7,069 மௌலவிமார்கள் மாத்திரம் திணைக்களத்தில் பதிவு
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் 7,069 மௌலவிமார்கள் தம்மை பதிவுசெய்துகொண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மௌலவி என்பதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதற்காக கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து மௌலவிமார்களுக்கான அடையாள அட்டை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படுவதாக திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் றியாஸா எம். நௌபர் கூறினார்.
தகவல் அறியும் சட்ட மூலத்தின் கீழ் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"எமது திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட அரபுக் கல்லூரி ஒன்றின் ஊடாக பட்டம் பெற்றவர்களை மாத்திரமே மௌலவியாக நாம் பதிவுசெய்கின்றோம்.
கடந்த பெப்ரவரி மாதம் வரை எமது திணைக்களத்தில் 7,069 மௌலவிமார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த பதிவிற்கென பொதுவான சட்டங்கள் எதுமில்லை.
2019ஆம் ஆண்டு மௌலவி அடையாள அட்டைக்காக 185 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. அவற்றின் பணிகள் முற்றாக முடிவடைந்துள்ளன. அதேவேளை 2020ஆம் ஆண்டுக்கு பெப்ரவரி வரை 72 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மௌலவி ஒருவர் நாட்டில் அனுமதிக்கப்பட்ட எந்த தொழிலையும் மேற்கொள்ள முடியும். இதனால் மௌலவிமார்கள் செய்யும் தொழில் தொடர்பாக திணைக்களம் கொண்டுள்ள தகவல்கள் வரம்பிற்குட்பட்டது" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)