தென் கிழக்கு பல்கலைக்கு நிப்பொன் மையத்திடமிருந்து அன்பளிப்பு
ஜப்பான் நிப்பொன் மையத்தின் அரசியல், பொருளாதாரம், வரலாறு, கலாசாரம், இலக்கியம் மற்றும் கலை ஆகிய தலைப்புகளில் அமைந்த புத்தகத் தெரிவுகளை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நஜிமிடம் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா அண்மையில் அன்பளிப்பு செய்தார்.
சர்வதேச சமாதானம் தொடர்பில் கவனம் செலுத்தும் நிப்பொன் மையம், ஜப்பானிய மொழியை ஊக்குவித்தல், கலாசார விழிப்புணர்வை பரவச் செய்தல் மற்றும் ஒற்றுமையுடன் செயலாற்ற அவசியமான புரிந்துணர்வுகளை ஏற்படுத்தல் போன்றவற்றை முன்னெடுக்கும் பிரதான பொது நலன்புரி மற்றும் சமூக நோக்குடன்
செயலாற்றும் அமைப்பாகத் திகழ்கின்றது.
நிப்பொன் மையத்திடமிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட புத்தகங்களை பெற்றுக் கொள்ளும் இலங்கையின் மூன்றாவது பல்கலைக்கழகமாக தென் கிழக்கு பல்கலைக்கழகம் திகழ்கின்றது. 2008ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட “READ JAPAN PROJECT” திட்டத்தினூடாக இதுவரையில் 136 நாடுகளைச் சேர்ந்த 1,011 நூலகங்களுக்கு 65,000 க்கும் அதிகமான புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் மற்றுமொரு அங்கமாக இந்த நன்கொடையும் அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள மாணவர்களின் எதிர்பார்ப்புகளை மேம்படுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கும் என தூதரகம் கருதுவதுடன், ஜப்பானில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு அவர்களை தூண்டுவதாக அமைந்திருக்கும் எனவும் எதிர்பார்க்கின்றது.
இந்த புத்தகங்களை வழங்கி தூதுவர் சுகியாமா கருத்துத் தெரிவிக்கையில்,
"தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இனங்காணப்படாத திறமைகளை வெளிக் கொணர்வதற்கு மேலும் உதவிகளை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த புத்தகங்கள், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் இலச்சினையில் குறிப்பிடப்பட்டுள்ள 'உதிக்கும் சூரியன்' என்பதைப் போன்று, அடுத்த தலைமுறையின் 'வளரும் எதிர்பார்ப்புகள்' என்பதன் அடையாளமாக அமைந்திருக்கும்" என்றார்.
உப வேந்தர் பேராசிரியர் நஜிம் கருத்துத் தெரிவிக்கையில்,
"இந்த புத்தகங்கள் நன்கொடையாக வழங்கியதற்காக ஜப்பானின் நிப்பொன் அமைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். ஜப்பானில் கல்வி பயின்றுள்ள பல்கலைக்கழகத்தின் ஊழியர்களுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
மாணவர்கள் மத்தியில் கலாசார பன்முகத் தன்மையை ஏற்படுத்துவதற்கு இந்தப் புத்தகங்கள் உதவியாக அமைந்திருக்கும், இரு நாடுகளுக்குமிடையிலான கல்விசார பகிர்வுகளை மேலும் துரிதப்படுத்துவதாக அமைந்திருக்கும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)