பள்ளிவாசல்களுக்கு வக்பு சபையின் ஊடாக தகவல் கோரிக்கையினை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு அறிவுறுத்தல்
பள்ளிவாசல்களுக்கு வக்பு சபையின் ஊடாக தகவல் கோரிக்கைகளை சமர்ப்பிக்குமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
கல்முனை முஹையதீன் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பில் ஊடகவியலாளர் றிப்தி அலியினால் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட மேன் முறையீடு தொடர்பான விசாரணை கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேயரத்ன, உறுப்பினர்களான ஜகத் லியனாராச்சி மற்றும் முஹம்மத் நஹியா ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, வக்பு சபையின் ஊடாக பள்ளிவாசல்களுக்கான தகவல் கோரிக்கைகளை சமர்ப்பிக்குமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியது.
கல்முனை முஹையதீன் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட காணிகளின் விபரங்கள், அதன் மூலம் கிடைக்கும் வருமானங்கள், இப்பள்ளிவாசலின் கீழுள்ள கடைகள், அதன் மூலம் கிடைக்கும் வருமானங்கள், இப்பள்ளிவாசலின் வரவு மற்றும் செலவு போன்ற விடயங்களைக் கோரி ஊடகவியலாளர் றிப்தி அலியினால் கடந்த ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கை மற்றும் மேன் முறையீடு ஆகியவற்றுக்கு குறித்த பள்ளிவாசலின் அப்போதைய நிர்வாக சபையினால் எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை.
1956ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க வக்பு சட்டத்தின் கீழ் வக்பு சபையில் இப்பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டுள்ளமையினால் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 43ஆவது பிரிவின் கீழ் இப்பள்ளிவாசல் ஒரு பகிரங்க அதிகாரசபை எனத் தெரிவித்து பதில் வழங்காமைக்கு எதிராக ஆணைக்குழுவிடம் மேன் முறையீடு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு மேற்படி அறிவுறுத்தலை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)