Apesalli.lk எனும் இணையத்தளம் அறிமுகம்
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களில் கொவிட்-19 தொற்றுப்பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊழல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது, ஊழலுக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்ற போது ஊழலின் பாதகமான விளைவுகள் மக்களை மிக மோசமாக பாதிக்கிறது.
2021ஆம் ஆண்டை பொறுத்த வரையில் இலங்கையில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையும் நிலவுகின்ற இந்த இக்கட்டான தொற்றுப்பரவல் காலப்பகுதியில் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இயன்றளவு கொண்டு நாடாத்த முயல்கின்ற இவ்வேளையில், ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் ஏராளமாக அதிகரித்துள்ளன.
இந்த விடயத்தினை பின்னணியாகக் கொண்டு TISL நிறுவனமானது ஊழலுக்கெதிரான சர்வதேச தினமான கடந்த 9ஆம் திகதி இவ்விடயத்தினை முன்னிலைப்படுத்தி அடையாளப்படுத்துகிறது.
நாட்டின் பொது வளங்களை தவறாக பயன்படுத்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனமானது இவ்வாண்டின் ஊழலுக்கெதிரான சர்வதேச தினத்தின் கருப்பொருளாக “Ape Salli” அல்லது “எமது பணம்” எனும் விடயத்தினை தேர்ந்தெடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் கருத்து தெரிவிக்கையில் “ஊழல் ஓர் நோயாக இருப்பின் வெளிப்படைத்தன்மை அதன் மத்திய சிகிச்சைப் பகுதியாகும்” என குறிப்பிட்டார். முன்னாள் பொதுச் செயலாளர் குறிப்பிட்டது போல் ஊழலுக்கு எதிராக இந்த வெளிப்படைத்தன்மை எனும் சிகிச்சையை ஊக்குவிப்பதற்காகவே TISL நிறுவனம் இன்று Apesalli.lk எனும் இணையத்தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஊழலுக்கெதிரான சமூக செயற்பாட்டிற்கான பொதுமக்களின் தளமாகும்.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்திடம் ஊழலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாட்டினை மேற்கொள்ள Apesalli.lk எனும் இணையத்தளமானது நாட்டு மக்களுக்கு உதவுகிறது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் சரிபார்த்து உறுதி செய்ததைத் தொடர்ந்து, முறைப்பாட்டினை மேற்கொண்டவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து TISL நிறுவனமானது ஆலோசனைகளை வழங்கும்.
அதேபோல் அன்றாட வாழ்வில் ஊழலுடன் தொடர்புடைய சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவ்வாறான சம்பவங்களை அவதானித்தவர்கள் தங்களது அனுபவத்தினை இத்தளத்தினூடாக ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளவும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கவும் மற்றும் குறித்த சம்பவம் தொடர்பில் பொதுவில் விவாதிக்கவும் பொதுமக்களால் முடியும்.
மேலும் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் காலங்களில் பொதுச் சொத்துக்கள் தவறாக பயன்படுத்துதல் போன்ற தேர்தலுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பிலும் Apesalli.lk இணையத்தளத்தினூடாக பொதுமக்களால் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
மேலும் Apesalli.lk இணையத்தளதினூடாக நாட்டின் எந்த பகுதியில் எவ்வகையான ஊழல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்வையிடவும் ஊழல் சம்பவங்களுடன் தொடர்புடைய புள்ளிவிபரங்களை பெற்றுக்கொள்ளவும் இணையத்தள பாவனையாளர்களுக்கு Apesalli.lk வாய்ப்பளிக்கிறது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊழல்கள், அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் மற்றும் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய ஓர் தொகுப்பாக “Hindsight 2021” என்ற அறிக்கையினை TISL நிறுவனம் வெளியிடுகிறது.
இவ் அறிக்கையானது குறித்த ஊழல் மற்றும் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்துகிறது.
ஊழலுக்கெதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான நதிஷானி பெரேரா கருத்து தெரிவிக்கையில்,
“இந்த ஆண்டில் மிகவும் முக்கியமான பல விடயங்கள் நடந்துள்ளது. அதாவது இந்த ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய வரி விலக்கு, அவசரமாக நிறைவேற்றப்பட்ட கொழும்பு துறைமுக நகரின் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், சீனி இறக்குமதி மோசடி, உரக் கொள்வனவு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான பல ஊழல் மோசடிகள் இந்த ஆண்டு நடைபெற்ற சில முக்கியமான சம்பங்களாகும்” என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எவ்வாறாயினும், முடிவுகள் எடுக்கும் போது அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் காணப்பட்டிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளை தடுத்திருக்கலாம் அல்லது குறைத்திருக்கலாம்.
பொது மற்றும் தனியார் துறைகளின் செயற்பாடுகளில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது மிக முக்கியமாகும். அதுமாத்திரமின்றி, இடம்பெறுகின்ற ஊழல் தொடர்பிலான சம்பவங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பில் பொதுமக்களும் தெரிந்திருக்க வேண்டும்.
இவ்வாறு நடைபெறுமாயின், அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பொறுப்புக்கூறலுக்கான அவசியத்தினை பொதுமக்கள் கோருவதற்கும் வழிவகுக்கும்” என குறிப்பிட்டார்.
நாட்டு மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி முன்னேற்றகரமாக செலுத்தப்பட்டு வரும் இவ்வேளையில் பல தசாப்தங்களாக நாட்டைப் பீடித்துள்ள ஊழல் தொற்றுக்கு எதிராக நாமும் செயற்படுவோம் எனும் நிலைப்பாட்டில் ஒன்றிணைவோம். ஊழலானது நாட்டின் தேவையான அபிவிருத்திகளை தடுப்பதனால் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பட்டியலில் எமது நாட்டினை தொடர்ந்தும் தேக்கி வைத்துள்ளது.
ஊழலுக்கெதிரான சர்வதேச தினத்தினை அடையாளப்படுத்தும் வகையில், எமது நாட்டில் நடைபெறும் ஊழல் சம்பவங்களுக்கு எதிராக எழுச்சி பெறுமாறு பொது, தனியார் மற்றும் சமூக அங்கத்தவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் அதேவேளை ஊழலுக்கு எதிரான பொதுமக்களின் செயற்பாடுகளை இலகுபடுத்தும் கருவியாக TISL நிறுவனம் Apesalli.lk எனும் இணையத்தளத்தினை அறிமுகப்படுத்துகிறது.
Comments (0)
Facebook Comments (0)