மனிதன் மனிதாபிமானமுடையவனா?

மனிதன் மனிதாபிமானமுடையவனா?

வாழ்க்கையை துரத்துவோரும் வாழ்க்கையால் துரத்தப்படுவோரும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இயந்திர உலகத்தில் நவீனமயமாக்கப்பட்ட வாழ்க்கை முறையும் இலத்திரனியல் தகவல் பரிமாற்ற கலாசாரமும் மனித நேயப் பண்புகளை மனித வாழ்வியலில் இருந்து விலக்கி சிறுவர் பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான வன்முறை, போர் சூழல்களாலும் அனர்த்தங்களாலும் அகதிகளாக்கப்படல், சாதிவெறி, இனவெறி, மதவெறி, நிறவெறி என்று பல மனிதாபிமானமற்ற வெறியர்களால் உலகின் மனிதாபிமானம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்க மற்றொருபக்கம்  ஆகஸ்ட்-19, ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் மனிதாபிமான தினம் கொண்டாடப்பட்டுதான் வருகின்றது.

கடந்த 2019ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பீட்டின்படி, மனிதாபிமானமற்ற செயல்கள், அழிவுகள் இடம்பெறும் நாடுகளில் எமன் 80%னையும் சிரியாவில் 11.7 மில்லியன் மக்கள் மனிதாபிமான தேவையுடையவர்களாகவும்  இனங்காணப்பட்டனர்.

ஒவ்வொரு மனிதனும் மனிதநேய பண்புகளுடன் தான் பிறக்கின்றான், மனிதநேயப் பண்புடன் தான் வாழவேண்டும், வாழ்க்கையை நெறிப்படுத்த வேண்டும் என ஒவ்வொரு மதங்களும் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அப்பண்புகளோடு மனிதன் வாழ்கின்றானா?  என்பதை  ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடி சற்று சிந்தியுங்கள்.

இன்றைய நாகரிகமும், மனிதர்களுக்கு இடையிலான இனம், மதம், சாதி வேறுபாடும், இலத்திரனியல் பயன்பாடும் இதற்குத் தடையாக உள்ளன. பணமும் பட்டமும் பதவியும் மனிதநேயப் பண்புகளையும், மனிதனின் நடத்தையையும்  நிர்ணயிக்கின்ற அளவு கோளாக மாறி இருக்கின்றது என்பதே தற்கால உண்மையாகும்.

இதற்கு எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து சமூக வலைத்தளங்களிலும் எல்லோர் மனங்களிலும் பேசப்பட்டு வந்த ஒன்றுதான் மே மாதம் 25ஆம் திகதி “ஜாரஜ் பிளாய்ட்” என்ற கருப்பின இளைஞரை சந்தேகத்தின் பேரில் விசாரித்த பொலீஸ் அதிகாரி ஒருவர் அவரை தரையில் தள்ளி, கழுத்தை காலால் நசுக்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் எல்லோர் மனங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டன.

இன்னும் பல சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பேசப்படாமல் பல கருப்பினத்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டும் வருகின்றனர். அமெரிக்கா உட்பட இன்னும் ஒரு சில நாடுகளில் கருப்பினத்தவர்கள் தீண்டத் தகாதவர்களாகவே பார்க்கின்றனர். உணவகங்கள் போக்குவரத்து நிலையங்கள், பொழுதுபோக்கு இடங்கள் என எந்த பொது இடத்திலும் கருப்பினத்தவர்களுக்கென தனி இடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

அதனையே அவர்கள் பயன்படுத்த வேண்டும் அவ்வாறு மீறினால் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்குதல், கல்வி நிலையங்களில் கருப்பினர், வெள்ளையர் என நிறப் பாகுபாடு அமெரிக்காவில் எல்லா இடங்களிலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் வெள்ளையர்கள் தங்களது நிறவெறியை காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜாரஜ் பிளாய்டின் சம்பவத்திற்கு முன்னர், வெள்ளையர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து அதனை குறித்த சில அடையாளங்களுடன் கருப்பினர் ஒருவர் மீது பழி சுமத்தப்பட்டு, அந்த அடையாளத்தில் கருப்பினர் ஒருவர் கைது செய்யப்படும் போது தப்பித்ததால் கொல்லப்பட்டார்.

