'RTI ஆணைக்குழுவின் உத்தரவுகளை அமுல்படுத்தாத அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை'
றிப்தி அலி
தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவுகளை அமுல்படுத்தாத அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி கிஷாலி பிண்டோ ஜயவர்த்தன தெரிவித்தார்.
அத்துடன் எந்தவித காரணங்களுமின்றி தகவல்களை வழங்காது இழுத்தடிப்புச் செய்கின்ற தகவல் அதிகாரிகளுக்கு எதிராக பொருத்தமான நிறுவனங்களின் ஊடாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் ஆணைக்குழு தயாராகி வருகின்றது என அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதென்றாகும். குறிப்பாக ஆணைக்குழுவின் உத்தரவுகளை அமுல்படுத்தாத அரச நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அது தொடர்பில் எமக்கு ஒருபோதும் தெரிய வராது - என சிரேஷ்ட சட்டத்தரணி கிஷாலி பிண்டோ ஜயவர்த்தன மேலும் தெரிவித்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு நாட்டில் அமுல்படுத்தப்பட்ட தகவலறியும் உரிமை சட்டத்தின் வரைபுக் குழுவின் உறுப்பினரான இவர், பல சர்வதேச அமைப்புகளின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உறுப்பினராக தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் பணியாற்றி வருகின்ற இவர், பல்வேறு சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.
எதிர்வரும் 28ஆம் திகதி புதன்கிழமை தகவலறியும் உரிமைக்கான தினம் சர்வதேச ரீதியில் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் எமது நாட்டில் தகவலறியும் உரிமையின் நிலை தொடர்பில் ஆணையாளர் கிஷாலி பிண்;டோ ஜயவர்த்தன 'விடியல்' இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.
அவருடனான நேர்காணலின் முழுமை:
கேள்வி: தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பிராந்திய ரீதியில் விஸ்தரிக்கப்படாமைக்கான காரணமென்ன?
பதில்: எமது ஆணைக்குழுவின் செயற்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுடன் நெருங்கி செயற்படுவதற்கான வாய்ப்பு எமது ஆணைக்குழுவிற்கு கிடைக்கும்.
இதற்கமைய, தகவலறியும் உரிமைக்கான இரண்டாவது ஆணைக்குழுவின் அமர்வுகள் இதுவரை யாழ்ப்பாணம், கண்டி, பண்டாரவளை, நுவரெலியா மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றுள்ளன. இதுபோன்று முதலாவது ஆணைக்குழுவின் அமர்வுகள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டன.
எனினும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதரா நெருக்கடி காரணமாக கொழும்புக்கு வெளியில் பிரயாணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு அனைத்து ஆணைக்குழுக்களிற்கும் அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், எமது ஆணைக்குழுவின் அமர்வுகளை தற்போது கொழும்பிலேயே நடத்தி வருகின்றோம். எனினும், இந்த அமர்வுகளில் தூரப் பிரதேச மக்களை பங்கேற்கச் செய்யும் நோக்கில் அவர்களை 'சூம்' தொழிநுட்பத்தின் ஊடாக அல்லது தொலைபேசியின் ஊடாக இணைத்துக் கொள்கின்றோம்.
எவ்வாறாயினும், இந்த ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மையினை பாதிக்காத வகையில், வெளி மாவட்டங்களில் அமர்வுகளை நடத்துவதற்கான கலந்துரையாடல்களை தற்போது முன்னெடுத்துள்ளோம்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகங்கள் மாவட்ட ரீதியில் காணப்படுவது போன்று தகவலறியும் ஆணைக்குழுவின் அலுவலகங்களையும் பிராந்திய ரீதியாக திறக்குமாறு தெரிவிக்கின்றனர்.
எனினும், தகவலறியும் உரிமைச் சட்டத்தில் பிராந்திய அலுவலகங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டவில்லை. இதனால் பிராந்திய அலுவலகங்களை திறக்க முடியாது.
கேள்வி: தகவலறியும் உரிமைச் சட்டத்தில் குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்: இது முற்றிலும் பிழையான நிலைப்பாடொன்றாகும். இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தகவலறியும் சட்ட மூலம் மிகவும் பலமானதொன்றாகும். மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகள் எமது சட்டத்தினை முன்னுதாராணமாக பயன்படுத்தியுள்ளன.
இந்த சட்டத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன எனக் கூறிக்கொண்டு திருத்தம் மேற்கொள்ள முயற்சிக்கும் போது அது எமக்கு எதிர்வினைகளை ஏற்படுத்தும். இதனால், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றினை சிறப்பாக பயன்படுத்த முயற்சிப்போம்.
இந்த சட்டத்தினை வினைத்திறனானதாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எமது ஆணைக்குழு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
கேள்வி: இந்த ஆணைக்குழுவின் தற்போதைய உறுப்பினர்களின் வகிபாகம் எவ்வாறு காணப்படுகின்றது?
