RTI ஆணைக்குழுவிற்கு தமிழ் மொழி ஆற்றலுள்ள உறுப்பினரொருவரை நியமிக்குமாறு கோரிக்கை
றிப்தி அலி
கடந்த பல மாதங்களாக வெற்றிடம் நிலவுகின்ற இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு தமிழ் மொழி ஆற்றலுள்ள ஒருவரை நியமிக்க சிபாரிசு செய்யுமாறு பாராளுமன்ற பேரவைக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோரிக்கைகள் சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உறுப்பினராக தமிழ் மொழி ஆற்றலுள்ள ஒருவர் இதுவரை நியமிக்கப்படவில்லை.
இதனால், வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுடனான தொடர்பாடலில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேயவர்த்தன தலைமையில் சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்த்தன, ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி வல்கம, சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி மற்றும் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அதுலசிரி சமரகோன் ஆகியோரைக் கொண்ட இந்த ஆணைக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டது.
எனினும் கலாநிதி அதுலசிரி சமரகோன், குறித்த பதவியிலிருந்து கடந்த டிசம்பர் மாதமே இராஜினாமாச் செய்துள்ளார். இதனையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே தமிழ் மொழி ஆற்றலுள்ள ஒருவரை நியமனம் செய்யுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவினால் நியமிக்கப்பட்ட அனைத்து ஆணைக்குழுக்களிலும் தமிழ் மொழி ஆற்றலுள்ள ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவையினால் விண்ணப்பம் கோரப்பட்டிருந்த போது, 22 பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.
குறித்த 22 பெயர்களையும், அவர்களை சிபாரிசு செய்த அமைப்புக்களின் பெயரையும் வழங்குமாறு கோரி பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயமும், தகவல் உரிமைக்கான குறித்தளிக்கப்பட்ட அலுவலகருமான குஷானி ரோஹனதீரவிடம் மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீட்டினை அடுத்து குறித்த பட்டியல் வழங்கப்பட்டது.
அப்பட்டியலில் தமிழ் மொழி ஆற்றலுள்ள பலர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Comments (0)
Facebook Comments (0)