பங்களாதேஷினால் இலங்கைக்கு மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு

பங்களாதேஷினால் இலங்கைக்கு மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு

றிப்தி அலி  

பங்களாதேஷினால் 830 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.  

குறித்த மருந்துப் பொருட்கள் இலங்கைக்கான பங்காதேஷ் உயர் ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிபூல் இஸ்லாமினால் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிடம் உத்தியோகபூர்வமாக கடந்த செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.  

இந்த அன்பளிப்பின் முதற் கட்ட மருந்துப் பொருட்கள் ஏற்கனவே இலங்கையினை வந்தடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட மருந்துப் பொருட்கள் விரைவில் கொழும்பை வந்தடையவுள்ளன.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்கள் தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் நோக்கிலேயே இந்த அன்பளிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையினை மீட்கும் நோக்கில் முதலாவதாக பங்களாதேஷே இலங்கைக்கு கடன் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷினால் 2021ஆம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலப் பகுதி தொடர்ச்சியாக அந்நாட்டு அரசாங்கத்தினால் நீடிக்கப்பட்டு வருகின்றது.