பதில்: எமது ஆணைக்குழுவின் தற்போதைய உறுப்பினர்கள் மிகவும் வினைத்திறனாக செயற்பட்டு வருகின்றனர். பொதுமக்களினால் முன்வைக்கப்படுகின்ற மேன்முறையீடுகளை விசாரணை செய்து உடனடியாக தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எமது ஆணைக்குழுவிற்கு இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீடுகளில் சுமார் 85 சதவீதமானவற்றை நிறைவுசெய்து தீர்ப்புகள் வழங்கிவிட்டோம்.
இப்போது எமது ஆணைக்குழுவினால் நீண்ட தீர்ப்புகள் வழங்கப்படாமல் குறுகிய அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இது பொதுமக்களின் நலன் கருதியே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த எட்டு மாதங்களாக எமது ஆணைக்குழுவில் தமிழ் மொழி ஆற்றலுள்ள உறுப்பினர் ஒருவர் இல்லாத நிலையிலும், தமிழ் மொழி மூலமான மேன்முறையீடுகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டன. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய எமது ஆணைக்குழுவின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இவ்விடத்தில் நன்றியை தெரிவிக்கின்றேன்.
தற்போது தமிழ் மொழி ஆற்றலுள்ள ஒருவர் எமது ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பங்குபற்றலுடன் தமிழ் மொழி மூலமான மேன்முறையீடுகளுக்கு தேவையான சிறந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு சிறுபான்மை உறுப்பினர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இதுவொரு பிழையான தோற்றப்பாடாகும்.
ஏனெனில், இது மக்களுக்கு சேவை வழங்கும் ஆணைக்குழுவொன்றாகும். இதனால், குறித்த விடயத்தில் ஆழ்ந்த அறிவினைக் கொண்டவர்களே இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும். அதன் ஊடாக ஆணைக்குழுவின் செயற்பாடுகளை திறம்படச் செய்ய முடியும்.
கேள்வி: ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விபரிக்க முடியுமா?
பதில்: எமது ஆணைக்குழுவின் அமர்வுகள் புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் இடம்பெறுகின்றன. இதனை திங்கட்கிழமைகளிலும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
தினமும் 25 தொடக்கம் 30 மேன்முறையீடுகளை விசாரணை செய்கின்றோம். எனினும், இந்தப் பணிகளை மேலும் அதிகரிப்பதற்கு போதுமான ஆளணி வசதிகள் எம்மிடமில்லை. இது தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தற்போதைய நாட்டு நிலைமை அதற்கு கைகொடுக்கவில்லை.
எனினும், கிடைக்கப்பெற்ற வசதிகளைக் கொண்டு எமது ஆணைக்குழு திறன்பட செயற்பட்டு வருகின்றது. இதற்கமைய, அண்மைக் காலத்தில் பொதுமக்களுக்கு முக்கியமான பல தீர்ப்புக்களை வழங்கியுள்ளோம்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இத்தாலி விஜயத்திற்கான செலவுகளை வெளியிடுமாறு பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவு, இலங்கை துறைமுக அதிகார சபையினால் அமெரிக்க டொலரின் மூலம் தகவலறியும் கோரிக்கைக் கட்டணம் அறிவிடுவது முரணானது என்ற உத்தரவு, எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியமையினால் ஏற்பட்ட சேத விளைவுகளை வெளியிடுமாறு உத்தரவு, கண்ணீர்ப்புகையின் காலவதியான திகதிகளை வெளியிடுமாறு பொலிஸ் திணைக்களத்திற்கான உத்தரவு போன்றவற்றினை குறிப்பிட்டுக் கூற முடியும்.
நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் தகவல் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல் போன்ற சில நடவடிக்கைகளில் கால தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனை நிவர்;த்தி செய்வதற்கு ஆணைக்குழு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. ஊடகவியலாளர்கள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் கலந்துகொண்டு அறிக்கையிட முடியும். எனினும், சபா மண்டபத்திற்குள் புகைப்படமோ, வீடியோவோ எடுக்க முடியாது.
அத்துடன் நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்;ந்த பல ஊடகவியலாளர்கள் இந்த சட்டத்தினை மிகவும் சிறப்பாக பயன்படுத்துகின்றனர். அது போன்று வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களை சேர்ந்தவர்களும் இந்த சட்டத்தினை அதிகம் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது.
இது மிகவும் சந்தோசமான விடயமாகும். இந்த சட்டம் மக்களுக்காக கொண்டுவரப்பட்டது. இதனால் மக்களின் பங்குபற்றல் இன்றியமையாத ஒன்றாகும். இதன் அடிப்படையில் இச்சட்டத்தினை மக்கள் வினைத்திறனாக பயன்படுத்த முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.
Comments (0)
Facebook Comments (0)