2021 கனடா தினத்தையொட்டி கனேடிய உயர்ஸ்தானிகரின் செய்தி
கனேடியர்கள் அனைவருக்கும் இலங்கையிலுள்ள எமது நண்பர்களுக்கும் கனடா தின வாழ்த்துகள்!
பெருந்தொற்று, மற்றும் கனடாவின் அண்மைய நிகழ்வுகளின் மத்தியில், இந்த வருடத்தில் உத்தியோகப்பூர்வ கொண்டாட்டங்களை நாம் கைவிடுவதுடன், அதற்குப் பதிலாக நினைவுகூர்வதற்கான தருணமாக காண்கின்றோம்.
கனடாவிலும் உலகெங்கிலும் வாழும் கனேடியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து வீட்டிலோ அல்லது உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கமைவாகவோ அனுஷ்டிப்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பெருந்தொற்று ஆரம்பித்தது முதல் கடும் சிரமங்களுக்கு மத்தியில், நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கக் கூடிய பல விடயங்களும் உள்ளன. உலகெங்கிலும் முன்னெடுக்கப்பட்ட அசாதாரண முயற்சிகளின் மூலம், வினைத்திறன்மிக்க தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன.
மேலும், அவை அனைவராலும் அணுகக்கூடியவையான உள்ளன. இது விரைவில் மீள்வதற்கான பாதையில் பயணிப்போம் என்ற நம்பிக்கையைத் தருகிறது. வெவ்வேறு விகிதங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுவதானது உலகளாவிய சமூகத்திற்கு சவால்களைத் தோற்றுவித்துள்ளது.
நாம் அனைவரும் தடுப்பூசியைப் பெறும் வரை எந்த நாடும் உண்மையிலேயே பாதுகாப்பாக இல்லை. கனடாவில் தடுப்பூசி முயற்சிகளை நாங்கள் தொடர்கின்ற அதேநேரம், இலங்கை உட்பட உலகளாவிய தேவைகளுக்கும் நாங்கள் ஒரே நேரத்தில் பதிலளிப்பதுடன் அங்கு கொவிட்டுக்கு பதிலளிப்பதற்கான தடுப்பூசிகள், பொருட்கள் மற்றும் உதவிகளை நாங்கள் வழங்குகிறோம்.
இவற்றில் பெரும்பாலானவை உலகெங்கிலும் உள்ள பங்காளர்களின் ஆதரவை நம்பியுள்ளன, அதற்காக நாங்கள் அவர்களுக்கு நன்றி கூறுகிறோம். கனடா தினம் கடந்த ஆண்டையும், நமது வரலாற்றையும், முன்னோக்கிச் செல்லும் பாதையையும் மீட்டிப் பார்ப்பதற்கான ஒரு நல்ல நேரமாகும்.
முன்னாள் கம்லூப்ஸ் மற்றும் மரீவல் வதிவிடப் பாடசாலையைச் சூழ இதயத்தை உருக்கும் நூற்றுக்கணக்கான அடையாளங் காணப்படாத கல்லறைகளின் கண்டுபிடிப்பு மற்றும் ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஒன்டாரியோ, லண்டனில் முஸ்லிம் குடும்பம் ஒன்று படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட கவலைதரும் இன வெறியின் அதிகரிப்பு என்பன கனடா என்றால் என்ன, எப்படி இருக்க வேண்டும் என்று பரிசீலிக்குமாறு கனேடியர்களுக்கு சவால் விடுத்துள்ளன.
இந்த சம்பவங்கள் மற்றும் எங்களது பல சக பிரஜைகளின் வாழ்வியல் யதார்த்தம், அதன் குடிமக்கள் அனைவரும் சம பங்கு வகிக்கக் கூடிய அனைவரையும் உள்ளடக்கிய கனடா எனும் எங்கள் இலக்கை அடையச் செய்ய உழைக்க வேண்டியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
கனடா முழுவதிலும் உள்ள பழங்குடி மக்கள் நீண்ட காலமாக பாகுபாடு மற்றும் பிரதிகூலங்களை எதிர்கொண்டுள்ளனர், இது துக்கமும் வேதனையும் நிறைந்த நமது வரலாற்றின் ஒரு பகுதி என்பதை நாம் புரிந்து கொள்ளவும் அதிலிருந்து கற்றுக் கொள்ளவும் வேண்டும்.
