டளஸ் அணிக்கு எதிராக பொதுஜன பெரமுனவினால் நடவடிக்கை

டளஸ் அணிக்கு எதிராக பொதுஜன பெரமுனவினால் நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் செயற்படும் சுயாதீன அணிக்கு எதிராக அக்கட்சியினால் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் முதற் கட்டமாக பாராளுமன்ற குழுக்களிலிருந்து இந்த சுயாதீன அணியின் உறுப்பினர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும மற்றும் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் கடந்த பல வருடங்களாக உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

எனினும், கடந்த வாரம் சபாநாயகரினால் அறிவிக்கப்பட்ட புதிய குழுவில் அவர்கள் இருவருமில்லை. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் நாலக கொடகேவ ஆகிய பாராளுமன்ற நிதிக் குழுவிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கோப் குழுவின் பெயர்ப் பட்டியல் அடுத்த வாரம் சபாநாயகரால் பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது. இந்த குழுவின் முன்னாள் தலைவரான பேராசிரியர் சரித ஹேரத், புதிய குழுவின் உறுப்பினராகக் கூட நியமிக்கப்படவில்லை.

இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட டளஸ் அழகப்பெரும தலைமையிலான சுயாதீன அணியினர் ஓரங்கட்டப்படுவது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிற்கு முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும கடிதமொன்றை எழுதியுள்ளார்.

இந்த ஓரங்கட்டல் நடவடிக்கையின் பின்னால் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.