பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்ட பின்னரே நிகாப் தடை அமுல்: அமைச்சரவை பேச்சாளர்
பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்ட பின்னரே நிகாப் மற்றும் புர்காவிற்கான தடை நாட்டில் அமுல்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளரான ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு கருதி நிகாப் மற்றும் புர்கா உட்பட முழு முகத்தினையும் மூடுவதற்கு தடை விதிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் 'சூம்' தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எவ்வாறாயினும் "இந்த தடை எப்போதிருந்து அமுலாகும்" என ஊடகவியலாளரொருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல பதலளிக்கையில்,
"இந்த அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இது தொடர்பான சட்ட மூலம் சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட சட்ட மா அதிபரின் அனுமதிக்கு அனுப்பப்படும்.
அதன் பின்னர், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்ட மூலமாக்கப்படும். இதனையடுத்து இந்த தடை நாட்டில் அமுல்படுத்தப்படும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)