நினைவுகூருதல் உட்பட உயிர் தப்பியவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் ஆதரிப்பதில் கனடா உறுதிபூண்டுள்ளது. மேலும் கனடா முழுவதிலும் உள்ள பழங்குடி மக்களுடன் நல்லிணக்கத்தின் பாதையில் பயணிப்பதற்கான அதன் நிலைப்பாட்டில் உறுதியுடன் உள்ளது.
இனவெறி மற்றும் வெறுப்பு எங்கள் எந்தவொரு சமூகத்திலும் இல்லை. மேலும் அனைவரின் நலனுக்காகவும் வரவேற்கத்தக்க மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய கனடாவை உருவாக்க எங்களுக்கு கூட்டாக சக்தி உள்ளது.
கனடாவின் மிகப் பெரிய பலத்தை கொண்டாடும் நாளாக கனடா தினம் உள்ளது. அதன் மக்களையே இன்று நாம் காணும் துடிப்பான, பன்மைத்துவமிக்க, கனடா அதன் பழங்குடி மக்களின் நீண்ட வரலாற்றிலிருந்து ஆரம்பமானது.
கனேடியர்கள் இப்போது பெருமையுடன் தங்கள் வேர்களை உலகம் முழுவதும் கண்டறிகின்றனர். அவர்களின் மாறுபட்ட கதைகள் மற்றும் அனுபவம், நம் நாட்டுக்கு அதிகளவு பங்களிப்புச் செய்கின்றது. இலங்கை உட்பட உலகம் முழுவதிலுமிருந்து குடியேறியவர்களை - நிரந்தர குடியிருப்பாளர்கள், மாணவர்கள், அகதிகள் - நாங்கள் தொடர்ந்து வரவேற்கிறோம்.
உலகின் மிகப் பெரிய இலங்கை வம்சாவளியை, குறிப்பாக தமிழ் சமூகத்தை கனடா கொண்டுள்ளது என்பதில் பெருமிதம் கொள்கிறோம். அத்துடன் பெரிய மற்றும் ஆற்றல் மிக்க சிங்கள மற்றும் இலங்கை முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் கனடா கொண்டுள்ளது.
எமது நீண்டகால உறவின் மையமாக மக்களிடமிருந்து, மக்களுக்கான உறவு உள்ளது. இதில், பொருளாதார, உத்தியோகப்பூர்வ மற்றும் கல்வி தொடர்புகளும் உள்ளடங்குகின்றன.
இலங்கையைச் சுற்றி நான் பயணிக்கையில், அன்பான வரவேற்பளித்தமைக்கும் மற்றும் பலர் தங்கள் கதைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்தற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
புரிந்துகொள்வது என்பது நம்முடைய சுயத்தை சவாலுக்குட்படுத்தக்கூடிய கருத்துக்களைச் செவிமடுப்பது மற்றும் திறந்த மனதுடன் இருப்பது பற்றியதாகும். அப்போதுதான் நம்முடைய பொதுவான மனிதநேயத்தைக் கண்டறிந்து நமது சவால்களுக்கு நீடித்த தீர்வுகளைத் தேட முடியும்.
எதிர்வரும் மாதங்களில், மீண்டும் சிறப்பாக கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு கிடைக்கும். மனித உரிமைகளுக்கான மரியாதையை ஊக்குவிப்பதற்கும், உள்ளடக்குவதற்கும், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும், பெண்களை வலுவூட்டுவதற்கும் தொற்றுநோயால் அதிகரித்த வறுமையின் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய மேலும், சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் புதுமையான மற்றும் நிலையான வழிகளைக் கண்டறியவும் கனடா இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும்.
இந்தப் பணி சமூகத்தின் சகலருக்கும் நன்மைகளைத் தர வேண்டும். இந்த பகிரப்பட்ட நோக்கங்களை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்துடனும், எங்கள் பல பங்காளர்களுடனும் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்த்துள்ளேன்.
கனடா தின வாழ்த்துகள்!
Comments (0)
Facebook Comments (0)