வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் வெளிப்படைத் தன்மை குறைவு

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் வெளிப்படைத் தன்மை குறைவு

எட்வேட் உதயதாஸ்
வெரிட்டே ரிசர்ச்

ஒரு அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தில், உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்காக பெரும் தொகைப் பணத்தைச் செலவிடுகின்றது.

ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு அரசாங்கமும் தனது பதவிக்காலத்தில் பல்வேறுபட்ட சிறிய மற்றும் பாரிய உட்கட்டமைப்புச் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன. ஆனால், அவ்வாறு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை பேணப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

இவை தொடர்பில் பொதுமக்கள் எந்த அளவிற்கு விழிப்புணர்வோடு இருக்கின்றார்கள் என்று பார்த்தால், இது அரசாங்கத்தின் வேலை என்று பெரும்பாலானோர் கடந்து செல்வதுதான் நிஜம்.

வெளிப்படைதன்மையற்ற முடிவுகள் எடுக்கப்பட்டதும்  ஊழல் நிறைந்த திட்டங்களை பாரிய கடன் சுமைகளுடன் செயல்படுதியதும் தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த காரணிகளில் முக்கிய விடயங்களாக அமைகின்றன எனப் பொருளியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2016ம் ஆண்டின் 12ம் இலக்கத்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, 100,000 அமெரிக்க டொலருக்கு அதிகமாகவுள்ள வெளிநாட்டு நிதியுதவித் திட்டங்களை மையப்படுத்திய திட்டங்கள் மற்றும் ரூ. 500,000 க்கு அதிகமான தொகையைக் கொண்ட உள்ளூரில் நிதியளிக்கப்படும் திட்டங்கள் குறித்து  அவை தொடங்குவதற்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னதாக அதற்குப் பொறுப்பான அமைச்சர் முன்கூட்டியே தகவல்களை வெளிப்படுத்த வேண்டும்.

அதாவது, தகவல்கள் டிஜிட்டல் இலத்திரனியல் வடிவத்தில் அமைச்சின் இணையத்தளத்தில் தமிழ், சிங்களம் முடியுமானால் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட வேண்டும்.

பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த தகவல்களை முன்கூட்டியே வெளிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மற்றும் அரச முகவரகங்களுக்கு இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன்  உட்கட்டமைப்பு கருத்திட்டக் கண்காணிப்பான் (Infrastructure Watch) தகவல்களை வழங்குகின்றது.

2019ம் ஆண்டிற்கும் 2021 ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்  60 பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் குறிப்பாக, வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அவற்றின் வெளிப்படைத் தன்மை மிக மிகக் குறைவாகும்.

இந்த 60 திட்டங்களில் 5 திட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியவை. அவை தொடர்பான விபரங்களும் வெளிப்பாட்டுத்   தன்மையும் பின்வருமாறு:

1) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு 29,702 மில்லியன் ரூபா செலவில் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதும், கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் இணையதளத்தில் எந்தவிதத் தகவல்களும் காணப்படவில்லை.

2) நீர்ப்பாசன அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட 13,264  மில்லியன் ரூபா பெறுமதியான வடமராட்சி களப்பின் நீர்வளத்தை விருத்திசெய்து யாழ்ப்பாண குடாநாட்டிற்கு குடிநீர் வழங்கல் திட்டம் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

3) சுகாதார அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நெதர்லாந்து அரசாங்க நிதியுதவியில் 12,225 மில்லியன் ரூபா பெறுமதியான வட மாகாணத்தில் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி (DRIVE) திட்டம் தொடர்பில் 22 வீதமான  தகவல் வெளிப்பாட்டுத்திறன் பதிவாகியுள்ளது.

4)    நகர அபிவிருத்தி, கடலோரப் பாதுகாப்பு, கழிவுப்பொருள் வெளியேற்றம் மற்றும் துப்பரவு ஏற்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட 2,350 மில்லியன் ரூபா பெறுமதியான யாழ்ப்பாணம் நகர மண்டபத்தை புனரமைகும் திட்டம் தொடர்பில் 31 வீதமான தகவல் வெளிப்பாட்டுத்திறன் பதிவாகியுள்ளது.

5) கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட 1,280 மில்லியன் ரூபா பெறுமதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கொங்கிறீட் பெனல் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தொடர்பில் எவ்வித தகவல்களும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.

ஊழலற்ற, நேர்மையான அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுவதும்  அத் திட்டங்கள் தொடர்பான வெளிப்படுத்தன்மையும் மிக முக்கியமானதாகும்.

வருமானத்தை விட செலவினம் அதிகமாகவுள்ள இலங்கையின் பொருளாதாரச் சூழலில் ஊழலற்ற திட்டங்கள் பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் மிகவும் நன்மை பயக்கக்கூடியவை.