பொதுமக்களை முழங்காலில் இருக்க வைத்து தண்டனை வழங்கிய இராணுவத்தினர் பணி நீக்கம்
பிரயாணத் தடையினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஏறாவூர் பிரதேசத்தில் பொதுமக்களை துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சகல இராணுவ வீரர்களது கடமைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் சகலரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என இராணுவம் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் உத்தரவின் பிரகாரம் இந்த விடயம் தொடர்பில் இராணுவ பொலிஸார் ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் இராணுவம் தெரிவித்தது.
இந்த விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், குறித்த இராணுவ வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவம் மேலும் தெரிவித்தது. இது தொடர்பில் இராணுவம் விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஏறாவூர் பகுதியில் பயண க்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில் முழங்காலில் இருக்க வைத்து இராணுவத்தினரால் தண்டனை வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று (19) சனிக்கிழமை வைரலாகியமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)