புகையிரத திணைக்களத்திற்கு வெள்ளிரும்பினாலான 160 பயணிகள் பெட்டிகளின் விநியோகம்
இந்தியாவின் RITES Ltd நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படவுள்ள 160 ரயில் பெட்டிகளில் பத்து பெட்டிகளைக் கொண்ட முதல் தொகுதி கடந்த மார்ச் 9ஆம் திகதி கொழும்பை வந்தடைந்துள்ளது.
இந்தியாவின் EXIM வங்கி ஊடாக இலங்கையின் புகையிரத உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவியின் கீழ் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான உடன்படிக்கை கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் புகையிரத திணைக்களம் மற்றும் RITES Ltd நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
புகையிரத திணைக்களத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பயணிகள் ரயில் பெட்டிகள் பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கரையோர சுற்றுச்சூழலை கவனத்தில் கொண்டு அதிலிருந்து ஏற்படும் தாக்கங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வகையில் துருப்பிடிப்பதை தவிர்க்கும் விசேட தீந்தை, பொலியுரேதேன் வெளிப்பூச்சுக்களுடனான வெள்ளிரும்பு கலங்கள் உள்ளிட்ட விசேட தொழில்நுட்பங்களுடன் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அழகியல்மயமான உள்ளக வடிவமைப்பு, கண்ணாடியால் வேறாக்கப்பட்டிருக்கும் பிரிவுகள், ஒலியைக் கடத்தாத தரை விரிப்புக்கள், சகல பெட்டிகளிலும் எல்இடி மின்குமிழ் தொகுதிகள், ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் முறைமை, ஒலி மற்றும் ஒளி தொகுதிகள் உடனான பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவையும் இந்த ரயில் பெட்டிகளில் உள்வாங்கப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வே திணைக்களத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சென்னையிலுள்ள ரயில் இணைப்புப்பெட்டி தொழிற்சாலையில் (Integral Coach Factory) இந்த பயணிகள் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை தற்பொழுது இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற டீசல் மூலம் இயங்கும் 78 ரயில் பெட்டிகளை ஒத்தவையாக இவை அமைகின்றன. அவை 2018-19 காலப்பகுதியில் விநியோகிக்கப்பட்டவையாகும்.
COVID-19 காரணமாக ஏற்பட்டிருந்த தொடர்ச்சியான முடக்கங்கள் போக்குவரத்து தடைகள் ஆகிய மிகமோசமான நிலைமைகளுக்கு மத்தியில் இந்த முதல் தொகுதியான 10 பயணிகள் ரயில் பெட்டிகள் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ளவை அடுத்த சில மாதங்களில் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இந்தியாவின் ஒட்டுமொத்த அபிவிருத்தி உதவியானது இதுவரையில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தி பங்குடமையில் இலங்கை ரயில்வே உட்கட்டமைப்பின் அபிவிருத்திக்கும் மிக முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் புகையிரதப் பாதைகளை புனர்நிர்மாணம் செய்தல் (268 Kms), சமிக்கைகள் மற்றும் தொலைத்தொடர்பு முறைமைகள் (330 Kms), கரையோர ரயில் பாதையின் தரம் உயர்த்தல் பணிகள் (118 Kms) ஆகியவை ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ள திட்டங்களாகும். இந்நிலையில் ஏனைய பல திட்டங்களும் அமுல்படுத்தப்படுவதற்கான பல்வேறு நிலைகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)