பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க அனுமதி
நாட்டின் மின்சார துறையினை ஒழுங்கபடுத்தும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க பாராளுமன்ற பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
பாராளுமன்ற பேரவையின் ஆறாவது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிப்பதற்கு, 2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்திற்கு அமைய பாராளுமன்ற பேரவைக்கு பெயர்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆணைக்குழுவினை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனைத் தொடர்ந்து குறித்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமாச் செய்தனர். இந்த நிலையிலேயே குறித்த ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்களின் விபரம்:
1. ஜனக ரத்னாயக்க (தலைவர்)
2. திருமதி சதுரிகா விஜேசிங்க (உறுப்பினர்)
3. மொஹான் சமரநாயக்க (உறுப்பினர்)
4. உதேனி விக்ரமசிங்க (உறுப்பினர்)
5. பேராசிரியர் ஜனக ஏக்கனாயக்க (உறுப்பினர்)
Comments (0)
Facebook Comments (0)