5 மாதங்களில் 2,012 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பயணங்கள் இரத்து
றிப்தி அலி
கடந்த ஐந்து மாதங்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 2,012 விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் 586 விமான சேவைகள் காலதாமதமடைந்துள்ள விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக வெளியாகியுள்ளது.
"கடந்த வருடத்தின் ஓகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான ஐந்து மாத காலப் பகுதியிலேயே மேற்படி விமானப் பயணங்கள் இரத்தும், காலதாமதும் ஏற்பட்டது" என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தகவல் அதிகாரியான கயானி ஆரியரத்ன தெரிவித்தார்.
இதில் அதிகூடிய 949 விமானப் பயணங்கள் ரத்தும், 195 காலதாமதமும் கடந்த டிசம்பர் மாதத்திலேயே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில சந்தர்ப்பங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் இந்த விமானப் பயணங்களின் இரத்து தொடர்பில் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தகவல் அதிகாரி குறிப்பிட்டார்.
திட்டமிடப்பட்டிருந்த நேரத்திலிருந்து 2 மணித்தியாலங்களிற்கு மேல் புறப்படுவதற்கு நேரமெடுத்த விமான சேவைகளையே காலதாமதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
"இவற்றினால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பான தகவல் மாதாந்த அடிப்படையில் இல்லை" என தகவலறியும் கோரிக்கைக்கான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், செயல்பாட்டு அல்லது வணிக அல்லது தொழிநுட்ப அல்லது பொறியியல் காரணங்களினால் ஏற்பட்ட இந்த காலதாமதம் மற்றும் இரத்துக்களை சரி செய்வதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனத்தின் தகவல் அதிகாரி கயானி ஆரியரத்ன தெரிவித்தார்.
இப்பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூன்று விமானங்களை குத்தகைக்கு எடுத்து கால அட்டவணையை எளிதாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"இதற்கு மேலதிகமாக, எஞ்சின் உற்பத்தியாளர்கள் மற்றும் விமான குத்தகைதாரர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஈடுபட்டு திட்டமிடப்பட்ட இயந்திரம் மற்றும் விமான விநியோகங்களை விரைவுபடுத்தவும், எதிர்காலத்தில் செயல்படும் விமானங்களின் கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப, கால அட்டவணையை முன்கூட்டியே குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது" என கயானி ஆரியரத்ன கூறினார்.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக தற்போது எட்டுப் பேர் செயற்படுகின்றனர். இதில் எயர்லைன்ஸின் தலைவர் அசோக் பத்திராஜ உள்ளிட்ட நான்கு பேர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்களாவர்.
"இதன் பணிப்பாளர்களுக்கு எந்தவித சம்பளமோ அல்லது கொடுப்பனவுகளோ வழங்கப்படுவதில்லை" என ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் தெரிவிக்கின்றது.
இதேவேளை, நட்டத்தில் செயற்பட்டு வருகின்ற இந்த நிறுவனத்தினை மறுசீரமைப்பதற்காக விலைமனுக் கோரலுக்கான காலக்கெடு கடந்த மார்ச் 5ஆம் திகதியிலிருந்து 45 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதுவரை இந்த விமான சேவையின் 510 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)