வக்பு சபையின் கீழ் மக்தப்கள்; உலமா சபையுடன் உடன்படிக்கை
ஏ.ஆர்.ஏ.பரீல்
நாடெங்கும் இயங்கி வரும் மக்தப்கள் வக்பு சபையின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. இதற்கென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் வக்பு சபையும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்கு தீர்மானித்துள்ளன.
சூம்ம் செயலியினூடாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது குறிப்பிட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் நகல் தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர், பொதுச் செயலாளர்,பிரதம நிர்வாக அதிகாரி உட்பட பல உலமாக்கள் கலந்து கொண்டனர். வக்பு சபை தலைவர், முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உதவிப் பணிப்பாளர் உட்பட பல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
குர்ஆன் மத்ரஸாக்கள் இஸ்லாமிய சின்னங்களில் ஒன்றாகும். முஸ்லிம் சிறார்களுக்கு அல்குர் ஆனை ஓதக்கற்றுக்கொடுத்து சிறுவயது முதல் அறநெறி பயிற்சிகளை வழங்கி அவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாகவும் நற்பிரஜைகளாகவும் உருவாக்குவதற்கான அடிப்படை வழிகாட்டல்கள் குர்ஆன் மத்ரஸாக்களில் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு முஸ்லிமும் நாளாந்தம் குர்ஆனை ஓதி ஐவேளை தொழுதாக வேண்டும். நபி (ஸல்) காலம் முதல் வரலாறு முழுவதிலும் உலக வாழ் முஸ்லிம்கள் முஸ்லிம் சிறார்களுக்கு குர்ஆன் மத்ரஸாக்களை உருவாக்கி அதனைப் பேணி பாதுகாத்து வருவதை மிகப்பெரும் வணக்கமாகக் கருதி செய்து வருகின்றனர்.
இலங்கையிலும் முன்னோர்கள் இதனைக் கட்டி வளர்த்து பாதுகாத்து வந்துள்ளனர். கலாநிதி நுஃமானின் ஆய்வின்படி 1800களில் 5.000க்கும் மேற்பட்ட மத்ரஸாக்கள் இயங்கி வந்துள்ளன.
எனினும் காலப்போக்கில் பள்ளிவாசல்கள் அக்கறை செலுத்தாததன் காரணமாக சிறார்கள் அறநெறி வாழ்வில் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா சபை 2011 முதல் குர்ஆன் மத்ரஸா புனரமைப்புத்திட்டத்தை ஆரம்பித்து ‘மக்தப்’ என்ற பெயரில் நடாத்தி வருகின்றது. மக்தப்பில் 1,200 க்கும் மேற்பட்ட மஸ்ஜித்கள் ஊடாக 110,000 சிறார்கள் பயில்கின்றனர்.
இந்நிலையில் பன்முக சமூகங்கள் வாழும் இலங்கையில் சிறந்த தலைமுறையினரைக் கட்டியெழுப்ப சிறார்களுக்கான இஸ்லாமிய அறநெறிப்பாடசாலைகள் எனும் திட்டத்தை வக்புசபை முன்வைத்துள்ளது.
இதனை கவனத்திற் கொண்டே உலமா சபை மக்தப் புனரமைப்புத்திட்டத்தை கைவிட்டு, மக்தப் புனரமைப்புத்திட்டத்தில் பயன்பெற்று வரும் சிறார்கள் அனைவரையும் வக்பு சபையின் ‘இஸ்லாமிய அறநெறிப்பாடசாலைகள்’ திட்டத்தில் முழுமையாக உள்வாங்குவதை கவனத்திற்கொண்டுள்ளது.
2020 மார்ச் மாதம் முதல் அதன் சாதக பாதகங்கள் தொடர்பில் வக்பு சபையும் உலமா சபையும் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தின. இறுதியில் இருதரப்பும் தங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் பேணப்படும் காலமெல்லாம் உலமா சபை, வக்பு சபையின் அறநெறிப் பாடசாலைத்திட்டத்துக்கு தனது பூரண ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.
Vidivelli
Comments (0)
Facebook Comments (0)