அடுத்த தொகுதி அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகள் சனிக்கிழமை வரவுள்ளன: ஜப்பான் தூதுவர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகாவிடம் (Yoshihide Suga) தனிப்பட்ட முறையில் முன்வைத்த கோரிக்கையின் பேரில், ஜப்பான் அரசாங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளின் அடுத்த தொகுதி, எதிர்வரும் சனிக்கிழமை (07), நாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளன என்று, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அக்கிரா சுகியாமா (Akira Sugiyama) தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 31) நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளை, ஜனாதிபதியிடம் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் போதே, ஜப்பான் தூதுவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கான அஸ்ட்ரா செனெக்கா இரண்டாவது அலகு தடுப்பூசித் தேவைப்பாடுகளுக்காக, ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை குறித்து விசேட கவனம் செலுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்து, ஜப்பான் பிரதமரின் தலையீட்டின் பேரில், இந்த 1.456 மில்லியன் தடுப்பூசிகளை இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டதாக தூதுவர் அக்கிரா சுகியாமா தெரிவித்தார்.
இதன் முதல் தொகுதியான 728,460 தடுப்பூசிகள், ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான UL-455 விமானத்தின் மூலம், கட்டுநாயக்க விமான நிலயத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.
மேல் மாகாணத்தில் நேற்று (01) முதல் தெரிவு செய்யப்பட்ட 20 மத்திய நிலையங்களில், இந்தத் தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற சில மணித்தியாலங்களுக்குள், தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுதல் மற்றும் இலங்கையின் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள், அதற்கு ஜனாதிபதி வழங்கிவரும் தலைமைத்துவம் தொடர்பில், ஜப்பான் தூதுவர், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் நிறுவனங்களின் இலங்கைப் பிரதிநிதிகள், பெரிதும் பாராட்டியுள்ளனர்.
கடந்த மே மாதமளவில், தனிப்பட்ட முறையில் ஜப்பான் தூவரிடம் தான் முன்வைத்த கோரிக்கைக்குச் சாதகமாகப் பதிலளித்து, அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளை அன்பளிப்புச் செய்தமை குறித்து, இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் விசேட நன்றியை, ஜப்பான் பிரதமருக்கும் ஜப்பான் அரசாங்கத்துக்கும், ஜப்பான் தூதுவருக்கும், ஜனாதிபதி தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதி அலக்கா சிங் (Alaka Singh), யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி எமா பிரிகம் (Emma Brigham), ஜப்பான் தூதுவராலயத்தின் முதல் செயலாளர் ஷிஹாரு ஹோசியாய் (Chiharu Hoshiai), இரண்டாவது செயலாளர் செய்யா நினோமியா (Seiya Ninomiya), ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
Comments (0)
Facebook Comments (0)