சீதனக் கலாசாரத்தினால் கிழக்கில் அதிகரிக்கும் காணியின் விலை
ஆங்கிலத்தில் : சிஹார் அனீஸ்
தமிழில்: ஏ.ஆர்.ஏ. பரீல்
அன்றைய தினம் ரிஸீனாவுக்கு மேலுமொரு துன்பியல் தினமாகும். அவள் தனது குடும்பத்தினருடன் கிழக்கு மாகாணத்தில் தனது சகோதரிக்கு தகுதியான கணவரொருவரை தேர்ந்தெடுப்பதற்காக காத்திருந்தாள். கடந்த ஒரு தசாப்த காலத்தில் தனது சகோதரிக்கு திருமணம் செய்து வைப்பதற்கு ஒருவரைத் தேடுவதற்கு 46 தடவைகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளாள்.
இந்த திருமண பேச்சுவார்த்தை சில நிமிடங்கள் மாத்திரமே நீடித்தது. ரிஸீனாவின் சகோதரி பாத்திமாவுக்கு அவளது பெற்றோரால் அவர்களது பிறப்பிடமான சாய்ந்தமருதுவில் வீடொன்று வழங்க முடியாது எனும் அவர்களது இயலாமை அறியப்பட்டதும் திருமணப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டன.
தலைநகர் கொழும்பிலிருந்து 350 கிலோ மீற்றர் தொலைவிலிருக்கும் சாய்ந்தமருதுவில் உள்ள அவளது பெற்றோர் தங்களால் சீதனமாக வீடொன்று வழங்க முடியாமை தொடர்பில் எடுத்துரைத்தார்கள்.
“முதலில் மாப்பிள்ளையின் குடும்பத்தினர் அவளுக்கு சீதனமாக வீடொன்று வழங்குவீர்களா? எனக் கேட்டார்கள். நாங்கள் வீடொன்று வாங்குவதற்கு முயற்சிப்பதாகக் கூறினோம். இதனையடுத்து அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என ரிஸீனா தெரிவித்தார். அவளது சகோதரியின் உண்மையான பெயரைத் தெரிவிக்க அவள் விரும்பவில்லை.
“எங்களால் வீடொன்று சீதனமாக வழங்க இயலாது. அது மிகவும் விலை கூடியதாகும்” என மூன்று பிள்ளைகளின் தாயொருவர் தனது வீட்டின் முன் விறாந்தையிலிருந்தவாறே தெரிவித்தார். இது அவளது பெற்றோர் அவளுக்கு சீதனமாக வழங்கிய இடமாகும்.
இலங்கையின் கிழக்கு கரையோர பிரதேசங்களில் முஸ்லிம் பெண்கள் குறிப்பிட்ட வயதில் திருமணம் செய்து கொள்வதற்கு வீட்டுடன் கூடிய நிலம் கட்டாயமாகும். சீதன வழக்காறுகள் இப்பிராந்தியத்தில் காணியின் விலையினை பெரிதும் அதிகரிக்கச் செய்துள்ளதனால் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் திருமணம் செய்து கொள்ள இயலாது ஆண் துணையின்றி வாழ்கிறார்கள்.
“இந்தக் கலாசாரத்தில் சீதனம் என்பது தவிர்க்க முடியாத ஒரு பிசாசு” என பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் மின்னத்துல் சுஹீரா தெரிவித்தார். இவர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் விரிவுரையாளருமாவார். சராசரியான ஒரு நடுத்தர குடும்பத்தினால் சீதனம் வழங்குவதற்காக காணியொன்றும் வீடொன்றும் கொள்வனவு செய்வதற்கு பெருந்தொகை கடன் பெறுவது என்பது மிகவும் கஷ்டமான காரியமாகும் எனவும் அவர் கூறினார்.
“சீதனம் வழங்கும் வழக்காறுமுறை இந்தப் பிராந்தியத்தில் காணியின் விலையினை அதிகரிக்கச் செய்வதற்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது. இது சிக்கலான பிரச்சினையாக மாறியுள்ளது. எவரும் இது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை.
