SJB இனால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு உபகரணங்கள் அன்பளிப்பு

SJB இனால் கிளிநொச்சி மாவட்ட பொது  வைத்தியசாலைக்கு உபகரணங்கள் அன்பளிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியினால் இருபத்தி மூன்று இலட்சத்தி இருபது ஆயிரம் ரூபா (2,320,000.00) பெறுமதியான மருத்துவ உபகரணங்கள கிளிநொச்சி மாவட்ட பொது  வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் "எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு" எனும்  நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின்  எண்ணக்கருவில் நாடுபூராவும் நடைமுறைப்படுத்துவதுமான "ஜன சுவய" கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சமூக நலத்திட்டத்தின் 16 ஆவது கட்டமாகவே இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர் சரவணகவனிடம் இந்த உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சிரேஷ்ட பிரதித் தலைவர் ராஜித சேனாரத்ன, வைத்தியர் காவிந்த ஜயவர்தன மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், டி.சித்தார்தன், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்துகொண்டு "எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு" திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வட மாகாண சபையின் கீழ் செயற்பட்ட கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கான அனுமதியினை கடந்த 14ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது.