இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு யுனிசெபின் ஊடாக ஜப்பான் நன்கொடை

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு யுனிசெபின் ஊடாக ஜப்பான் நன்கொடை

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்கு உதவும் நோக்கில் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ மையங்களில் காணப்படுகின்ற கடுமையான மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக யுனிசெபினூடாக கொள்வனவு செய்யப்பட்ட 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மொத்த நன்கொடையில் முதல் பங்கை ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.

இந்த முக்கிய உதவியானது குழந்தைகள, கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் அத்தோடு குறிப்பாக அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய சில பகுதிகளுக்கான சுகாதார சேவைகளை வழங்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

கொள்வனவு செய்யப்பட்ட மருந்து வகைகளானது இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகியினால் யுனிசெபின் இலங்கைப் பிரதிநிதி எம்மா ப்ரிகம் மூலமாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளிக்கப்பட்டது.

"இலங்கைக்கான உயிர்காக்கும் மருந்துகளுக்கான அவசரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக யுனிசெபின் ஆதரவின் மூலமாக இந்த இக்கட்டான தருணத்தில் முதல் பங்கான அத்தியாவசிய மருந்துகளை உரிய நேரத்தில் ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளமை எமக்கு கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதமாகும்.

தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க இந்த உதவி மில்லியன் கணக்கான பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரையும் சென்றடையும் என்பதை நாங்கள் நம்புகிறோம்" என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்  மிசுகோஷி ஹிடேயாகியினால் தெரிவிக்கப்பட்டது.

சுகாதார வைத்திய அதிகாரியின ; கீழ் இயங்கும் மருத்துவ விநியோக பிரிவு ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படும் மருந்துகளின் கையிருப்பு குறைந்து வருவதனை அடிப்படையாக கொண்டு கடுமையாக பாதிக்கப்படக்கூடிய அதிக ஆபத்துள்ள பிரதேசங்களை இலக்காக கொண்டு மருந்துகள் விநியோகிக்கின்றது.

"நாட்டில் தற்போது நிலவுகின்ற சவாலான நேரத்தில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு முக்கியமாக தேவைப்படுகின்ற உயிர்காக்கும் ஆதரவை வழங்குவதன் மூலம் இலங்கைக்கான யுனிசெப்பின் வேண்டுகோளுக்கு பதிலளித்ததற்காக ஜப்பான் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டிருகிறோம்.

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய சமூக சேவைகளின் வரையரைகளை நீடிக்கின்றது மற்றும் இது போன்ற உதவிகள் மற்றும் நிவாரணங்களை கொண்டுவர உதவும்" என யுனிசெப் பிரதிநிதி எம்மா தெரிவித்தார்.

2.3 மில்லியன் குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 5.7 மில்லியன் மக்கள் வறுமை, தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய சுமைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யுனிசெப் தற்போது இலங்கைக்கு அவசர உதவி கோரி உலகளாவிய ரீதியில் வேண்டுகோளை முன்வைத்துள்ளது. ஜப்பான் அரசாங்கம் உட்பட அபிவிருத்தி பங்காளர்கள் மிகவும் தேவையான துணையுடன் பதிலளித்துள்ளனர்.