திறந்த பல்கலையின் உப வேந்தர் பதவிக்கு முன்மொழியப்பட்டவர்கள் ஜனாதிபதியினால் நிராகரிப்பு
"இலங்கை திறந்த பல்கலைக்கழத்தின் உப வேந்தர் பதவிக்கு முன்மொழியப்பட்ட மூவரின் பெயரும் எந்தவித காரணங்களுமின்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நிரகரிக்கப்பட்டுள்ளது" என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் இன்று (04) செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.
இது தொடர்பில் இலங்கை திறந்த பல்கலைக்கழத்தில் இன்று (04) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க தலைவர் அன்ட பிரியரத்ன, அதன் முக்கியஸ்தர்களாக ரெஹான் பெர்ணான்டோ மற்றும் மெஹின் மென்டிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"இலங்கை திறந்த பல்கலைக்கழத்தின் தற்போதைய உப வேந்தரான பேராரிசியர் எஸ்.ஏ ஆரியதுரையின் பதவிக்காலம் எதிர்வரும் ஜுன் 22ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
இதனால் குறித்த பதவிக்கு புதியவரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கடந்த வருடம் கோரப்பட்டது. இதற்கு விண்ணப்பித்த ஆறு பேரில் இருந்து மூவரை பல்கலைக்கழக பேரவை புள்ளிககள் அடிப்படையில் தெரிவுசெய்திருந்தது.
இலங்கை திறந்த பல்கலைக்கழத்தின் பொறியியல் தொழிநுட்ப பீட பீடாதிபதி பேராசிரியர் அசேல டொலகே (புள்ளிகள் - 70), பல்கலைக்கழகத்தின் கல்வி தொழிநுட்ப பேராசிரியரும், கல்வி பீட முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் சிரோனிகா கருணாநாயக்க (புள்ளிகள் - 69) மற்றும் களனி பல்கலைக்கழக பேராசிரியர் லலித் திலகரட்ண (புள்ளிகள் - 67) ஆகியோரே தெரிவுசெய்யப்பட்டன.
உப வேந்தர் நியமனத்திற்காக இவர்கள் மூவரின் பெயர்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பட்டிருந்தது. தற்போதைய உப வேந்தரின் பதவிக் காலம் நிறைவடைய இன்னும் ஒன்றரை மாத காலமே உள்ள நிலையில் குறித்த மூவரின் பெயர்களும் எந்தவித காரணங்களுமின்றி ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், புதிய உப வேந்தரை தெரிவுசெய்யவதற்கு மீண்டும் விண்ணப்பம் கோர வேண்டியுள்ளது. புதிதாக விண்ணப்பம் கோரி மீண்டும் மூவரை ஜனாதிபதியின் சிபாரிசுக்கு நியமனம் செய்வதற்கு இன்னும் ஆறு மாத காலம் தேவைப்படும்.
இற்குள் தற்போதைய உப வேந்தர் ஓய்வு பெற்றுவிடுவார். இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்தில் பாரிய சிக்கல் ஏற்படும். இதன் காரணமாக மேற்படி சிபாரிசு செய்யப்பட்ட மூவரில் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அவ்வாறில்லாவிட்டால் இதற்கு எதிராக இலங்கை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் போராடத் தயாராகவுள்ளது. பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் ஒருவரை நியமிப்பதே பாரம்பரியமாகும்.
20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக இந்த பாராம்பரியத்தினை மீற அவர் முயற்சிக்கின்றார். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் உப வேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரி ஜனாதிபதிக்கு விருப்பமில்லாத மூவர் சிபாரிசு செய்யப்பட்டால் மூன்றாவது தடவiயாக விண்ணப்பம் கோருவதா?
விரைவில் இந்த விடயம் தொடர்பில் எமது சங்கம் முக்கியமான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளோம். சுயாதீன அமைப்பான பல்கலைக்கழக முறையில் அரசியல்வாதிகள் கையடித்து மாணவர்களின் கல்வியினை பழாக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்" என்றனர்.
Comments (0)
Facebook Comments (0)