"OIC" என்பது ஒற்றுமை, நீதி மற்றும் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு செயற்படுகிறது
இம்ரான் கான்,
பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தானின் 75 வது ஆண்டு சுதந்திரத் தினத்தில் இஸ்லாமாபாத்தில் இஸ்லாமிய வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பாகிஸ்தானுடனான முஸ்லிம்களின் ஒற்றுமையின் சிறந்ததொரு வெளிப்பாடாகும்.
OIC என்று அழைக்கப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பானது, உலகின் இரண்டாவது பெரிய அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். மேலும், இஸ்லாமிய உலகின் ஒட்டு மொத்த குரலாகவும் செயற்படுகிறது.
பல ஆண்டுகளாக, இந்த அமைப்பு இஸ்லாமிய உலகின் பகிரப்பட்ட நலன்கள் மற்றும் நோக்கங்களை முன்னெடுத்துச் சென்கிறது. இது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, நாகரிகங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே புரிதல்கள் மற்றும் உரையாடல்களை மேம்படுத்தவும், அமைதி, நீதி மற்றும் பரஸ்பர மரியாதை போன்ற உன்னத இஸ்லாமிய விழுமியங்களை மேம்படுத்தவும் முயன்று வருகிறது.
உலக வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் இஸ்லாமாபாதில் இந்த மாநாடு நடைபெறுகிறது. ஒருதலைப்பட்சமாக இராணுவத்தினரை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், ஒரு புதிய "பனிப்போர்" மற்றும் நாடுகளுக்குள் வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வுகள், கொவிட்-19 தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் தொழில்நுட்ப புரட்சியின் தாக்கம் ஆகியவற்றினால் 1945 இல் நிறுவப்பட்ட உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒழுங்கின் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன.
இஸ்லாமிய நாடுகள் இந்த "புதிய யதார்த்தங்களை" கவனமாக கையாள வேண்டும். மேலும், தமது தனிப்பட்ட மற்றும் கூட்டு நலன்களை புரிந்து கொள்ள வளர்ந்து வரும் உலக ஒழுங்கிணை தீவிரமாக வடிவமைக்கவும் கடமைப்பட்டுள்ளன.
அந்த நோக்கத்தை அடைவதற்காக, பெரும் அதிகாரப் போட்டிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதன் மூலமும், இஸ்லாத்தின் உள்ளே காணப்படும் மோதல்களைத் தீர்ப்பதன் மூலமும் மற்றும் வெளிநாட்டு தலையீட்டைத் தடுப்பதன் மூலமும், இஸ்லாமிய நாடுகள் தங்கள் சொந்த இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மேம்படுத்தி பாதுகாக்க கடமைப்பட்டுள்ளனர்.
இரண்டாவதாக, நீதியுடன் கூடிய சமாதானத்தை ஆதரிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பானது, பாலஸ்தீனம் மற்றும் காஷ்மீரின் சுயநிர்ணய உரிமை மற்றும் அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை பெறுவதற்கான நியாயமான காரணங்களை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்.
இந்த இலக்குகள் அச்சுறுத்தலாக இருந்தாலும், வரலாற்றின் கடைசியில் நீதியே வெல்லும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஜம்மு மற்றும் காஷ்மீரின் அடையாளத்தைப் பறித்து, அதன் மக்கள்தொகையை மாற்றியமைத்து, அதன் மக்களை கொடூரமாக ஒடுக்கி அதன் மீது இறுதித் தீர்வைத் திணிக்கும் இந்தியாவின் முயற்சி தோல்வியடையும்.
தெற்காசியாவில் நீடித்த அமைதியும் ஸ்திரத்தன்மையும் நீடிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு அமையவும் காஷ்மீர் மக்களின் விருப்பங்களுக்கு ஏற்பவும் ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும்.
இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நாங்கள் நட்புறவை பேணவே விரும்புகிறோம். மக்கள்தொகை மாற்றங்கள் உட்பட, ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை நிறுத்துவதன் மூலமும், அனைத்து மனித உரிமை மீறல்களைத் நிறுத்துவதன் மூலமும், பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரிகளுடன் நேர்மையான மற்றும் முடிவு சார்ந்த உரையாடலுக்கு உகந்த சூழ்நிலையை இந்தியா ஏற்படுத்த வேண்டும்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டெடுக்க ஒரு சிறந்த வாய்ப்பு காணப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடி மற்றும் பொருளாதார சரிவைத் தவிர்க்க நாம் கூட்டாகச் செயல்பட வேண்டும்.
மேலும், மனித உரிமைகள், குறிப்பாக பெண்களின் உரிமைகள் ஆகியற்றை ஊக்குவிக்கவும், ஆப்கானிஸ்தானிலிருந்து பயங்கரவாத அச்சுறுத்தலை அகற்ற பயனுள்ள திட்டங்களை தீட்டவும், ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் தீவிரமாக ஈடுபாடு கொள்ள வேண்டியிருக்கிறது.
முஸ்லிம் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நாமே ஆலோசித்து தீர்வு காண கடமைப்பட்டுள்ளோம். சிரியா, லிபியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் உள்ள மோதல்களை சம்பந்தப்பட்ட இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பின் மூலம் தீர்ப்பதும், இந்த மோதல்களில் இருந்து முஸ்லீம் அல்லாதவர்களின் தலையீட்டை விலக்கவதும் மிகவும் முக்கிய அம்சங்களாகும்.
