மூன்றாந்தரப்பினரின் செலவில் வெளிநாடு பறக்கும் அமைச்சர்கள்
றிப்தி அலி
அமைச்சர்கள் சிலரின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகளுக்கு, மூன்றாம் தரப்பினர் - பணம் செலுத்தியுள்ள விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
அமைச்சர்கள் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளும் போது, அதற்கான செலவுகளை அவர்களின் கீழுள்ள அமைச்சுக்களே வழங்குவது வழமையாகும்.
ஆனால், அண்மைக் காலங்களில் சில அமைச்சர்கள் மேற்கொண்ட உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு, அவர்களின் பொறுப்பிலுள்ள அமைச்சுக்கள் எவையும் நிதி வழங்கவில்லை என்று கூறுகின்றன.
அதேவேளை, மூன்றாம் தரப்பினர் வழங்கும் நிதி அனுசரனையின் ஊடாகவே, இந்த அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களைக்கூட மேற்கொள்கின்றனர் எனும் விடயமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அமைச்சர்களான ஹெகலிய ரம்புக்வெல்ல, ஹரீன் பெர்ணான்டோ, நசீர் அஹமட், காஞ்சன விஜயசேகர மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர், இவ்வாறு மூன்றாந்தரப்பினரின் பணத்தில் - தமது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களை அண்மையில் மேற்கொண்டிக்கின்றனர். இது பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற உலக உணவு பரிசு மற்றும் உயிரியல் தொழிநுட்ப நிகழ்ச்சியில் அமைச்சர் மஹிந்த அமரவீர 12 நாட்கள் கலந்துகொள்வதற்கான நிதி ஐக்கிய அமெரிக்காவின் Soybean Export Councilஇனால் வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டது.
அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்களுக்கு மூன்றாம் தரப்பினர் அனுசரனை வழங்குவது தொடர்பில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவினை பல தடவைகள் தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை.
இவர்கள் போன்றே, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அமைச்சராக பணியாற்றிய போது மேற்கொண்ட எந்தவொரு வெளிநாட்டு விஜயத்திற்கும் அரச நிதி செலவளிக்கப்படவில்லை என அவர் பணியாற்றிய அமைச்சுக்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அதிக வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்ட அமைச்சராக நாமல் ராஜபக்ஷ காணப்பட்டார்.
இவரின் கீழ் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சு மற்றும் தகவல் தொழிநுட்ப மற்றும் தொழில் முயற்சி இராஜாங்க அமைச்சு ஆகியன காணப்பட்டன.
குறித்த மூன்று அமைச்சுக்களினாலும் நாமல் ராஜபக்ஷவின் வெளிநாட்டு விஜயங்களுக்கு எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டன.
எவ்வாறாயினும், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் தகவல்களின் படி 2021ஆம் ஆண்டு மாத்திரம் எட்டு வெளிநாட்டு விஜயங்களை நாமல் ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயங்களுக்காக அமைச்சருடன் யாரும் செல்லவில்லை என்பதுடன் அமைச்சினால் எந்தவொரு நிதியும் செலவளிக்கப்படவில்லை என விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தெரிவித்தது.
இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெறும் நோக்கில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினை தொடர்புகொள்ள பல தடவைகள் முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை.
இதேவேளை, தற்போதைய அமைச்சரவையிலுள்ள ஆறு அமைச்சர்களின் 18 உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களிற்கு ஆறு கோடி ரூபாவிற்கு மேற்பட்ட அரச நிதி செலவளிக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு முதல் ஆறு மாத காலப் பகுதிக்குள் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்களுக்கே இந்த நிதி செலவளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, அலி சப்ரி, விதுர விக்ரமநாயக்க, நஸீர் அஹமட், காஞ்சன விஜேயசேகர மற்றும் நளின் பண்டார ஆகியோரின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களுக்கே குறித்த தொகைப் பணம் அவர்களின் அமைச்சுக்களினால் செலவளிக்கப்பட்டுள்ளது.
18 பேரைக் கொண்ட தற்போதைய அமைச்சரவையினை கடந்த 2022.07.22ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டது. மேலும் மூவர் பின்னர் இந்த அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இவர்கள் 2022.07.22ஆம் திகதி முதல் 2023.02.28ஆம் திகதி வரை மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் 29 அமைச்சுக்களுக்கு தகவலறியும் விண்ணப்பம் கடந்த மார்ச் 1ஆம் திகதி மின்னஞ்சல் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் ஐந்து அமைச்சுக்கள் தகவலறியும் விண்ணப்பத்திற்கு எந்தவித பதிலினையும் வழங்கவில்லை. எவ்வாறாயினும், குறித்த அமைச்சுக்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்ட்ட தகவலறியும் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதை குறித்த அமைச்சுக்களின் தகவல் அதிகாரிகள் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தினர்.
இதேவேளை, ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியவற்று அனுப்பப்பட்ட தகவலறியும் விண்ணப்பங்களுக்கு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 5ஆவது பிரிவின் கீழ் தகவல் வழங்க முடியாது எனக் கூறி நிராகரித்துள்ளன. இதில் ஜனாதிபதி செயலகத்தின் நிராகரிப்பு எதிராக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர்த்து, பிரதமர் அலுவலகம் மற்றும் 23 அமைச்சுக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஆறு அமைச்சர்கள் மேற்கொண்ட 18 உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களிற்கு ஆறு கோடி 12 இலட்சத்து 40 ஆயிரத்து 995 ரூபாவும், 7 ஆயிரத்து 267 அமெரிக்க டொலரும் அரசாங்கத்தினால் செலவளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 15 அமைச்சுக்களினால் அதன் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களிற்கு எந்தவொரு ரூபா நிதியும் ஒதுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
Comments (0)
Facebook Comments (0)