பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படவுள்ளன.

இவ்வாறு பொதுமக்கள் மீதான வரிச் சுமைகள் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் வீண் செலவுகள் அதிகரித்துக் கொண்டு  செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.