அதிகார துஷ்பிரயோகத்தால் இழக்கப்படும் அரச வளங்கள்
றிப்தி அலி
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், தனது அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து மாகாணத்திலுள்ள நான்கு உயர் அதிகாரிகளை எந்தவித அங்கீகாரமுமற்ற போலி விருதினை பெறுவதற்காக அரச வளங்களைப் பயன்படுத்தி இந்தியா செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கான தாபன விதிக் கோவையினை மீறியே அரசியல் செல்வாக்கு மூலம் நியமிக்கப்பட்ட ஆளுநரினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அது மாத்திரமல்லாமல், கிழக்கு மாகாணத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு விஜயம் தொடர்பில் 2014.06.13ஆம் திகதி அப்போதைய ஆளுநரின் செயலாளரான கே. சிவானந்தனினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தின் பிரகாரம், வெளிநாட்டு வளப் பிரிவு, ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் அபிவிருத்தி பங்காளர்கள் ஆகியோரினாலேயே மாத்திரம் கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில் வழங்க முடியும்.
இவ்வாறான நிலையில் எந்தவித அங்கீகாரமுமற்ற 'பிஸினஸ் குளோபல் இன்டர்நெஷனல் அவார்டிங் செரமனி' எனும் போலி நிறுவனத்தினால் இந்தியாவின் சென்னையில் நடத்தப்பட்ட விருது விழாவில் கலந்துகொள்வதற்காக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண பதில் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் ஆகிய நான்கு பேருக்கும் கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத அனுமதி வழங்கியுள்ள விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரியவந்துள்ளது.
தவறாகப் பயன்படுத்தப்பட்ட அரச வளங்கள்
பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளரே தற்போது கிழக்கு மாகாண பதில் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுகின்றார். இவர்களின் பிரயாணச் செலவு கொடுப்பனவாக ஒரு நாளைக்கு 40 அமெரிக்க டொலர்கள் வீதம் ஆறு நாட்களுக்கும் 240 அமெரிக்க டொலர்கள் ஒருவருக்கு கிழக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்னாயக்கவின் அனுமதியுடன் மேற்படி நான்கு அதிகாரிகளுக்கும் மொத்தமாக 960 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் அன்றைய இலங்கை ரூபா பெறுமதி 3 இலட்சத்து 55 ஆயிரத்து 113 ரூபா மற்றும் 60 சதமாகும். எனினும் இவர்களின் விமானப் பயணச்சீட்டுக்கான பணத் தொகை யாரால் செலுத்தப்பட்டது என்பது இன்று வரை கேள்விக்குரியாகவே உள்ளது.
இதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்திற்கு சொந்தமான EP PF-2511 இலக்க வாகனம் திருகோணமலையிலிருந்து விமான நிலையம் சென்று வருவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
போலி நிறுவனத்தின் போலி விருது
கடந்த ஓக்டோபர் 15ஆம் திகதி இந்தியாவின் சென்னை நகரில் நடைபெற்ற 'பிஸினஸ் குளோபல் இன்டர்நெஷனல் அவார்டிங் செரமனி' மேற்படி நான்கு அதிகாரிகளுக்கும் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டுள்ளது.
சிவில் மற்றும் கல்வி நிர்வாகத் துறையுடன் நேரடியாக தொடர்புபட்டவர்களுக்கு வியாபார பெயருடனான நிறுவனமொன்றினால் விருது வழங்கப்பட்டதன் மூலம் குறித்த விருது தொடர்பில் பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது.
இந்த விருதிற்கு பதிவுசெய்வதற்காக தன்னிடம் 35 ஆயிரம் ரூபா பணம் கோரப்பட்டதாக இந்த விருதிற்கு தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் எமது புலனாய்வுத் தேடலின் போது தெரிவித்தார்.
குறித்த நபருடன் இணைந்து கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த நான்கு அரச உத்தியோகத்தர்களுக்கும் விருது வழங்கப்பட்டதாக பிஸினஸ் குளோபல் இன்டர்நெஷனல் அவார்டிங் செரமனியின் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
www.bgiaward.org எனும் இந்த அமைப்பின் உத்தியோகபூர்வ இணைத்தளத்தளத்தில் 6/17, சிமித் வீதி, நியர் ஈ.ஏ அவனியூ, எக்ஸ்பிரஸ் அவனியூ, ஹாபார்ட் ஸ்குல் ஒப்போசிட், சென்னை, தமிழ் நாடு எனும் இந்திய முகவரி குறிப்பிடப்பட்டிருந்தாலும், குறித்த இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படங்கள் அனைத்திலும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே காணப்படுகின்றனர்.
