ஆழ்கடல் தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் உதவிக் கோரிக்கை
பாறுக் ஷிஹான்
கொரோனா அனர்த்தம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக ஆழ்கடல் கடற்றொழில் நடவடிக்கைகள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவித்தனர். தற்போது ஒரு மாதகாலமாக கடலுக்கு செல்லாமல் பல்வேறு சிரமங்களை தாம் எதிர்கொண்டுள்ளதாகவும், அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது ,மாளிகைக்காடு, நிந்தவூர், ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் மற்றும் திருக்கோவில் என குறித்த ஆழ்கடல் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனால் தமது பாரிய படகுகளை நிறுத்தி வைப்பதற்கு இடமின்றி கனரக இயந்திரத்திற்கு ஆயிரக்கணக்கான பணங்களை செலவிட்டு கடற்கரையோரங்களில் இழுத்து நிறுத்தி வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலையுடன் தெரிவித்தனர்.
இச்செயற்பாட்டினால் ஆழ்கடல் தொழிலில் ஈடுபடும் படகும் பகுதி அளவில் சேதமடைவதுடன் கரையோரங்களில் கருவாட்டுத் தொழில் செய்வோர் இடவசதி இன்மையினால் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை அம்பாறை ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் மணல் மூடியுள்ளதுடன் அவை அகற்றப்படாமையினால் தினமும் மட்டக்களப்பு, வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று பாரிய படகுகளை கடந்த காலங்களில் நிறுத்தி வைத்தனர்.
எனினும் தற்போது கொரோனா அனர்த்தம் பரவி வருவதனால் மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதுடன், வாழைச்சேனை பகுதிகளில் அதிகளவில் கோரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனால் அங்கு தமது படகுகளை கொண்டு சென்று நிறுத்துவதில் சிரமம் உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளில் பயணிக்கும் மீனவர்கள் தமது கடற்றொழில் செயற்பாடுகளுக்கு வேறு மாவட்டங்களின் துறைமுகங்களை பயன்படுத்துவதாயின் தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் அவசியமாகும் என கடற்றொழில் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அனுர ஜயசேகர தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஒலுவில் மீன் பிடி துறைமுகத்தின் செயற்பாடுகள் இன்மையினால் அம்பாறை மாவட்டத்திலிருந்து புறப்படும் ஆழ்கடல் படகுகள் மட்டக்களப்பு, வாழைச்சேனை மீன்பிடி துறைமுகங்களை பயன்படுத்தி வந்திருந்தமை சுட்டிக்காட்டத்த்ககது. அம்பாறை மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் ஆழ்கடல் படகுககள் 14 மற்றும் 18 நாட்கள் கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். காற்றின் வேகம், நீரோட்டம் வழமைக்கு மாறாக உருவாகி உள்ளமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் ஏற்கனவே போடப்பட்ட ஒரு சில மீனவர்களின் வலைகள் கடல் கொந்தளிப்பு காரணமாக கடலோடு சென்ற நிலையில் தமது தொழிலை நிறுத்தி வைத்துள்ளனர்.
தொழில் இன்மை காரணமாக ஒரு சில மீனவர்கள் பழுதடைந்த தங்களது படகுகள் வலைகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. இதேநேரம் அண்மைக்காலமாக மீனவர்கள் கடலரிப்பு, கடல் கொந்தளிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமது தொழிலை இழந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாதிக்கப்பட் ட மீனவர்கள்,
"அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரதான கடற்றொழில் இறங்குதுறையாக ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் காணப்படுகின்றது. அத்துறைமுகத்தின் நுழைவாயில் கடந்த சில மாதங்களாக மண்ணால் மூடப்பட்டுக் காணப்படுவதால் மீனவ சமூகம் பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. அத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளும் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதுடன் கடந்த காலத்தில் கூட கரையோர மாவட்ட மீன கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்கள் சங்கம் கல்முனை சாய்ந்தமருது மாளிகைக்காடு மீனவர் அமைப்புகள் என்பன இணைந்து கடற்றொழிலுக்கும் செல்லாது வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.
எனினும் இவ்விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அதற்குத் தீர்வாக மணலை அகழ்வதற்குக் கப்பல் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தும் மணல் அகழ்வு உரிய முறையில் இடம்பெறவில்லை" என குற்றஞ்சாட்டுகின்றனர். இது தவிர கடலில் தத்தளிக்கும் படகுகளில் இரு படகுகள் கடலில் மூழ்கியுள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் 300க்கு மேற்பட்ட படகுகள் தற்போது துறைமுக வசதி இன்மையினால் கடலில் தத்தளித்து கொண்டு இருக்கின்றன. ஆழ்கடல் மீனவர்கள் ஒன்றரை மாதங்களாக தொழில் இல்லை. வாழ்வாதார வசதிகளும் வழங்கப்படவில்லை.
இவ்வாறு மீனவர்களின் தத்தளிக்கின்ற படகுகளை ஒலுவில் மற்றும் வாழைச்சேனை துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. எனவே "வாழ்வாதாரத்தையும் எமது கடற் பொருட்களையும் பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கம் ஜனாதிபதி, பிரதமர், கடற்தொழில் அமைச்சர் உதவ வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் 23 ஆயிரம் மீனவர்கள் வாழ்கின்றனர். இவர்களில் 10 ஆயிரம் பேர் ஆழ்கடல் மீனவர்களாவர். கடற்தொழில் பருவங்கள் தற்போது நிறைவடைந்துள்ளமையினால் கடலில் தத்தளிக்கின்ற படகுகளை ஒலுவலில் துறைமுகத்தில் நிறுத்தி வைப்பதற்கு கொண்டு செல்ல முடியாது உள்ளது.
காரணம் துறைமுகத்தை சுற்றி மண் மூடி காணப்படுவதாகும். இந்த ஒலுவில் துறைமுகத்தினை தோண்டுவதில் அரசியல் செய்யப்படுகின்றது. இதனால் மட்டக்களப்பு, வாழைச்சேனை துறைமுகத்தை நம்பி அங்கு சென்றால் கொரோனாவினால் போகமுடியாதுள்ளது.
ஆனால் மக்களுக்கு இந்த அரசாங்கத்தில் நம்பிக்கை உள்ளது. எனவே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கும் வரை தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்" என கோரிக்கை விடுக்கின்றனர்.
Comments (0)
Facebook Comments (0)