பனை அபிவிருத்தி சபையில் தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்றன: TISL

பனை அபிவிருத்தி சபையில் தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்றன: TISL

தேர்தல் சட்டங்களுக்கு முரணான வகையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்திச் சபையினால் (PDB) மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், அக்டோபர் 29ஆம் திகதி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் (ECSL) முறைப்பாடு செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 10ஆம் திகதி அன்று பனை அபிவிருத்திச் சபையின் (PDB) தலைவர் பதவிக்கு செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை நியமிக்கப்பட்டதோடு, அதைத் தொடர்ந்து 12 நாட்கள் இடைவெளியில் அவர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக விநாயகமூர்த்தி சகாதேவன், அக்டோபர் 22ஆம் திகதி அதே பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

மேலும், தேர்தல்கள் ஆணைக்குழு விதித்துள்ள தடைகளுக்கு மத்தியிலும் தலைவர்கள் மாற்றம் மற்றும் பல புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கு பொறுப்பான அமைச்சர் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செப்டம்பர் 25ஆம் திகதி இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவால் (ECSL) வெளியிடப்பட்ட வர்த்தமானியில் மற்றும் தேர்தல் சட்டத்தில், குறிப்பாக அரச அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன் அனுமதி பெறாமல், தேர்தல் காலத்தில் அரச நிறுவனங்களில் எந்தவொரு ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் அல்லது இடமாற்றங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான தேர்தல் காலகட்டத்தில் சட்டத்தை மதிக்காத வகையில் அரசாங்கம் நடந்துகொள்வது கேள்விக்குரிய சூழ்நிலையை எழுப்புகிறது. இவ்வாறான நியமனங்கள் மூலம், பொதுமக்களின் நம்பிக்கை பலவீனப்படுத்துவதுடன் தேர்தல் நடைமுறையின் நேர்மைக்கும், ஜனநாயக செயல்முறையின் நியாயத்தன்மையும் கேள்விக்குட்படுத்தப்படலாம்.

இது குறித்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என TISL கோருகிறது. பொது நிறுவனங்கள் மீதான அரசியல் பக்கச்சார்பு அல்லது தேவையற்ற செல்வாக்கின் சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக பொதுத் தேர்தல் முடியும் வரை பொது நிறுவனங்களில் இத்தகைய நியமனங்களை இடைநிறுத்துமாறு TISL மேலும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

மேலும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக்கொண்டு இருக்கும் TISL நிறுவனமானது இவ்வாறான நிலைமைகளை தொடர்ந்தும் கண்காணிப்பதோடு, பொது நிறுவனங்களில் நெறிமுறை மற்றும் சட்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என கோருகின்றது.