அரசியலில் இறங்கும் நோக்கமில்லை: விமுக்தி குமாரதுங்க
அரசியலில் களமிறங்கும் நோக்கமில்லை எனவும் அதற்கு எவ்வித விருப்பமும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வாரன சிரேஷ்ட வைத்தியர் விமுக்தி குமாரதுங்க தெரிவித்தார்.
பிரபல அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரது மகன் அரசியலில் பிரவேசிக்க இருப்பதாக கடந்த தினங்களில் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
இந்த செய்தி தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் விமுக்தி குமாரதுங்க மேலும் தெரிவிக்கையில்,
"இந்த செய்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இச்செய்தியில் உண்மை இல்லை என்பதை இங்கே உறுதியாக அறிவிக்க விரும்புகிறேன். கடந்த 21 வருடங்களாக ஐக்கிய இராச்சியத்தில் ஒரு கால்நடை வைத்தியராகவும் கால்நடை கண் மருத்துவத் துறையில் விஷேட நிபுணத்துவ பயிற்சியிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறேன்.
நான் பிறந்த எனது தாய் நாட்டை நேசிக்கிறேன். எனது தனிப்பட்ட இயலுமையினால் எனது தாய் நாட்டிற்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் பற்றி, அத்துறையில் முன்னோடியாக இருப்பது பற்றி நான் சிந்திக்கின்றேன்.
இருப்பினும் இலங்கையின் அரசியலில் பிரவேசிப்பது தொடர்பில் எனக்கு எவ்வித விருப்பமும் இல்லை என்பதை இங்கே தெளிவாக பதிவு செய்ய விரும்புகிறேன். கௌரவமான, தனிப்பட்ட ஒரு வாழ்க்கையை நடத்திச் செல்லவே இதுவரை நான் முயன்றுள்ளேன். எனவே அந்த கௌரவத்தை பாதுகாத்துத் தருமாறு இலங்கை ஊடகங்களிடமும் மக்களிடமும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)