நீதி அமைச்சரின் தனியார் சட்ட திருத்த பத்திரம் சில அமைச்சர்களின் எதிர்ப்பால் நிராகரிப்பு

நீதி அமைச்சரின் தனியார் சட்ட திருத்த பத்திரம்  சில அமைச்சர்களின் எதிர்ப்பால் நிராகரிப்பு

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் சிபாரிசுகள் கிடைக்கும் வரை திருத்தம் செய்வதில்லை என ஜனாதிபதி தெரிவிப்பு

ஏ.ஆர்.ஏ.பரீல்

கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் நீதி­ய­மைச்சர் அலி சப்­ரி­யினால் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் சில திருத்­தங்கள் மேற்­கொள்­வ­தற்­காக சமர்ப்­பிக்­கப்­பட்ட அமைச்­ச­ரவைப் பத்­திரம் அமைச்­சர்கள் சிலரின் பலத்த எதிர்ப்­பி­னை­ய­டுத்து நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு தலைமை வகித்த ஜனா­தி­பதி கோட்டாபய ராஜ­பக்ஷ ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் சிபா­ரி­சுகள் கிடைக்கும் வரை முஸ்லிம் தனியார் சட்­டத்தில் எவ்­வித திருத்­தங்­க­ளையும் செய்­வ­தில்லை எனத் தெரி­வித்தார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் ‘விடி­வெள்ளி’ நீதி­ய­மைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்­ரியைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு கருத்து தெரி­வித்தார்.

"முஸ்லிம் திரு­மண சட்டம் தொடர்­பாக முஸ்­லிம்­க­ளுடன் பேசினேன். பல­தார மணம் முஸ்லிம் ஆண்­க­ளுக்கு சட்ட ரீதியில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. மலே­சியா போன்ற நாடு­க­ளிலும் இச்­சட்டம் அமுலில் உள்­ளது என்­பதை அமைச்­ச­ர­வையில் தெளி­வு­ப­டுத்­தினேன்.

‘காதி நீதி­மன்றம்’ முறை­மையை இல்­லா­தொ­ழிக்­காது ‘குடும்ப சம­ரசம்’ (Family Conciliate) என்ற பெயரில் இயங்கச் செய்ய வேண்டும். முஸ்லிம் ஆண்­க­ளுக்கு பல­தார மணம் கடு­மை­யான நிபந்­த­னை­க­ளுடன் அனு­ம­திக்­கப்­பட வேண்டும். குடும்ப சம­ர­சத்­துக்­கென ஆலோ­சனைச் சபை­யொன்று நிய­மிக்­கப்­பட வேண்டும்.

இங்கு தீர்க்­க­மு­டி­யாத பிரச்­சி­னைகள் மாவட்ட நீதி­மன்­றுக்கு அனுப்பி வைக்­கப்­பட வேண்டும் என்­பதே எனது அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் உள்­ள­டங்­கி­யி­ருந்­தன. பல­தார மணம் தொடர்­பாக குர்­ஆ­னிலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஏனைய பல நாடு­க­ளிலும் இச்­சட்டம் அமுலில் உள்­ளது.

எனவே பல­தார மணம் முஸ்லிம் ஆண்­க­ளுக்கு கடு­மை­யான நிபந்­த­னை­க­ளுடன் அனு­ம­திக்­கப்­பட வேண்­டு­மென அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அமைச்­சர்­க­ளான சரத் வீர­சே­கர, விமல் வீர­வங்ச, உத­ய­கம்­மன்­பில ஆகியோர் கடு­மை­யான எதிர்ப்பு வெளியிட்­டதால் அமைச்­ச­ரவைப் பத்­திரம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஜனா­தி­பதி செய­ல­ணியின் சிபா­ரி­சுகள் கிடைக்­கப்­பெற்­றதன் பின்பு அதன் அடிப்­ப­டை­யிலே திருத்­தங்கள் மேற்­கொள்­வ­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

நான் 2020ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­வது தொடர்பில் அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஒன்­றினைச் சமர்ப்­பித்­தி­ருந்தேன்.

அதில் முஸ்லிம் பெண்கள் திரு­மண வய­தெல்லை 18 ஆக நிர்­ண­யிக்­கப்­பட வேண்டும். திரு­மணப் பதிவில் மணப்­பெண்ணின் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். தாப­ரிப்பு பெற்றுக் கொள்ளல் மஜிஸ்­திரேட் நீதி­மன்­றினால் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

முன்னாள் நீதி­ய­மைச்சர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த குழுவின் சிபா­ரி­சுகள் முழு­மை­யாக அமுல் நடத்­தப்­பட வேண்டும், முஸ்லிம் பெண்கள் காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட வேண்டும் போன்­ற­னவே குறிப்­பிட்ட எனது அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் உள்­ள­டங்­கி­யி­ருந்­தன.

இத­னை­ய­டுத்து 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அமைச்­ச­ரவை உப குழு முன்­வைத்த பிரே­ர­ணைக்கு அமை­வாக முஸ்லிம் ஆண்­களின் பல­தார மணத்தை தடை செய்­வ­தற்கும், காதி நீதி­மன்ற முறை­மையை இல்­லாமற் செய்­வ­தற்கும், முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்­லையை 18 ஆக அதி­க­ரிப்­ப­தற்கும் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கும் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யது.

இந்­நி­லையில் முஸ்லிம் சமூ­கத்தில் இத்­தி­ருத்­தங்­க­ளுக்கு பலத்த எதிர்ப்பு வெளியி­டப்­பட்­டது. இதனால் பல பிரச்­சி­னைகள் உரு­வா­கலாம் என்­ப­தாலே கடந்த திங்கட்கிழமை சில திருத்­தங்­க­ளுக்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினைச் சமர்ப்­பித்தேன். இந்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரமே எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் நிரா­க­ரிக்­கப்­பட்­டது" என்றார்.

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பொதுமக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர நீதி­ய­மைச்சர் அலி ­சப்­ரியின் அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­துக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டார். "முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யான ஒரு சட்டம் இலங்­கையில் இருக்க முடி­யாது. அவர்கள் பொது­வான சட்­டத்தின் கீழேயே ஆளப்­பட வேண்டும். நாட்டில் பல சட்­டங்கள் இருக்க முடி­யாது. அனு­ம­திக்­கப்­பட முடி­யாது.

முகத்தை மூடி ஆடை அணி­வதை தடை செய்­வது குறித்து பிரான்ஸ் நாட்டில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. இத்­த­டைக்கு பெரும் எண்­ணிக்­கை­யானோர் ஆத­ரவு வழங்­கி­னார்கள். எமது நாட்டில் ஒரு சிலர் எதிர்க்­கி­றார்கள் என்­ப­தற்­காக இச்­சட்­டத்தை தொடர்ந்தும் அமுல்­ப­டுத்த முடி­யாது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற எண்­ணக்­க­ருவை நிறு­வு­வ­தற்­காக ஜனா­தி­பதி செய­ல­ணி­யொன்­றினை நிறு­வி­யுள்ள நிலையில் ஒவ்வோர் இனத்­துக்கும் விஷேட சட்­டங்­களை உரு­வாக்க முடியாது" என்று வாதிட்டார்.

இதேவேளை நாட்டில் முஸ்லிம்களின் கலை, கலாசாரம் என்பவற்றின் அடிப்படையில் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதில் தவறில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை இச்சட்டத்தில் மேலதிகமாக எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப் படக்கூடாது என அமைச்சர்களான உதயகம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச தெரிவித்தனர். இந்நிலையிலே நீதியமைச்சர் அலிசப்ரியின் அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டது.