COP28: இலங்கையின் காலநிலை சவால்களை முறியடிப்பதற்கான அடித்தளம்!
றிப்தி அலி
காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய ரீதியில் பாரியதொரு பிரச்சினையாக இன்று உருவெடுத்துள்ளது. இதனால், உலகம் மிகப் பெரும் சவால்களை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தினை ஒருபோதும் முழுமையாக தவிர்க்க முடியாது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவற்றை தணிப்பதற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கும் பல்வேறு திட்டங்களும் முயற்சிகளும் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல்வேறு சர்வதேச மாநாடுகள் வருடாந்தம் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிலையில், உலக நாட்டுத் தலைவர்களின் பங்களிப்புடன் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடொன்றினை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
இதற்கமைய, COP28 என்று அழைக்கப்படும் பங்குதாரர்களுடனான மாநாட்டினை ஐக்கிய நாடுகள் ஏற்பாடு செய்தது. இந்த மாநாட்டினை ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாடு என்றும் அழைப்பர்.
ஜேர்மனியின் தலைநகரான பேர்லினில் 1995ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த மாநாடு வருடாந்தம் இடம்பெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய வரலாற்று முக்கியத்துவமிக்க பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதில், இலங்கை உட்பட 196 நாடுகளின் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட்ட 'பாரிஸ் ஒப்பந்தம்' தொடர்பிலான பிரேரணை முன்னிலை வகிக்கின்றது. "புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியசுக்கு மிகையாகாமல் கட்டுப்படுத்த வேண்டும்" என்பதே இந்த ஒப்பந்தத்தின் இலக்காகும்.
இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட COP இன் 28ஆவது மாநாடு ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் கடந்த நவம்பர் 30ஆம் திகதி முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெற்றது.
54 அரச தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த மாநாட்டில் 200க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 70,000 பேர் கலந்துகொண்டனர். இந்த வருட மாநாடு இலங்கைக்கு முக்கியத்துவமிக்க ஒன்றாக அமைந்திருந்தது.
இதனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாரிய தூதுக்குழுவொன்று இந்த மாநாட்டில் பங்கேற்றது. இதற்கு மேலதிகமாக இலங்கையினைச் சேர்ந்த சூழலியலாளர்கள், விஞ்ஞானிகள், சூழலியல் அமைப்புக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
காலநிலை நீதி மன்றத்தை நிறுவுவதற்கான முன்மொழிவினையும், வெப்ப வலயம் தொடர்பாக அறிக்கையிடுவதற்கான நிபுணர் குழுவொன்றை நிறுவுதல் தொடர்பிலான திட்டத்தின் அவசியத்தினையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது வெளியிட்டார்.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இங்கர் அண்டர்சன் மற்றும் உகண்டா சுகாதார அமைச்சர் அசெங் ஜேன் ரூத் ஆகியோரின் ஆதரவுடன் ஜனாதிபதியினால் காலநிலை நீதி மன்றம் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத் திட்டத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக இந்த மாநாட்டில் அறிவித்தார்.
"ஜனாதிபதியினால் வெளியிட்டப்பட்ட இந்த மூன்று திட்டங்களும் இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் மிக முக்கியமானவைகளாகும்" என பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியரான புத்தி மாரம்பே தெரிவித்தார்.
இவற்றின் ஊடாக, காலநிலை நிதி, தொழிநுட்ப பரிமாற்றம் மற்றும் திறன் விருத்தி போன்ற துறைகளில் இலங்கைக்கு பாரிய நன்மை கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
காலநிலை நீதி மன்றம் என்ற விடயம் இலங்கையினை மாத்திரம் அடிப்படையாக வைத்து ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவில்லை. இதனால், உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் நிச்சயமாக நன்மை கிடைக்கும் என பேராசிரியர் குறிப்பிட்டார்.
"இது போன்றே, வெப்ப வலயம் தொடர்பாக அறிக்கையிடுவதற்கான நிபுணர் குழு மிகவும் அவசியமானதொன்றாகும். இதன் ஊடாக வெப்பம் காரணமாக அதிகம் பாதிக்கப்படும் இலங்கை போன்ற பல நாடுகளுக்கு எதிர்காலத்தில் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வசேட உரையொன்றினை நிகழ்த்திய போது, 'காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை உறுதி செய்வதற்காக முழு உலகமும் ஒன்றுபட வேண்டும்' என்ற அறைகூவலை விடுத்தார்.
