சவூதி அரேபியாவினால் 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு
றிப்தி அலி
புனித ரமழான் மாதத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக வேண்டி சவூதி அரேபியாவினால் 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
இலங்கைக்கான சவூதி அரேபியா தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானியிடம் இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளிற்கமையவே இந்த பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்துள்ள இந்த பேரீச்சம் பழங்களை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தற்போது முன்னெடுத்துள்ளது.
சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்படுகின்ற பேரீச்சம் பழங்கள் ரமழான் மாதத்திற்கு சில வாரங்களுக்கு முன்னரே இலங்கைக்கு வந்தடைவது வழமையாகும். இந்த முறை இதனை தவிர்க்கும் முகமாக முன்கூட்டியே தருவிப்பதற்கான முயற்சிகளை இலங்கைக்கான சவூதி அரேபியா தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி முன்னெடுத்திருந்தார்.
இதற்கமைய, ரமழானுக்கு சில மாதங்களுக்கு முன்னரே சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீச்சம் பழங்கள் கொழும்பை வந்தடைந்துள்ளன. இந்த பேரீச்சம் பழங்களை ரமழானுக்கு முன்னர் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிக்க முடியும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கையில் அமுல்படுத்தப்படுகின்ற பாடசாலை உணவுத் திட்டத்திற்கு பங்களிப்புச் செய்வதற்காக ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான 300 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்கள் உலக உணவுத் திட்டத்தின் ஊடாக கடந்த ஜுன் மாதம் சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)