நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றத்தில் TISL மனு தாக்கல்
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அதிகாரசபை சட்டமூலத்தை எதிர்த்து, நேற்று (ஜனவரி 22ஆம் திகதி) உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அச்சட்டமூலம் கடன் வழங்குனர்கள் அடித்தள மட்டத்தில் சுரண்டல் மற்றும் அதிக வட்டி அறவிடுதலில் ஈடுபடுவதற்கான நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான போதுமான தீர்வை முன்வைக்கவோ அல்லது ஒரு பொருத்தமான திட்டத்தை அறிமுகப்படுத்தவோ தவறிவிட்டதாக அது குறிப்பிடுகிறது.
இந்த சட்டமூலம் 2024 ஜனவரி 9ஆம் திகதி பாராளுமன்றத்தின் உத்தரவுப் பத்திரத்தில் முன்வைக்கப்பட்டது. TISL தனது மனுவில் (SC SD 14/2024) இந்த சட்டமூலமானது நியாயத்தன்மை,
விகிதாசார முறைமை, இயற்கை நீதி, அதிகாரப் பிரிப்பு மற்றும் தேவையான சட்ட உறுதிப்பாடு ஆகிய கொள்கைகளுக்கு இணங்கவில்லை என்றும், அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆவது பிரிவுகளுக்கு அமைய, அரசியலமைப்பின் 83 ஆவது பிரிவை மீறுவதாகவும் வாதிட்டுள்ளது.
நுண் நிதித் திட்டங்களில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள்/கடன் பெறுபவர்கள் எதிர்கொள்ளும் சுரண்டல் மற்றும் அதிக வட்டி அறவிடுதல் நடைமுறைகள் உட்பட பாலியல் சுரண்டல் / பாலியல் லஞ்சம், உடல், உள மற்றும் உணர்வு ரீதியான துன்புறுத்தல் மற்றும் மிரட்டல், கடன்களை வழங்குவதில் அதிக வட்டி விகிதங்களைப் பிரயோகித்தல் ஆகியவை அடங்கும்.
நுண்கடன் துறையில் ஆதிக்கம் செலுத்தும் உரிமம் பெற்ற வணிக வங்கிகள் அல்லது உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட குத்தகைக்கு விடும் தாபனம் போன்ற நிறுவனங்கள் இந்த மசோதாவில் சேர்க்கப்படவில்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், நுண்நிதி மற்றும் கடன் அதிகாரசபையின் உரிமம் இல்லாமல் பணக்கடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நபர்களைக் நியமிப்பது, ஒரு சாராருக்கு அல்லது ஒரு வகை பரிவர்த்தனைகளுக்கு விதிவிலக்குகளை அளிக்க அமைச்சரை அனுமதிப்பதன் மூலம், இந்த சட்டமூலத்திலுள்ள விதிகள் அத்துறை அமைச்சருக்கு நியாயமற்ற தனியுரிமையை வழங்குகின்றன என்று TISL மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் துறையை மோசமாகப் பாதித்திருக்கும் பரவலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், நுண்நிதி நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களையும் போதுமான அளவில் ஒழுங்குபடுத்த இந்தச் சட்டமூலம் தவறிவிட்டது என இம்மனு குறிப்பிடுகிறது.
அத்துடன், இந்த சட்டமூலத்தின் 65ஆவது பிரிவு, தகவலறியும் உரிமைச் சட்டம் 2016ஆம் ஆண்டின் 12வது இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பின் 14ஏ பிரிவை முற்றிலுமாக மீறும் வகையில் தகவல்களை மறைக்கும் ஆட்சிமுறையை உருவாக்க முயல்கிறது என மனு மேலும் குறிப்பிடுகிறது.
எனவே, இந்த சட்டமூலம் முழுமையாகவோ அல்லது அதன் ஒரு பகுதியாகவோ அரசியலமைப்பிற்கு முரணானது என்பதனை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க வேண்டுமென TISL இம்மனு மூலம் கோரிக்கை விடுக்கின்றது. இந்த வழக்கு நாளை ஜனவரி 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
Comments (0)
Facebook Comments (0)