முஸ்லிம் நாடுகளுக்கிடையில் அல்லது முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத நாடுகளுக்கிடையில் அல்லது முஸ்லிம் அல்லாத நாடுகளுக்கிடையில் மோதல்கள் எழும்போதெல்லாம், பயனுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலைத் தீர்ப்பதற்கான, அதன் அமைதி மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை நிறுவுவது குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தீவிரமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது.
ஒட்டுமொத்த முஸ்லிம் நாடுகளில் மனித வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் நிரம்பி வழிகின்றது. ஆனால் திறனைக் கட்டியெழுப்பும் நோக்கில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டியுள்ளது. பொருளாதார மற்றும் வணிகத் துறைகளில் இஸ்லாமிய கூட்டு நடவடிக்கையானது, பாரிய அரசியல் ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக அமையும்.
கொவிட்-19 தொற்று மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை நமது சமூகப் பொருளாதார சவால்களை அதிகப்படுத்தியுள்ளன. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கான உள்-அமைப்பை நோக்கிய முன்னுரிமைகளை மீட்டமைப்பதற்கான புதிய வாய்ப்புகளையும் அது ஏற்படுத்தியுள்ளது.
தொற்றுலிருந்து மீள்வதற்கும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் போதுமான வளங்களை திரட்ட இஸ்லாமிய நாடுகள் மற்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
கடன் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு, 0.7 சதவீத உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி இலக்கை நிறைவேற்றுதல், பயன்படுத்தப்படாத $400 பில்லியன் புதிய சிறப்பு வரைதல் உரிமைகளை மறுபகிர்வு செய்தல், பலதரப்பு அபிவிருத்தி வங்கிகள் மூலம் பாரியளவு கடன் வழங்குதல், நிலையான உள்கட்டமைப்பில் பாரியளவிலான பொது மற்றும் தனியார் துறை முதலீடு, மற்றும் காலநிலை நிதியில் ஆண்டுதோறும் வாக்குறுதியளிக்கப்பட்ட $100 பில்லியனைத் திரட்டுதல் ஆகியவை இதில் உள்ளடங்கும் அம்சங்களாகும்.
சர்வதேச நிதி, வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பு முறைமை ஆகியவற்றில் நியாயமான மற்றும் சமமான செயற்பாட்டினை நாங்கள் கோர கடமைப்பட்டுள்ளோம். ஊழல், மோசடி, வரி நீக்கம் ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நமது நாடுகளில் இருந்து வெளியேறும் பில்லியன் கணக்கான பணத்தினை நாம் தடுத்து நமது நாட்டுக்குள் மீளப்பெறவேண்டும்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பானது, எதிர்காலத்தில் அறிவு சார்ந்த, ஒருங்கிணைந்த மற்றும் டிஜிட்டல் ரீதியான உலகளாவிய பொருளாதாரத தரத்திற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் நிதி ஆகியவற்றில் உள்ள போக்குகளை ஆய்வு செய்வதற்கும் தெளிவான நீண்ட கால மூலோபாயத்தை பரிந்துரைக்கவும் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான ஒரு அமைப்பின் கீழ் "எதிர்காலத்திற்கான ஆணையம்" ஒன்று நிறுவப்பட வேண்டும்.
மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய அனைத்து நாடுகளுடனும் பொருளாதார ஒத்துழைப்பை நாம் ஊக்குவிக்க வேண்டும். அதே சமயம், இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பிற நிறுவனங்களைப் பயன்படுத்தி, இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே உள்ள பொருளாதார சிக்கல்களை சரி செய்யவும் கடமைப்பட்டுள்ளோம்.
இறுதியாக, நமது நம்பிக்கையான இஸ்லாம் மீதான உலகளாவிய மரியாதையை நாம் மேம்படுத்த வேண்டும். மேலும்,உலகில் வாழும் அனைத்து முஸ்லிமும் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். இஸ்லாமோ, நமது புனித அல்குர்ஆனோ அல்லது நமது இறைத்தூதர் அவர்களோ இழிவுபடுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
இஸ்லாமோ போபியாவின் மிக மோசமான வெளிப்பாடு என்னவென்றால், இந்தியாவை பிரத்தியேகமான இந்து நாடாக மாற்றுவதற்கான அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட பிரச்சாரமாகும். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலை நடக்கும் அபாயம் காணப்படுகிறது.
மார்ச் 15 ஐ இஸ்லாமிய வெறுப்பை எதிர்ப்பதற்கான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்த வேண்டும் என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுடன் இணைந்து பாகிஸ்தானால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொண்டிருப்பத்தையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அனைத்து மதங்களையும் மதித்தலை ஊக்கப்படுத்துதல், நாகரிகங்களுக்கிடையில் உரையாடலை மேம்படுத்துதல் ஆகியவை மூலம் அமைதியான சகவாழ்வு மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்த நாம் தொடர்ந்து பாடுபடுவோம்.
பாகிஸ்தான் எப்போதும் இஸ்லாத்தை பாதுகாக்கும் கோட்டையாகவும், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் நலன்களில் கரிசனைக்காட்டும் நாடாகவும் எப்போதும் இருக்கும். மதீனாவில் நடைமுறையில் உள்ளது போன்று, நமது புனித நபியின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு, பாகிஸ்தானை நவீன, ஜனநாயக, இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுவதற்கான எங்கள் தேச பிதாவின் இலக்கை நான் நிறைவேற்றுவதே எனது அபிலாஷையாகும்.
Comments (0)
Facebook Comments (0)