வீதியில் கண்டெடுத்த பணப் பையை வீடு தேடிச் சென்று ஒப்படைத்த முஸ்லிம் இளைஞர்கள்
6 மாதங்களின் பின் பௌத்த பிக்குவுடன் வந்து பாராட்டிய உரிமையாளர்
எஸ்.என்.எம்.சுஹைல்
வீதியோரத்தில் கிடந்த பணப் பைக்குள் பெருந் தொகை காசு இருக்க, எவ்வளவு பணம் இருக்கிறதென்று கூட கணக்கிட்டுப் பாராது, உரியவரை தேடி அவரின் வீட்டுக்குச் சென்று குறித்த பணப்பையை கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவமொன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
எனினும், அச்சம்பவத்துடன் தொடர்புபட்ட நல்லுள்ளம்கொண்ட இரு இளைஞர்களும் விடயத்தை மறந்திருந்தாலும் பணப்பையை தொலைத்து சில நிமிடங்கள் ஆடிப்போன அந்த வங்கி ஊழியர் 6 மாதங்கள் கடந்த பின்னர் இளைஞர்களை தேடி சந்தித்து அவர்களை பாராட்டியிருப்பது கௌரவத்தை தருகிறது.
இந்த பாராட்டும் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) தான் இடம்பெற்றது. சம்பவத்துடன் தொடர்புபட்ட 22 வயதுடைய இரு முஸ்லிம் இளைஞர்களையும் தேரர் ஒருவருடன் தேடிவந்து நிட்டம்புவ மல்வத்தை பகுதியைச் சேர்ந்த வங்கி முகாமையாளர் டீ.பீ.கருணபந்து பரிசுப் பொருட்களையும் வழங்கியிருக்கிறார்.
கொழும்பில் பணியாற்றும் பாராட்டுப் பெற்ற இளைஞர்களை விடிவெள்ளி அலுவலகத்துக்கு அழைத்து சம்பவம் பற்றி விரிவாக தெரிந்துகொண்டோம்.
பாராட்டுப் பெற்ற இளைஞர்கள்
கஹட்டோவிட்ட கிராமத்தைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் உம்மு ரம்லா தம்பதியின் புதல்வன் அப்துர் ரஹ்மான் அப்துல் ஹக்கீம் மற்றும் மொஹமட் சாதீக் பௌசுல் நிசா தம்பதியின் புதல்வன் மொஹமட் சித்தீக் மொஹமட் சாஜித் ஆகியோர் சிறுவயதுமுதல் நண்பர்களாவர்.
கஹட்டோவிட்ட அல் பத்ரியா கல்லூரியில் சாதாரண தரம் வரை கல்வி கற்றனர். அப்துல் ஹக்கீம் மாவனெல்லை நூராணியாவிலும் கஹட்டோவிட்ட அல் பத்ரியாவிலும் உயர் தரம் படித்தார்.
ஹக்கீம் வரகாபொல தாருல் ஹஸனாத் எகடமியில் கல்வி பயின்றார். 2018ஆம் ஆண்டு உயர் தர பரீட்சைக்கு முகம்கொடுத்த இவர்கள், CMA கற்கை நெறியை தொடர்கின்றனர். அத்துடன், கொழும்பில் மாஸ் எசோசியேட் எனும் நிறுவனத்தில் அனுபவத்திற்கான தொழிற் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
சம்பவம்
கொரோனாவின் தாக்கத்தினால் அடிக்கடி வீடுகளிலிருந்து தொழில் புரியும் நிலை ஏற்படுகின்ற நிலையில், கொரோனா 2 ஆம் அலை கடந்து கடந்த பெப்ரவரி மாதமளவில் மீண்டும் தொழில் நிறுவனங்கள் ஆரம்பித்தன. மீளவும் தொழிலுக்கு திரும்பிய சில நாட்களில்தான் அந்த சம்பவம் நடந்தது.