அநேகமானோர் சீதனம் வழங்குவதற்காக காணிகள் மற்றும் வீடுகளை கொள்வனவு செய்ததால் இன்று கடன் சுமைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சீதனம் தொடர்பில் விட்டுக் கொடுப்புகளை செய்வதற்கு மிகவும் குறைந்தளவிலான சந்தர்ப்பங்களே உள்ளன’’ எனவும் அவர் கூறினார்.
பாதுகாப்பான வாழ்க்கை
சன அடர்த்தி மிக்க கிழக்கு கரையோர பிராந்தியத்தில் காணிகளுக்கு அதிகளவில் கேள்வி நிலவுகிறது. அரசாங்கத்தின் அண்மைக்கால புள்ளிவிபர கணக்கீடுகளின்படி சில கிராமங்களில் 100,000 க்கும் மேலான மக்கள் ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் வாழ்கிறார்கள்.
10 வருடங்களுக்கு முன்பு சாய்ந்தமருதுவில் ஒரு பேர்ச் அல்லது 25 சதுர மீற்றர் காணி 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது என சாயந்தமருது பிரதேச செயலக காணி அலுவலர் ஹஸ்மி ஜாயா தெரிவித்தார். இன்று இந்த காணியின் விலை 800,000 ரூபாவாக அதிகரித்துள்ளதெனவும் அவர் கூறினார்.
இவ்வாறு காணி விலை அதிகரித்துக் காணப்படுவதால் இப்பிராந்தியத்தில் அநேக குடும்பங்கள் காணி கொள்வனவு செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பெற்றோர் தங்கள் மகள்களின் மாப்பிள்ளைகளுக்கு சிறியளவிலேயே சீதனம் வழங்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் உயர் கல்வியைத் தொடராதிருக்கிறார்கள். இதனால் அவர்களால் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. அத்தோடு தொழில் புரியும் பெண்கள் அவர்களது தகைமையை விடவும் அதிக தகைமை கூடிய கணவர்களையே தெரிவு செய்ய வேண்டியுள்ளது.
இதனால் அவர்களது பெற்றோர் பெரிய காணியும் பெரிய வீடுகளையும் சீதனமாக வழங்க வேண்டியுள்ளது. கரையோர நகரம் கல்முனையில் மக்கள் செயற்பாட்டு கவுன்ஸிலின் சமூக செயற்பாட்டாளர் கலீலுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில்,
“பொருளாதார ரீதியாக தமது பெற்றோரில் தங்கி வாழும் பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு போதிய பணமின்மை பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. அவர்களது பெற்றோர் மரணித்தால் இப் பெண்கள் நெருங்கிய உறவினர்களின் தயவில் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது” என்றார்.
வெளிநாட்டுப் பணம்
இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் சனத்தொகை தொடர்ந்து அதிகரிப்புக்குள்ளாகி வருவதால் அங்கு காணிகள் தொடர்பில் பல சவால்கள் எழுகின்றன. தற்போது சாய்ந்தமருதுவில் 30,000 மக்கள் வாழ்கிறார்கள். உள்ளுராட்சிமன்ற புள்ளி விபரங்களின்படி இறுதியாக மேற்கொள்ளப்பட்ட 2012 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் பின்பு 18 வீதம் சனத்தொகை அதிகரிப்புக்குள்ளாகியுள்ளது.
“சனத்தொகை அதிகரிப்பு காரணமாக ஒவ்வொரு குடும்பத்தினதும் நிலத்தின் விகிதாசாரம் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது” என அம்பாறை மாவட்ட காணி அதிகாரி எம்.ஏ.எம். ராபி தெரிவித்தார்.
ஒரு தசாப்த காலத்துக்கு முன்பு 10 பேர்ச் (250 சதுர மீற்றர்) காணியில் அமைக்கப்பட்டிருந்த தனியான வீடுகள் இன்று சிறிய குடியிருப்புகளாக பல வீடுகளுடன், பல குடும்பங்களுடனானதாக மாற்றம் கண்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
மேலும் காணி விலை இப்பிராந்தியத்தில் அதிகரிப்பதற்கு குறிப்பாக மத்திய கிழக்கில் தொழில் புரிபவர்கள் தங்களது சகோதரிகள் மற்றும் மகள்மார்களுக்கு சீதனமாக வழங்குவதற்கு காணிகளை கொள்வனவு செய்வதும் ஒரு காரணமாகும்.
