பெருந்தோட்ட சிறுவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு ஜப்பான் ஆதரவு

பெருந்தோட்ட சிறுவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு ஜப்பான் ஆதரவு

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)”, திட்டத்தின் கீழ் மானிய உதவிக்கான ஒப்பந்தத்தில், அட்வென்டிஸ்ட் அபிவிருத்தி மற்றும் நிவாரண முகவர் அமைப்பின் (ADRA) இலங்கைக்கான பணிப்பாளர் மெத்தியு விட்டி உடன் நேற்று (15) வெள்ளிக்கிழமை கைச்சாத்திட்டிருந்தார்.

நுவரெலியாவில் மின்னாஹ் தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்ப பாடசாலை கட்டடங்களை மேம்படுத்துவதற்கு GGP ஊடாக ADRA க்கு 70,916 அமெரிக்க டொலர்களை மொத்தமாக ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

GGP திட்டத்தினூடாக மத்திய மாகாணத்தில் 19 செயற்திட்டங்களை ஜப்பானிய அரசாங்கம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. இவற்றினூடாக, தேயிலைப் பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் பின்தங்கிய சமூகத்தாரின் நலன்புரி மற்றும் மனிதப் பாதுகாப்பு போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பில் பிரதானமாக கவனம் செலுத்தப்படுகின்றது.

வைத்தியசாலைகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், நீர், கழிவறை வசதிகள் போன்றவற்றை மேம்படுத்துவது மற்றும் நடமாடும் நூலகங்களை நிறுவுவது போன்றவற்றை இந்தத் திட்டங்கள் கொண்டிருந்தன.

வாழ்க்கையில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படைக் கல்வியின் முக்கிய பங்கு தொடர்பில் தூதுவர் மிசுகொஷி குறிப்பிட்டதுடன், அரச முகவர் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றுடன் கைகோர்த்து, இலங்கையின் சுபிட்சம் மற்றும் உறுதித் தன்மைக்கு ஆதரவளிப்பது தொடர்பான அர்ப்பணிப்பை அவர் மீளுறுதி செய்திருந்தார்.

இந்த மானியத்தைப் பெற்றுக் கொண்டு, மெத்தியு விட்டி உரையாற்றுகையில்,:

“1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தப் பாடசாலை நிர்மாணிக்கப்பட்டதுடன், தற்போது 107 மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களில் பெருமளவானோர் பெருந்தோட்ட பணியாளர்களின் பிள்ளைகளாவர்.

இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது காணப்படும் பாடசாலைக் கட்டிடங்கள் மறுசீரமைக்கப்படுவதுடன், புதிய வகுப்பறைகளின் நிர்மாணம், புதிய புத்தகங்கள், தளபாடங்கள் மற்றும் நூலக முகாமைத்துவ கட்டமைப்பைக் கொண்ட நூலகம் போன்றவற்றையும் கொண்டிருக்கும்.

பாதுகாப்பான மற்றும் போதியளவு பயிலல் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்தப் பாடசாலையில் மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

சமூகத்தின் சகல மாணவர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் வளமான பாடசாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பிரதான நோக்காக அமைந்திருப்பதுடன், பாடசாலையில் அவர்களின் நலன் மற்றும் பயிலலை மேம்படுத்துவதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பாடசாலை மேம்படுத்தல் திட்டத்தை சாத்தியப்படுத்துவதற்கு ஜப்பானிய தூதரகம் மேற்கொண்டிருந்த பங்களிப்புக்கு ADRA நன்றியைத் தெரிவித்துள்ளது” என்றார்.