துருக்கியினால் இலங்கைக்கு மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு

துருக்கியினால் இலங்கைக்கு மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு

துருக்கிய அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரகால மருந்துகள் மற்றும் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் ஏனைய மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது.

ஃபில்காஸ்ட்ரின் ஊசி அடங்கிய முதல் தொகுதி சரக்கு விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு 2022 ஆகஸ்ட் 14ஆந் திகதி இலங்கையின் சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் பெற்றுக் கொள்ளப்பட்டது.

2022 ஆகஸ்ட் 17ஆந் திகதி துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு மற்றும் துருக்கி - இலங்கை நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவர் அஹ்மத் ஹம்டி காம்லி ஆகியோருடனான சந்திப்பின் போது, தாராளமான நன்கொடை மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் வழங்கப்பட்ட ஒற்றுமைக்காக, துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் எம். ரிஸ்வி ஹாசன், துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகன் மற்றும் துருக்கிய அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

ஏனைய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் 2022 ஆகஸ்ட் 17ஆந் திகதி துருக்கியின் இஸ்மித் கடல் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு செப்டம்பர் 2022 நடுப்பகுதியில் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் நிலைமை குறித்து விளக்குவதற்காக 2022 மே மாதம் நடைபெற்ற துருக்கி-இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவர் அஹ்மத் ஹம்டி காம்லி மற்றும் துருக்கியின் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் போது தூதுவர் ஹாசன் விடுத்த வேண்டுகோளை அடுத்து, இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவுவது குறித்து பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, துருக்கியின் வெளியுறவு அமைச்சுடன் ஒருங்கிணைத்து, துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனின் ஒப்புதலுடன் மருத்துவச் சரக்குகளை அனுப்புவதை துருக்கியின் சுகாதார அமைச்சு துரிதப்படுத்தியது.