கரையோர கிராமமான அக்கரைப்பற்று கிராமத்தை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இங்கு ஒவ்வொரு மூன்று குடும்பத்திலும் ஒருவர் வீதம் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவதாக சிவில் சமூக குழுவான மனித மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் தொழில் புரியும் இவர்களால் பெருமளவு காணியை கொள்வனவு செய்ய முடியுமாக இருக்கிறது. இந்நிலைமை காணிச் சந்தையில் ஏகபோக தனியுரிமையை ஏற்படுத்தியுள்ளதுடன், ஏனையவர்கள் கொள்வனவு செய்ய முடியாத அளவுக்கு காணியின் விலைய அதிகரிக்கச் செய்துள்ளது என மனித மேம்பாட்டு அமைப்பின் பிரதம நிர்வாக அதிகாரி நிஹால் அஹமட் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களுக்கு காணியில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக அமைந்துள்ளது என முன்னாள் வெளிநாட்டு பணியாளர் எம்.சமீம் தெரிவித்தார்.
வெளிநாட்டில் தொழில் புரிபவர்கள் அவர்களது பெண் குடும்ப அங்கத்தினர்களுக்கு சீதனம் வழங்குவதற்காக காணி கொள்வனவு செய்வது ஒரு சிறந்த முதலீடாகும். பணத்தை சேமிப்புக் கணக்கில் முதலிடுவதை விடவும், நிலையான முதலீட்டில் வைப்பிலிடுவதை விடவும் இது சிறந்த முதலீடாகும் எனவும் அவர் கூறினார்.
அதிகாரிகள் இந்த சீதனப் பிரச்சினை தொடர்பில் தீர்மானமொன்றினை மேற்கொள்வதற்குத் தவறியுள்ளார்கள். இதனை அவர்கள் ஒரு பிரச்சினையாகக் கருதவில்லை எனவும் முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அரசியல் செயற்பாட்டாளருமான சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்தார்.
“சீதனம் தொடர்பில் அரசாங்கத்திடம் எவ்வித கொள்கைகளுமில்லை. ஏனென்றால் சமூகத்தில் அநேகர் இதனை நியாயப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
காணி அமைச்சிடம் இது தொடர்பில் கருத்து வினவிய போது அவர்களிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.
வாழ்வதற்கு காணி கொள்வனவு
கல்முனை நகரத்தைச் சேர்ந்த 54 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான மொஹமட் ராசீக் தனது 75 சதுர மீற்றர் (807 சதுர அடி) வீட்டின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்காக 2005 ஆம் ஆண்டு முதல் கடுமையாக முயற்சித்து வருகிறார்.
இந்த வீடு அவரது ஒரே மகளுக்கானதாகும். அவரது மகளுக்கு தற்போது வயது 28. திருமணம் செய்து கொள்வதற்காக ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக காத்திருக்கிறாள். வீடு நிர்மாணப் பணிகள் நிறைவு பெறும் வரை அவளுக்கு சீதனமாக வழங்குவதற்கு தன்னிடம் எதுவுமில்லை என ராசிக் தெரிவித்தார்.
அவரால் அந்த வீட்டை மேலும் விஸ்தரிக்கவும் முடியாது. ஏனென்றால் விஸ்தரிப்புக்கான காணி அவரிடமில்லை. அவரால் வேறு காணியை கொள்வனவு செய்யவும் முடியாது.
‘மகளுக்கு சீதனமாக 6 பேர்ச் (150 சதுர மீற்றர்) காணியில் வீடொன்றினை கேட்கிறார்கள். இது என்னால் முடியாத காரியமாகும்” எனவும் ராசிக் தெரிவித்தார். அவர் தினம் ஒரு சிறு தொகையையே தனது உணவு விற்பனை மூலம் வருமானமாகப் பெற்றுக் கொள்கிறார்.
தனது வீட்டின் கீழ்மாடியை பூர்த்தி செய்வதற்கு ஒரு மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“நான் எனது அனைத்து சேமிப்புகளையும் கடந்த 15 வருடகாலமாக இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கு செலவழித்து வருகிறேன். ஆனால் இன்னும் பூர்த்தி செய்ய முடியாமலிருக்கிறது” என்றார்.-
-Vidivelli-
Comments (0)
Facebook Comments (0)