ஸஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீமுக்காக வீடு நிர்மாணிக்க நிதி சேகரிக்கும் சிங்கள சகோதரர்கள்
ஸஹ்ரான் ஹாசிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து உடலின் ஒரு பகுதி செயலிழந்த நிலையில் வாழ்ந்து வரும் மாவனெல்லையைச் சேர்ந்த ராஸீக் முஹம்மத் தஸ்லீமின் குடும்பத்திற்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்கு ‘தஸ்லீமுக்கு வீடு’ எனும் தலைப்பில் பேஸ்புக் மூலமான நிதி சேகரிப்பு திட்டம் ஒன்றை சில சிங்கள சகோதரர்கள் இணைந்து ஆரம்பித்துள்ளனர்.
ஹஸித ஹேவாவசம் மற்றும் அனுரங்க திலிகா ஓவிடிகல ஆகிய இருவர் இணைந்து ஆரண்யா பவுண்டேசனின் பெயரில் இந்த நிதி திரட்டும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.
10,896 அமெரிக்க டொலர்களை (20 இலட்சம் ரூபா) சேகரிப்பதை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் பேஸ்புக் மூலமாக இன்று காலை வரை 256 பேரின் பங்களிப்பினால் 5,066 அமெரிக்க டொலர்கள் (950,000 ரூபா) சேகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் ஏற்கனவே இத்திட்டத்திற்கென கிடைக்கப்பெற்ற 4 இலட்சம் ரூபா நிதியைக் கொண்டு, வீட்டுக்கான அத்திவாரமிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜுன் முதல் வாரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தஸ்லீம், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளின் கரங்களால் அடிக்கல் நடப்பட்டது. சுமார் 35 இலட்சம் ரூபா செலவில் குறித்த வீட்டினை முழுமையாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த மே மாதம் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களான துலான் கொடிகார மற்றும் நுவான் குமாரகே ஆகியோர் இணைந்து தஸ்லீமின் குடும்பத்தின் எதிர்கால நலன்கருதி இது போன்றதொரு நிதி சேகரிப்புத் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.
இதன் மூலம் 8,947 அமெரிக்க டொலர் நிதி சேகரிக்கப்பட்டிருந்தது. இதில் தஸ்லீமின் 3 பிள்ளைகளினதும் பெயர்களில் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு தலா 1 இலட்சம் ருபா வைப்பிலிடப்பட்டது. மிகுதிப் பணம் 16 இலட்சத்து 30 ஆயிரத்து 200 ரூபா தஸ்லீமின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டது.
மேற்படி நிதியையும் உள்ளடக்கியே தஸ்லீமின் குடும்பம் வசிப்பதற்கென புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸஹ்ரான் குழுவினரால் மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் தாக்கப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதில் பொலிசாருடன் இணைந்து செயப்பட்டமைக்காக, மேற்படி தீவிரவாதக் குழுவினர் 2019 மார்ச் 9 அன்று தஸ்லீமை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்திருந்தனர்.
அதிகாலை வேளையில் வீட்டினுள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த தஸ்லீம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இக்கொலை முயற்சியிலிருந்து அவர் உயிர் தப்பிய போதிலும் தலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக அவரது உடலின் இடது பக்க பகுதி செயலிழந்துள்ளதுடன் பிறரது உதவியின்றி நடமாட முடியாத நிலையிலும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையிலும் அவர் வாழ்ந்து வருகிறார்.
இதன் காரணமாக தாம் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக தஸ்லீம் குறிப்பிடுகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் ‘விடிவெள்ளி’க்கு வழங்கி செவ்வி ஒன்றில் முஸ்லிம் சமூகத்திற்காகவும் நாட்டிற்காகவும் தான் செய்த தியாகத்திற்காக யாசகம் கேட்கும் நிலைக்கு தன்னைத் தள்ளிவிட வேண்டாம் என அவர் வேண்டுகோள்விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே தஸ்லீமினதும் அவரது குடும்பத்தினதும் நலனைக் கருத்திற் கொண்டு சிங்கள சகோதரர்கள் சிலர் முன்வந்து இந்த நிதி சேகரிப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இத்திட்டத்திற்கு இதுவரை நிதிப் பங்களிப்புச் செய்தவர்களில் பெரும்பாலானோர் சிங்களவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில் சகோதரர் தஸ்லீமின் குடும்பத்திற்கென வீடொன்றை நிர்மாணிப்பதற்கு முன்னெடுக்கப்படும் இந்த நிதியுதவித் திட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர் கீழுள்ள பேஸ் புக் பக்கம் மூலமாகவோ அல்லது வங்கிக் கணக்கிலக்கம் மூலமாகவோ தமது உதவிகளை வழங்க முடியும். Vidivelli
https://www.facebook.com/donate/666530757264700/10158332323883290/
Aranya.lk
121261003366
Sampath Bank Super Branch Gampaha
Phone : +9470 2 79 79 59
Email – aranyalk.sl@gmail.com
Comments (0)
Facebook Comments (0)