இலங்கைக்கு 600 மில்லியன் யுவானை பரிசளித்தது சீனா

இலங்கைக்கு 600 மில்லியன் யுவானை பரிசளித்தது சீனா

முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சியின் இலங்கைக்கான விஜயத்தின்போது, இலங்கைக்கு 600 மில்லியன் யுவானை (16.5 பில்லியன் ரூபாய்) பரிசளிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதற்கான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம், இம்மாதம் 9ஆம் திகதி, சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் வாங் ஷியாடாவ்க்கும் இலங்கை நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் அட்டிகலேவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இருவரும், இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் இந்த உதவியை இலங்கைக்கு வழங்கியமைக்கு, இலங்கை அரசாங்கம் சார்பிலும் மக்கள் சார்பிலும் சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தனர்.

இருதரப்பினரதும் பரஸ்பர ஒத்துழைப்பு காரணமாக, சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை மக்களுக்கு சரியான நேரத்தில் வழங்கப்பட்ட மானியம், இலங்கையின் கிராமப்புறங்களில் மருந்துவப் பராமரிப்பு, கல்வி, நீர் வழங்கல் போன்றவற்றுக்கு அதிக முன்னுரிமை வழங்கி, கொவிட் - 19 நெருக்கடியின் பிந்திய காலப்பகுதியில் மக்களின் நல்வாழ்வுக்கு பங்களிப்பு வழங்குகின்றது என்று இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, சீனாவின் மானியத் திட்டத்தால் முன்னெடுக்கப்படும் பொலன்னறுவையிலுள்ள சேதிய சிறுநீரக நோய் வைத்தியசாலை,கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு ஆகியவை குறித்து, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடிய முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி, கொவிட் - 19 நெருக்கடியின் போதும் இத்திட்டங்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளமை திருப்தியளிப்பதாகத் தெரிவித்திருந்தார்.