இந்தப் புகைப்படங்களில் காணப்படும் இலங்கையின் மூதூர் பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவரினால் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் எந்தவித சட்ட அங்கீகாரமுமில்லாத ஐந்து அமைப்புக்களினாலேயே மேற்படி நான்கு அரச அதிகாரிகளும் இந்த விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிஸினஸ் குளோபல் இன்டர்நெஷனல் அவார்டிங் செரமனிக்கு இந்திய அரசாங்கத்தினாலோ, தமிழ் நாட்டு அரசாங்கத்தினாலோ எந்தவித சட்ட அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இலங்கையினைச் சேர்ந்த ஒருவரினால் இந்திய முகவரியினை பயன்படுத்தி இந்த போலி விருது சென்னையில் வழங்கப்பட்டு வருகின்ற விடயம் இதன் ஊடாக அம்பலமாகின்றது.
அது மாத்திரமல்லாமல், கடந்த ஓக்டோபர் 15ஆம் திகதி நடைபெற்ற விருது வழங்கல் தொடர்பான எந்தவொரு புகைப்படங்களும் குறித்த நிறுவனத்தின் இணையத்தளத்திலோ, பேஸ்புக் பக்கத்திலோ இன்று வரை பதிவேற்றப்படவில்லை.
இவ்வாறான நிலையில் மேற்படி போலி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட போலி விருதினைப் பெறுவதற்காக குறித்த நான்கு அரச அதிகாரிகளுக்கும் 2022.10.12ஆம் திகதி முதல் 2022.10.19ஆம் திகதி வரையான எட்டு நாட்களுக்கு கடமை விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.
பிரதம செயலாளரின் பதில்
"சர்வதேச அமைப்பொன்றின் மூலம் எமது மாகாணத்தின் நான்கு அதிகாரிகளின் உத்தியோகபூர்வ கடமைகளை பாராட்டி வழங்கப்படும் விருது என்பதால், அவர்களின் சென்னை விஜயத்திற்கு மாகாண ஆளுநர் அனுமதி வழங்கினார்" என கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்னாயக்கவினால் வழங்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதிற்காக மேற்படி உத்தியோகத்தர்களினால் விண்ணப்பிக்கப்பட்டு உரிய அமைப்பினால் தேர்;ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அதிகாரிகளை விருது பெற ஊக்குவிப்பதன் மூலம் உத்தியோகத்தர்களின் திறமை, உற்பத்தித் திறன், ஆர்வம், சுயமரியாதை, வேலை திருப்தி போன்றவற்றை அங்கீகரித்து அவர்களிடமிருந்து மாகாண சபைக்கு பெற்றுக்கொள்ளும் வேலையின் தரம் நீண்ட கால அடிப்படையில் உயரும் என மாகாண பிரதம செயலாளர் மேலும் தெரிவித்தார்.
ஆளுநரின் அசமந்தம்
இதேவேளை, குறித்த நிகழ்விற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதை தொலைபேசி ஊடாக பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை.
எவ்வாறாயினும், "இந்த விஜயம் தொடர்பிலான ஆவணங்கள் எதுவுமில்லை" என கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு இந்த விஜயம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட தகலறியும் விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக தேவையற்ற செலவுகளை குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
மூடிமறைக்க முயற்சி
இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த மேற்படி நான்கு அரச அதிகாரிகளின் தனிப்பட்ட நலன்களுக்காக பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாகாண பிரதம செயலாளர் ஆகியோர் உடந்தையாக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எவ்வாறாயினும், இந்த சட்டவிரோத விஜயத்தினை மூடி மறைக்கும் பணியில் தற்போது கிழக்கு மாகாணத்திலுள்ள சில உயர் அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.
தகவலறியும் சட்டம் புறக்கணிப்பு
இவ்வாறான நிலையில், குறித்த விஜயம் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆவணங்களைப் பெறும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம், மாகாண பிரதம செயலாளர் அலுவலகம், மாகாண சுகாதார அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் மாகாண விளையாட்டுத் திணைக்களம் ஆகியவற்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகலறியும் விண்ணப்பங்களிற்கு முழுமையான பதில்கள் வழங்கப்படவில்லை.
அதுமாத்திரமல்லாமல், குறித்த விண்ணப்பத்தில் கோரப்பட்ட ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அத்துடன் மாறுபட்ட வெவ்வேறு பதில்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நான்கு அரச அதிகாரிகளுக்கும் மொத்தமாக 160 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாக மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் குறிப்பிடுகின்ற நிலையில் மாகாண விளையாட்டுப் பணிப்பாளருக்கு மாத்திரம் 240 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாக மாகாண விளையாட்டுத் திணைக்களம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதுபோன்று விண்ணப்பங்களில் கோரப்பட்ட சில விடயங்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றினை வழங்குவதற்கு 2016ஆம் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 5 (1) (அ) பிரிவின் கீழ் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்திற்கு இன்று வரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை.
இவ்வாறு தகவல்களை வழங்காமை, தகவல்களை மூடி மறைக்க முயற்சிக்கின்றமை மற்றும் போலித் தகவல்களை வழங்கியமை ஆகியவற்றின் அடிப்படையில் மேற்படி ஐந்து அரச நிறுவனங்களுக்கு எதிராக தகவலறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)