இலங்கை உட்பட ஏனைய பங்குதாரர்கள் வெப்ப வலயம் தொடர்பான அறிக்கையிடலுக்காக நிபுணத்துவ சபையொன்றை கூட்டுவதற்கு எதிர்பார்ப்பதாகவும், அதனூடாக வெப்ப வலயத்திற்கு மாத்திரமின்றி முழு துறைசார் திட்டமிடலொன்றை பகிர்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புவி வெப்பமடைதலை 1.5 செல்சியஸினால் குறைப்பதில் இலங்கை உறுதியாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்தி, சுற்றாடல் மாசடைவதைக் கட்டுப்படுத்தல் மற்றும் இயற்கை தீர்வுகளுக்கு பெருமளவான முதலீடுகள் தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதுப்பிக்கத்தக்க சக்திகளின் ஊடாக 100 சதவீத மின்சாரத்தினை 2050ஆம் ஆண்டில் உற்பத்தி செய்வது என்ற இலக்கினை முன்வைத்து பல்வேறு செயற்றிட்டங்கள் தற்போது இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
"இதற்கு தேவையான தொழிநுட்ப அறிவு இலங்கையில் போதுமானதாக இல்லை. இதனை வழங்கக்கூடிய பல நிறுவனங்களை COP28 மாநாட்டில் சந்திக்கக்கூடியதாக இருந்தது" என மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி துசித சுகதபால தெரிவித்தார்.
குறித்த அமைப்புகளுடன் இருதரப்பு தொடர்புகள் ஏற்படுத்துவதன் மூலம் குறித்த இலக்கினை அடைவதற்கான தொழிநுட்ப அறிவினை பெற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அது மாத்திரமல்லாமல், புதுப்பிக்கத்தக்க சக்திகளின் ஊடாக மின்சார உற்பத்திக்கு தேவையான நிதியுதவிகளை வழங்குகின்ற அமைப்புகளையும் இந்த மாநாட்டில் சந்திக்க முடிந்தது என கலாநிதி துசித சுகதபால கூறினார்.
"புதுப்பிக்கத்தக்க சக்திகள் என்ற விடயத்தில் இலங்கை எதிர்நோக்குகின்ற இந்த சவாலை குறித்த அமைப்புகளின் ஊடாக நிச்சயம் முறியடிக்க முடியும். எனினும், இதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை அனைத்து அரச நிறுவனங்களும் வழங்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, காலநிலை மாற்றத்திற்கான இழப்பு மற்றும் சேத நிதியமும் இந்த மாநாட்டில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.
காலநிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மற்றும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு நிதி வழங்கும் அடிப்படையிலேயே இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியத்தின் ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளுக்காக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள் தலா 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஐரோப்பிய ஒன்றியம் 250 மில்லியன் அமெரிக்க டொலரினையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
"இந்த நிதியம் உருவாக்கப்பட்டமை சிறப்பானதொரு விடயமாகும். இலங்கை போன்ற காலநிலை மாற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகளுக்கு இந்நிதியத்தினால் பெருந்தொகையான நிதியளிக்கப்படும்" என தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சஜா தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு எந்தவித நிதியுதவியோ, நட்டஈடோ இதுவரை வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் இழப்பு மற்றும் சேத நிதியம் உருவாக்கப்பட்டுள்ளமை காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படுகின்ற அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளுக்கு பாரிய வரப்பிரசாதமாகும் என அவர் குறிப்பிட்டார்.
காலநிலை மாற்றத்தினால் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகின்ற இலங்கைக்கும் இந்த நிதியத்தின் ஊடாக பல்வேறு நிதிகள் எதிர்காலத்தில் கிடைக்கப் பெறும் என கலாநிதி அஸ்லம் சஜா கூறினார்.
இதற்கு மேலதிகமாக, காலநிலை மாற்றம் தொடர்பான இன்னும் பல சர்வதேச நிறுவனங்களிடமிருந்து இலங்கைக்கு நிதியுதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதை இந்த மாநாட்டில் கலந்துகொண்ட போது அவதானிக்க முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், காலநிலை மாற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிர்காலத்தில் கிடைக்கவுள்ள நிதியுதவிகளை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இவ்வாறு இலங்கைக்கு பல நன்மைகள் கிடைக்கப் பெற்ற COP இன் 29ஆவது மாநாடு அசர்பைஜானில் அடுத்த வருட இறுதியில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டிலும் பல நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையிலான சுற்றுச்சூழல் திட்டங்களை முன்வைக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பணியாகவுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)