களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரமுயர்வு
களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட மருத்துவ பீடத்தின் மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சி அளிப்பதற்காகவே இந்த வைத்தியசாலை தரயமுயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச்.முனசிங்கவினால் கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2021.04.05ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானத்தின் படி, களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலை, போதனா வைத்தியசாலையாக மேம்படுத்தி மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ கற்கை பயிற்சி வசதிகளை வழங்குவதற்குத் தேவையான பேராசிரியர் அலகுகளை நிறுவுவதற்கு இந்த வைத்தியசாலை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலதிக மருத்துவ பயிற்சிக்காக ஹொரண மற்றும் பாணந்துறை ஆதார வைத்தியசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைக்கப்பட்ட மருத்துவ மாணவர்களின் மருத்துவ பயிற்சிகளுக்கான வசதிகளை வழங்கும் பொருட்டு இந்த மூன்று வைத்தியசாலைகளும் மேலும் மேம்படுத்தப்படவுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)