கிழக்கில் உள்ள அனைத்து தொல்பொருள் பிரதேசங்களையும் ஜனாதிபதி செயலணி பாதுகாக்கும்: பாதுகாப்பு செயலாளர்
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தொல்பொருள் பிரதேசங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
‘கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்தல்" தொடர்பாக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முதலாவது அங்குரார்ப்பன கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் மேற்படி செயலணியின் தலைவரான பாதுகாப்பு செயலாளர் தலைமையில் இன்று (10) புதன்கிழமை இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இலங்கையின் வரலாற்று பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்து வழங்குவதற்காக இன, மத மற்றும் பிற வேறுபாடுகளைக் களைந்து இலங்கையர்கள் என்ற அடிப்படையில் இந்த ஜனாதிபதி செயலணியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
"கிழக்கு மாகாணத்தில் எமது வரலாற்று தொல்பொருள் பிரதேசங்கள் பல காணப்படுவதுடன் அவை பல் வேறுபட்ட காரணங்களால் இன்று அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. குறித்த தொல்பொருள் தளங்களை அந்தந்த இன அல்லது மதங்களின் தொல்பொருள் பிரதேசங்களாக பாதுகாக்கவும் அவற்றை மீட்டெடுக்கவும் அரசாங்கம் விரும்புவதாக" அவர் தெரிவித்தார்.
மேற்படி வரலாற்று தொல்பொருள் பிரதேசங்களை மீட்டெடுத்தல் மற்றும் நிர்வகித்தல் நடவடிக்கைகளின் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து இனத்தைச் சார்ந்தவர்களுடனும் ஜனாதிபதி செயலணி நெருக்கமாக செயல்படும் என பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலணியின் பணிகளைத் திட்டமிடுதல் மற்றும் அவற்றை அமுல்படுத்தல் தொடர்பான பல்வேறு விடயங்கள் இந்த கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டன.
ஜனாதிபதி செயலணியின் கொள்கைக்கு அமைவாக ஒரே கூரையின் கீழ் செயற்படும் வகையில் தத்தமது அறிவுகளையும் பரஸ்பர ஒத்துழைப்புக்களையும் ஒன்றுபட்டு வழங்க மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளங் காணல், அடையாளம் காணப்பட்ட தளங்கள் மற்றும் தொல்பொருட்களைப் பாதுகாத்து மீட்டெடுப்பதன் மூலம் தொல்பொருள் பாரம்பரியத்தை நிர்வகிப்பதற்கான பொருத்தமான திட்டத்தை அடையாளம் கண்டு செயல்படுத்துதல், அத்தகைய தொல்பொருள் இடங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலத்தின் அளவை அடையாளம் காணுதல், அவற்றை முறையாகவும் சட்டபூர்வமாகவும் ஒதுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த தளங்களின் கலாச்சார மதிப்பைப் பாதுகாத்தல், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இலங்கையின் தனித்துவத்தை மேம்படுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் அத்தகைய பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல் ஆகியன 11 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி ஜனாதிபதி செயலணியின் முக்கிய பணியாகும்.
தொல்பொருள் தளங்களை பாதுகாக்க பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கையின்போது அந்தந்த தளங்கள் தொடர்பான அறிவு மற்றும் தகவல்கள் பெற்றுக் கொள்ள உள்ளூர் சமூகத்தின் ஒத்துழைப்பினை பெறுவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்:
கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே கண்டறியப்பட்ட தொல்பொருள் தளங்களை படிப்படியாக பாதுகாத்து பராமரிக்கும் அதேவேளை, இந்த பிரதேசங்களில் காணப்பபடும் ஏனைய தொல்பொருள் தளங்களை அடையாளங் காண்பதற்கு கிடைக்கக்கூடிய வளங்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதற்கும் அவர்கள் உடன்பட்டனர்.
குறித்த தளங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளின்போது நிலச்சரிதவியல் சார்ந்த தரவுகளை சேகரிப்பதன் மூலம் தொல்பொருள் தளங்களின் வெளிப்படையான தகவல்களைக் கொண்டதரவுத்தளத்தை உருவாக்குவதற்காக இந்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தொல்பொருள் சக்ரவர்த்தி எல்லாவல மேதானந்த தேரர், வடக்கு மற்றும் கிழக்கு மாகானங்களுக்கான பிரதம விகாராதிபதி பணாமுரே திலகவன்ச தேரர், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் பண்டார திசாநாயக்க, காணி ஆணையாளர் நாயகம் சந்திரா ஹேரத், நில அளவையியலாளர் நாயகம், ஏ எல் எஸ் சீ பெரேரா, பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவ, பேராசிரியர் கபில குணவர்த்தன, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன், கிழக்கு மாகான காணி ஆணையாளர் எச் ஈ எம் டப் ஜி. திசாநாயக்க, தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)