காலை ஏழரை மணியளவில் வியங்கொடை புகையிரத நிலையத்திற்கருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கொழும்புக்கு வேலைக்கு வந்த ஹக்கீமும் சாஜிதும் மாலை ஐந்தரை மணியளவில் கொழும்பிலிருந்து வீடு திரும்பலானார்கள்.
ஆறரை மணியளவில் வியங்கொடையை அடைந்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் கஹட்டோவிட்டவிற்கு செல்ல முற்பட்டபோது வீதிக் கடவை சமிக்ஞை விளக்கை தாண்டுகையில் பணத் தாள்கள் கீழே விழுந்திருந்த நிலையில் பணப்பையும் கிடந்துள்ளது.
அதனை கண்ட அப்துல் ஹக்கீம், சாஜிதிடம் கூற அப்பையை எடுக்கிறார் சாஜித். அதனுள், கீழே கிடந்த 5 ஆயிரம் ரூபா நோட்டுகளும் அதனோடு பெயர் குறிப்பிட்டு எழுதப்பட்ட துண்டுகளும் கிடந்துள்ளன. அத்தோடு, பணப் பையினுள்ளும் ஐயாயிரம் ரூபா தாள்கள் அதிகமாக இருந்துள்ளன.
அதனை கண்ட இளைஞர்கள் ஆரம்பத்தில் பொலிஸில் ஒப்படைக்க நினைத்தனர். எனினும் பணத்தை இழந்தவருக்கு உடனடியாக பையை கொடுக்க வேண்டும் என்றால் தாமே கொண்டுபோய் ஒப்படைக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.
பணப்பைக்குள் இருந்த ஆள் அடையாள அட்டையை கொண்டு அவரின் முகவரியை தேடி புறப்பட்டனர். அதில் குறிப்பிட்ட முகவரியின் படி மல்வத்தை எனும் கிராமத்தை சேர்ந்தவர் என அறிய முடிந்தது.
ஆக, அவர்கள் வியாங்கொடை பகுதியில் உள்ள மல்வத்தை எனும் கிராமத்திற்கு சென்று குறித்த இலக்கமுடைய வீடொன்றின் அருகாமைக்கு சென்று விசாரித்துள்ளனர்.
எனினும் பணப்பையை தொலைத்தவர் அந்த கிராமத்தை சேர்ந்தவரல்ல என்பதை அறிந்துகொண்ட சாஜிதும் ஹக்கீமும், வியாங்கொடையிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள நிட்டம்புவ மல்வத்தை கிராமத்திற்கு கூகிள் மெப் தொழிநுட்பத்தை பயன்படுத்தி குறித்த நபரின் வீட்டை தேடி அங்கு சென்றனர்.
ஆள் அடையாள அட்டையில் உள்ள நபரின் பெயரை கூறி விசாரித்து குறித்த நபரை அடையாளம் கண்டுள்ளனர். பின்னர் இவ்வாறு பணப்பையை தொலைத்துவிட்டீர்களா என விசாரித்து அவரிடம் பணப் பையை ஒப்படைத்தாக கூறினார்கள் இளைஞர்கள்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தனது பணப்பை தொலைந்த குறித்த வங்கி முகாமையாளர் 'விடிவெள்ளி'யிடம் தொலைபேசி ஊடாக இவ்வாறு விபரித்தார். கொழும்பிலிருந்து வியாங்கொடை புகையிரத நிலையத்தை அடைந்ததும் அருகே உள்ள எனது மைத்துனரின் கராஜிலிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினேன்.
அப்போது வியாங்கொடை - நிட்டம்புவ வீதி நெரிசலாக காணப்பட்டது. சமிக்ஞை விளக்கிற்கு அருகே எனது இரு பைகள் விழும் நிலையில் இருந்தது. உடனடியாக அதனைபிடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன்.
கொரோனா பாதுகாப்பிற்காக வீடு திரும்பியதும் கையடக்கத் தொலைபேசி, பணப்பை, கைக்கடிகாரம் எல்லாவற்றையும் கழற்றி செனிடைஸர் பயன்படுத்தி மனைவியிடம் கொடுத்துவிட்டு, அதே ஆடையுடன் சென்று குளித்துவிட்டுத்தான் வீட்டுக்குள் செல்வது வழமை.