பின்னர் அப்பெண்ணின் மரணத்திற்கு அவரின் கனவரே காரணம் என்ற செய்தி உலக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு சில கருப்பினத்தவர்கள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த கருப்பினத்தவர்களும் ஒதுக்கப்படும் சந்தர்ப்பங்கள், அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்து கொலை செய்தல், தண்டனை வழங்கல், கொடுமைப் படுத்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

கடந்த 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஐரோப்பா மற்றும் அமெரிக்கர்களால் ஆபிரிக்க மக்கள் அகதிகளாக கொண்டு வரப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டனர். எத்தனையோ கருப்பினத்தவர்கள் அமெரிக்காவில் உலகம் பேசப்படும் மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதற்கு உதாரணங்களாக ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாகவும், முஹம்மது அலி, அமெரிக்காவின் குத்துச்சண்டை வீரராகவும், மனித உரிமைக்காக பேசப்பட்ட மார்ட்டின் லூதர் கிங், அமெரிக்காவின் டீயளந டீயடட குழுவின் பிரதித்தலைவராக இருந்திருக்கிறார்கள்.  

ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்தின் பின்னும் ஒரு கருப்பினத்தவர் துப்பாக்கியால் கொல்லப்பட்ட சம்பவமும் நடந்துதான் இருக்கின்றது. நாகரீகம் தலைவிரித்தாடும் நகர்ப்புறங்களில் வாழும் சிலருக்கு பக்கத்து வீட்டில் வாழும் நபர்கள் யாரென்று கூட தெரிவதில்லை அவர்களுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால் உதவுவதற்கு கூட மனம் இடம் கொடுக்காது நமக்கு எதற்கு வீண் பிரச்சனை என மன ரீதியில் தான் மனித நேயம் காணப்படுகின்றது.

தேவையுடையோருக்கு செய்யும் மனிதநேயப் பண்புகளும் இன்று சமூக வலைத்தளத்தில் பதிவுகளுக்காகத்தான் என்றாகிவிட்டது. இருந்தபோதிலும் மனிதன் தேடுகின்ற இலக்கையும், அடைந்து கொள்வதற்கான முயற்சிகளை அறிவுடனும், அனுபவத்துடனும் செயல்படுத்த உதவுகின்றது என்ற நிதர்சனத்தை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

இது போன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களை காணொளிகளாகவும், புகைப்படங்களாகவும் பதிவேற்றும் நாங்கள் அந்த நிமிடம் எம்மால் முடிந்த மனிதாபிமான செயலை செய்ய மறந்து விடுகின்றோம்.

எத்தனையோ காணொளிகளை பார்த்திருக்கின்றோம் அதற்கு சிறந்த உதாரணம் மேலே கூறப்பட்ட ஜார்ஜ் பிளாய்டின் கொடூர சம்பவத்தின் போது அங்கே இருந்தவர்கள் கானொளியாக பதிவு செய்தார்களே தவிர எவரும் அதைத் தடுக்க முன்வரவில்லை.

சம்பவத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து மக்களின் கருத்துக்களையும் எதிர்ப்புக்களையும் கோசங்களையும் சம்பவத்தின் பின்னர் பகிர்ந்தோமே தவிர கண்முன் இடம்பெறும் மனிதாபிமானமற்ற சம்பவங்களின் போது வேடிக்கை பார்க்கின்றோம். இதுதான் இன்றைய மனிதாபிமானம்.

விலங்குகளுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட கற்றறிந்த எம்மில் பலரிடம் இருக்கின்றதா என்பது கேள்விக் குறியேயாயினும், மனித நேயத்துடனும் ஒரு சிலர் இருக்கத்தான் நெய்கிறார்கள். இனம், மொழி, மதம், நிறம், சாதி கடந்ததுதான் மனிதநேயம்.

ஒவ்வொரு மனிதனும் மனித நேயத்துக்கு உரிய பண்புகளுடன் தான் பிறக்கின்றான் மனிதநேய பண்புகளுடன் தான் வாழ வேண்டும் என எல்லா மதங்களும் வழிகாட்டுகின்றன. ஒவ்வொரு மதத்தையும் அதன் சிந்தனைகளையும் தனது வாழ்க்கை நெறியாக கொண்டு ஒவ்வொரு மனிதனும் உலகிற்கு முன்மாதிரியாக தன்னையும் தனது எதிர்கால சந்ததியினரையும் சமூக வலைத் தளங்களுக்கும் நவ நாகரிகத்துக்கும் அடிமைப்பட்ட மனிதராய் மாறிவிடாமல் அவர்களை மனிதாபிமானியாய் வளர்ப்பதும் நம்மை அதற்கு மாற்றிக் கொள்ள முயற்சிப்பதும் எமது தார்மீகப் பொறுப்பாகும்.

S.Haleema
South Eastern University of Sri Lanka
"வழித்தடம்"
All University Muslim Student Association