10,000 அமெரிக்க டொலருக்கு மேல் கையிருப்பில் வைக்க முடியாது
பொதுமகனொருவர் 10,000 அமெரிக்க டொலருக்கு மேல் கையிருப்பில் வைக்க முடியாது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
வெளிநாட்டுச் செலாவணியை உடமையில் வைத்திருத்தல் மீதான வரையறைகளை, நியதிகளை மற்றும் நிபந்தனைகளைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரை காலமும் 15,000 அமெரிக்க டொலர் அல்லது அதற்குச் சமனான வேறு வெளிநாட்டு நாணயங்கள் என்ற தொகை தற்போது 10,000ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கைகளிலுள்ள வெளிநாட்டு நாணயத்தை முறைசார்ந்த வங்கித்தொழில் முறைமையினுள் கொண்டுவரும் நோக்குடன், நிதி அமைச்சர் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட கட்டளைக்கு பின்வருமாறு திருத்தமொன்றினை வழங்கியுள்ளார்.
1.இலங்கையிலுள்ள, அல்லது வதிகின்ற ஆளொருவரினால் உடமையில் வைத்திருக்கப்படும் வெளிநாட்டு நாணயத் தொகையை ஐ.அ.டொலர் 15,000 இலிருந்து ஐ.அ.டொலர் 10,000 அல்லது வேறு வெளிநாட்டு நாணயங்களில் அதற்குச் சமனான தொகைக்குக் குறைத்தல்.
2.வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்ற இலங்கையிலுள்ள, அல்லது வதிகின்ற ஆட்களுக்காக பின்வருவனவற்றுக்காக கட்டளைத் திகதியிலிருந்து (2022 யூன் 16) செயற்படத்தக்கவாறு 14 வேலை நாட்களைக் கொண்ட பொதுமன்னிப்புக் காலத்தை வழங்குதல்:
•கட்டளையில் குறித்துரைக்கப்பட்டவாறு தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் அல்லது வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கில் வைப்பிலிடுதல், அல்லது
•அதிகாரமளிக்கப்பட்ட வணிகருக்கு (உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி) விற்பனை செய்தல்.
சொல்லப்பட்ட பொதுமன்னிப்புக் காலப்பகுதியின் இறுதியில் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கமைய கட்டளையை மீறி வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்ற ஆட்களுக்கெதிராக நடவடிக்கைகளைத் தொடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கி உரிமையைக் கொண்டிருக்கும்.
மேலதிகத் தகவல்களுக்கு நீங்கள்;
1.ஏதேனும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கியை அல்லது தேசிய சேமிப்பு வங்கியைத் தொடர்புகொள்ளலாம்.
2.வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.dfe.lk ஊடாக 2284/34 ஆம் இலக்க 2022 யூன் 16ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்ததமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளையைப் பார்க்கலாம்.
3.வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தை 011-2477255, 011-2398511 என்ற இலக்கமூடாகவும் dfe@cbsl.lk என்ற மின்னஞ்சலூடகவும் தொடர்புகொள்ளலாம்.
Comments (0)
Facebook Comments (0)