1.45 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் முன்வருகை
ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் 1.45 மில்லியனை இலங்கைக்கு வழங்க ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் COVAX வசதியினூடாக உதவும் வகையில் இந்த தடுப்பூசிகளை வழங்க ஜுலை 13ஆம் திகதி ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அடுத்துவரும் வாரங்களில் இலங்கைக்கு ஜப்பானிடமிருந்து இந்த வக்சீன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கொவிட்-19 தொற்றுப் பரவலக்கு எதிராக போராடுவதற்கு இயலுமானவரை பெருமளவான மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் வினைத்திறன் வாய்ந்த வக்சீன்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஆதரவளிக்கும் ஜப்பானின் தீர்மானத்தின் பிரகாரம் அமைந்துள்ளது.
மேலும், “இறுதி மைல் ஆதரவு” என்பதற்கமைய, ஜப்பானிய அரசாங்கம் UNICEF ஊடாக குளிர வைத்தல் சங்கிலித் தொடர் சாதனங்களை வழங்கியுள்ளது. நாடு முழுவதையும் சேர்ந்த மக்களுக்கு சமத்துவமான வகையில் வக்சீன்களைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதற்கான முறையான கட்டமைப்பை உருவாக்குவதற்கு இது உதவியாக அமைந்திருக்கும்.
இதில் குளிர்ச்சியான களஞ்சியப்படுத்தல் பெட்டிகள் மற்றும் உரிய வெப்பநிலையில் வக்சீன்களை தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பெட்டிகள் போன்றன அடங்கியுள்ளன.
இலங்கையின் நீண்ட கால நண்பன் எனும் வகையில், இவ்வாறான உதவிகளினூடாக, இலங்கை அரசாங்கத்துக்கு அதன் தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை வேகமாக முன்னெடுத்து, இலங்கையில் கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதில் ஜப்பானிய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக ஜப்பான் 16.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதுடன், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வக்சீன்களை சமத்துவமான வகையில் பகிர்ந்தளிப்பதற்காக COVAX வசதியின் கீழ் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உறுதியளித்துள்ளது. கொவிட்-19 தொற்றுக்கு எதிரான இணைந்த போராட்டத்தில் இலங்கையுடன் ஜப்பான் உறுதியாக இணைந்துள்ளது.
Comments (0)
Facebook Comments (0)