வீட்டுக்கு சென்றபோது தான் பணப்பை இல்லாமல் போயிருந்ததை தெரிந்துகொண்டேன். வீட்டுக்கு மனைவியின் உறவினர்கள் வந்திருந்தனர். அன்று சம்பள தினம் என்பதால் பணப் பைக்குள் 1 இலட்சத்திற்கும் மேல் பணமும் முக்கிய ஆவணங்கள் மற்று தேவையான குறிப்புகளும் இருந்தன.
இந்நிலையில் பதற்றமாக இருந்தாலும் பணப்பைக்கு என்ன நடந்தது என நிதானமாக சிந்தித்தேன். புகையிரத நிலையத்திலிருந்து வெளியேறும்போது பணப்பை இருந்ததையும் உறுதி செய்துகொண்டேன்.
வீட்டுக்கு தேடி வந்த இளைஞர்கள்
இந்த சந்தர்ப்பத்தில்தான் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்தனர். தலைகவசத்துடன் இருந்தனர். பணப்பையை என்னிடம் தந்துவிட்டு சரிபார்த்துக்கொள்ளுங்கள் என்றனர்.
பையிலிருந்து ஒரு சதம் கூட குறையவில்லை. எல்லா ஆவணங்களும் இருந்தது. அவர்களை வீட்டுக்குள் வரச் சொன்னேன். முடியாது அவசரமாக போக வேண்டும் என திரும்பிவிட்டனர். அவர்களது ஊரை மட்டும் கேட்டுக்கொண்டேன். வீட்டுக்குள் சென்றதும் உறவினர்கள் என்னை கடிந்துகொண்டனர். பெரும் உதவி செய்தவர்களை வீட்டுக்குள் அழைக்காமையை கண்டித்தனர்.
இளைஞர்களை தேடிய கருணபந்து
தனது பணப்பையில் பெருந்தொகை பணம் இருந்த நிலையில் அதனை மீட்டு தன்னை தேடிவந்து ஒப்படைத்த இளைஞர்களை தேட பெரும் பாடு பட்டுள்ளார். வெறுமனே ஊரின் பெயரை வைத்துக்கொண்டு அவர் அந்த இளைஞர்களை நீண்ட நாட்களாக தேடியுள்ளார்.
வியாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தனது நண்பர் மூலம் தேடியுள்ளார். எனினும், குறித்த இளைஞர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு மாதத்திற்கும் மேல் இளைஞர்களை கண்டுபிடிக்க அவர் முயற்சி செய்துள்ளார்.
தேரரின் ஆலோசனை
நிட்டம்புவ மல்வத்தை கிராமத்திலுள்ள பௌத்த விகாரை நிர்வாக முக்கியஸ்தராக இருக்கும் வங்கி முகாமையாளர் கருணபந்து, விடயத்தை விகாராதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விகாரை வளாகத்தினுல் தங்கியிருந்த கிராம சேவைஅதிகாரி ஊடாக கஹட்டோவிட்ட கிராம சேவை அதிகாரியை தொடர்புகொண்டு இளைஞர்களை கண்டுபிடிக்க முடியும் என்று கூறியதுடன், குறித்த இளைஞர்களின் நற் பண்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.
கிராம சேவை அதிகாரி ஊடாக கஹட்டோவிட்டை கிராம சேவை அதிகாரியை தொடர்புகொண்டு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் தொடர்பில் தெரிவித்து அடையாளம் கண்டு தருமாறு கோரியுள்ளார்.
இந்நிலையில் கிராம சேவகர் பள்ளிவாசல் நிருவாக தலைவர் ஊடாக ஊரில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களை தேடியிருக்கின்றார். பள்ளி தலைவர் ஊடாக இளைஞர்களை தேடிக்கொண்டிருக்கையில் தலைவரின் பேரன் ஒருவன் ஹக்கீமின் சகோதரரான ரய்யானிடம் (சாச்சாவின் மகன்) விடயத்தை கூற அவர் தனது தம்பியிடம் விசாரித்துள்ளார்.
