புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவை சமர்ப்பித்தது ஜமாஅத்தே இஸ்லாமி

 புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவை சமர்ப்பித்தது ஜமாஅத்தே இஸ்லாமி

நாட்டின் புதிய அரசியலமைப்பினை வரைவதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவுக்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி முன்மொழிவுகளை  உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்தது.

இது தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி பாரிஸ் ஸாலி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"புதிய அரசியலமைப்பை வரைவது தொடர்பில் நீதி அமைச்சு‌ பொது மக்களிடம் தமது முன்மொழிவுகள், கருத்துக்கள், எண்ணங்களை  கோரியதற்கிணங்க இம்முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை தயாரிப்பதற்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம், மாவனல்லை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் தனித் தனி குழுக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது.

அரசியலமைப்பு தொடர்பான விடய அறிவுள்ள புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களின் பங்கேற்புடன் குழுக் கலந்துரையாடல்கள் தொடர்ந்தேர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.

அந்த கலந்துரையாடல்களிலிருந்து மேற்படி மூன்று குழுக்களாலும் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மீண்டும் கலந்துரையாடப்பட்டு அவற்றில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டிய விடயங்களை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

மொழி, மதம், அடிப்படை உரிமைகள், நாட்டிலுள்ள சிறுபான்மையினரது உரிமைகள், தேர்தல் முறைமை, அரச சேவைகள், பாராளுமன்ற பிரதிநிதித்துவம், சட்டத்துறை, அதிகாரப் பரவலாக்கம், சுயாதீன ஆணைக்குழுக்கள், ஜனநாயக அமைப்பு, இரண்டாவது சபை அல்லது செனட் சபை, பல்லங்கத்துவ  தேர்தல் தொகுதி, பாராளுமன்ற நியமன உறுப்பினர்கள் என 14 தலைப்புகளில் சுருக்கமாக அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி சமர்ப்பித்துள்ளது.

எதிர்காலத்தில் வாய்ப்பளிக்கப்படும் பட்சத்தில் புதிய அரசிலமைப்பினை வரைவதற்கான நிபுணர்கள் குழு முன்னிலையில் மேற்குறிப்பிட்ட முன்மொழிவுகளை நேரடியாக முன்வைக்கவும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தயாராகவுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில், புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை தயாரிப்பதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது நன்றியறிதல்களை தெரிவித்துக் கொள்கிறது" என்றார்.