அம்பாந்தோட்டை துறைமுக தொழிற்துறை பூங்காவில் பாரிய முதலீடு
உலகின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான சீன ஷாங்டொங் ஹாஹுவா டயர் நிறுவனம் 300 அமெரிக்க டொலரை முதலீடு செய்து அம்பாந்தோட்டை துறைமுக தொழிற்துறை பூங்காவில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (19) கைச்சாத்திடப்பட்டது.
கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஷென்ஹொங் ஆகியோர் காணொளி மூலம் இணைந்துகொண்டனர்.
ஷாங்டொங் நிறுவனத்தினால் இந்த தொழிற்சாலையில் ரேடியல் டயர்கள், ட்ரக், பேருந்து மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கான அனைத்து வாகனங்களுக்குமான ரேடியர் டயர்கள் உற்பத்தி செய்யப்படும்.
ஒப்பந்தத்திற்கு அமைய 03 ஆண்டுகளுக்குள் உற்பத்தி செய்யப்படும் டயர்களை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும். ஷாங்டொங் தொழிற்சாலை அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் தொழிற்துறை பூங்காவில் 121 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், திட்டத்தின் முதலாவது கட்டத்தில் நிறுவனத்தினால் வருடாந்தம் 9 மில்லியன் டயர்களை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டு சபையின் தலைவர் சுசந்த ரத்நாயக்க மற்றும் ஷாங்டொங் காவோ மின்ஷெங் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.குறித்த ஒப்பந்தத்திற்கமைய முன்மொழியப்பட்ட திட்டத்தினூடாக இலங்கைக்கு பொருளாதார வாய்ப்புகள் பல கிட்டும். 300 அமெரிக்க டொலர் நேரடி முதலீடு, 250 மில்லியன் டொலர் நிலையான சொத்து உருவாக்கம், ஆண்டுக்கு 533.6 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாய் மற்றும் சுமார் 2 ஆயிரம் பிரதேசவாசிகளுக்கு நேரடி தொழில்வாய்ப்பு என்பன இதன் மூலம் ஏற்படுத்தப்படும்.
இந்த திட்டத்திற்கு அமைவாக தொழில் பயிற்சிக்காக 300 இலங்கையர்களை சீனாவிற்கு அனுப்புவதற்கு ஷாங்டொங் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய இரு நாடுகளுக்கும் இடையே திறன் அறிவு பரிமாற்றமும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தமானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இத்தால் 15 வருடங்களுக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 2005 சிந்தனை கொள்கைக்கு அமைய அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை நாட்டின் மற்றுமொரு பிரதான பொருளாதார வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்கம் இதன் மூலம் நிஜமாவதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்றைய நாள் வரை இலங்கையின் இரப்பர் பயிர்ச்செய்கை 136,000 ஹெக்டேயராக காணப்படுவதுடன், இந்த நவீன தொழிற்சாலை நிறுவப்படுவதன் ஊடாக வேலைவாய்ப்பிற்கு மேலதிகமாக இரப்பர் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோர் முதல் இரப்பர் பால் வெட்டுவோர் வரை அனைவருக்கும் பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார்.
கடந்த ஆண்டு இறப்பர் மற்றும் இறப்பர் சார்ந்த உற்பத்திகளின் ஏற்றுமதி வருவாய் சுமார் 900 மில்லியன் அமெரிக்க டொலர் என சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷ, 2024ஆம் ஆண்டளவில் இந்த தொகையை 4 பில்லியனை விட அதிகரிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என தெரிவித்தார்.
இந்த சூழலில், சீனாவின் மிகப்பெரிய தனியார் டயர் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஷாங்டொங் ஹாஹுவா டயர் நிறுவனம் போன்றதொரு நிறுவனம் இலங்கையை முதலீட்டு பங்காளராக தெரிவுசெய்துள்ளமை இலங்கைக்கு கௌரவமானதொரு விடயம் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, இது உலக முழுவதுமுள்ள நுகர்வோருக்கு நம்பகத்தன்மை வாய்ந்த பிராண்டாக விளங்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் இலக்கை அடைவதற்கு இதுவொரு சிறந்த ஆரம்பமாகும் என தாம் நம்புவதாக தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, அரசாங்கம் பிரதானமாக முன்னுரிமை வழங்கும் விடயங்களில் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட வர்த்தக அபிவிருத்தியும் ஒன்றாகும் என குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஷென்ஹொங், அம்பாந்தோட்டை தொழிற்துறை பூங்காவில் ஆரம்பிக்கப்படும் முதலாவது சீன திட்டம் இதுவாகும் என தெரிவித்தார்.
ஷாங்டொங் ஹாஹுவா டயர் நிறுவனம் அம்பாந்தோட்டையை முதலீடு செய்வதற்கு தெரிவுசெய்தமை சீன நிறுவனங்களின் இலங்கை மீதான நம்பிக்கையை பிரதிபலிப்பதுடன், அம்பாந்தோட்டை மற்றும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு சிறந்த எதிர்காலம் உண்டு என்பதற்கான சர்வதேச முதலீட்டாளர்களுக்கான முக்கிய சமிக்ஞையாக இது விளங்கும் என்று சீன தூதுவர் நம்பிக்கை வெளியிட்டார்.
சீனா மற்றும் இலங்கை இடையிலான நல்லெண்ண மற்றும் பரஸ்பர பிணைப்பு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் நிச்சயமாக பாரிய வெற்றியை ஈட்டித்தரும் என்றும் சீன தூதுவர் குறிப்பிட்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் ஷாங்டொங் ஹாஹுவா நிறுவனத் தலைவர் யெங் கெகியெங் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)