ஹக்கீம் ஏற்கெனவே பெப்ரவரி மாதத்தில் சம்பவம் இடம்பெற்றபோது தனது பெற்றோர்களுக்கு விடயத்தை சாடையாக கூறியிருந்தார். ஆனால் இவ்விடயத்தை அவர் பின்னர் அலட்டிக்கொள்ளவில்லை. இதனடிப்படையில் ஹக்கீமும் சாஜிதும்தான் இவ்வாறு நல்லுள்ளம்கொண்டு உதவியவர்கள் என்பதை வங்கி முகாமையாளரும் பிக்குவும் தேடிப்பிடித்தனர்.
இந்நிலையில், இரு கிராம சேவகர்கள், தேரர் மற்றும் வங்கி முகாமையாளர்கள் சகிதம் இளைஞர்களை சந்தித்து பாராட்ட வேண்டும் என தீர்மானித்தனர். எனினும் எல்லோருக்கும் ஒரே தருணத்தில் இளைஞர்களை சந்திக்கச் செல்ல நேரம் கிடைக்காது மேலும் 4 மாதங்கள் கடந்து விட்டன.
திடீர் அழைப்பு
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும்போது ஹக்கீமுக்கு அழைப்பொன்று வந்துள்ளது. இதன்போது, மறுமுனையில் பணப்பையை தொலைத்த வங்கி முகாமையாளர் டீ.பீ.கருணபந்து பேசினார்.
உங்களை சந்திக்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார். தாம் விளையாடிக்கொண்டிருப்பதாக கூறிய ஹக்கீம் யாரோ தன்னை கேலி செய்வதாக நினைத்துக்கொண்டு அப்படியே இருந்துவிட்டார்.
கடந்த வாரம்
பின்னர் கடந்த வாரம் அவ்விளைஞர்களின் வீட்டுக்கு வங்கி முகாமையாளர் கருணபந்து மற்றும் தேரர் ஆகியோர் வந்து இளைஞர்களின் நல்ல உணர்வை மதித்து அன்பளிப்பு பொருட்களை வழங்கி அவர்களை பாராட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மிக ஆழமான கருத்தை வெளியிட்ட வங்கி முகாமையாளர் கருணபந்து,
"நான் வதியும் வீட்டுக்கு அருகே நீதிமன்றம் இருக்கிறது. அங்கு பணப்பை தொலைத்தவர்களின் விடயங்கள் விசாரணைக்கு வரும். பெரும்பாலும் பணப்பை மீளக் கிடைப்பது அரிது.
இருந்தாலும் திரும்ப கிடைத்த பணப்பையை கொண்டு வந்து ஒப்படைத்தவர்கள் முஸ்லிம்களாகவே இருந்துள்ளனர். முஸ்லிம்களின் இந்த மனப்பாங்கை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஏற்கனவே என்னுடைய பணப்பை இதற்கு முதல் தொலைந்திருக்கிறது. அப்போது, அதிலிருந்த 35 ரூபா காசு எனக்கு கிடைக்கவில்லை. ஆவணங்கள் சிலவே கிடைத்தன. எனினும், இவ்விளைஞர்கள் பணப்பையை கண்டெடுத்தது மட்டுமல்லாமல் வீடு தேடிவந்து அதனை ஒப்படைத்தமையானது பண்பு சார் விடயமாகும்.
முஸ்லிம்கள் மார்க்க ரீதியில் இவ்வாறான நற்பண்பை கொண்டிருக்கின்றனரா, அல்லது அவர்களது குடும்பச் சூழல் இந் நற் கருமத்தை செய்ய உந்துகிறதா என்று தெரியவில்லை. இந்த பண்பை கண்டு வியந்து சந்தோஷப்படுகின்றேன்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)