முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்; எத்தனை காலம் இழுத்தடிப்பது?
இன்றைய காலகட்டத்தில் நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மாத்திரமன்றி அனைத்து தரப்பினராலும் பரவலாக பேசப்படுகின்ற ஒரு விடயம் தான் முஸ்லிம் திருமண மற்றும் விவகாரத்து திருத்தச் சட்டமாகும்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதியான ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று முஸ்லிம் பெயர் தாங்கிகளான பயங்கரவாதிகளினால் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலினால் சுமார் 250 பேர் கொல்ல்ப்பட்டதுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.
இதனை அடுத்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு வகையான பிரச்சினைகள் இனவாதிகளினால் திட்டமிட்டு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அம்சமாக தற்போது நாட்டிலுள்ள முஸ்லிம் திருமண மற்றும் விவகாரத்து சட்டத்தினை இல்லாமலாக்க வேண்டும் என்ற முன்னெடுப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற தொனிப்பொருள் சிங்கள மக்கள் மத்தியில் இன்றைய கால கட்டத்தில் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொனிப்பொருளின் ஊடாக முஸ்லிம் திருமண மற்றும் விவகாரத்து சட்டம் உட்பட முஸ்லிம்களுக்கு என்று பிரத்தியோகமாகவுள்ள அனைத்து சட்டங்களையும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனினும், சிங்கள மக்களுக்கான கண்டிய சட்டம் மற்றும் தமிழ் மக்களுக்கான தேசவழமை சட்டம் ஆகியன தொடர்பில் எந்தவித பேச்சுமில்லை. இதனால் குறித்த செயற்பாடு முஸ்லிம்களுக்கு எதிரானதொரு விடயமாகவே அவதானிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் தற்போது அமுலிலுள்ள முஸ்லிம் திருமண மற்றும் விவகாரத்து சட்டம் 1951ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டதாகும். எனினும் 1954, 1955, 1965, 1969 மற்றும் 1975 ஆகிய ஆண்டுகளில் இந்த சட்டமூலத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் இந்த சட்டமூலம் மிகவும் பழமை வாய்ந்தது எனவும் இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முஸ்லிம் சமூகத்தினால் பல்வேறு கோரிக்கைகள் தொடர்;ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் கடந்த 2009ஆண்டு நீதி அமைச்சராக செயற்பட்ட மிலிந்த மொரகொடவினால், அப்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் (தற்போது ஓய்வுநிலை) சலீம் மர்சூப் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இதில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, அதன் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.முபராக், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, நீதியரசர் ஏ.டப்ளியூ.ஏ.சலாம், கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, போராசிரியர் ஜெஸீமா இஸ்மாயில், சட்டத்தரணிகளான நத்வி பஹுவூதீன், சபானா பேகம் உள்ளிட்ட 18 பேர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்படடனர்.
பல்வேறு வகையான போராட்டங்களுக்கு மத்தியில் சுமார் ஒன்பது வருடங்களின் பின்னர் இந்த குழுவின் அறிக்கை கடந்த 2018 ஜனவரி 22ஆம் திகதி நீதி அமைச்சர் தலதா அதுகோரளவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
எனினும் இந்த அறிக்கையின் சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் நடவடிக்கையின் போது இந்த குழுவில் பிளவு ஏற்பட்டது. இதற்கமைய ஓய்வுபெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவினரால் ஒரு வகையான சிபாரிசுகளும், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையிலான குழுவினால் இன்னொரு வகையான சிபாரிசுகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த இரண்டு தரப்பினருடைய வௌ;வேறுபட்ட சிபாரிசுகளும் நீதி அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையில் உள்ளிடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த அறிக்கையின் சிபாரிசுகளை சட்டமாக்குவதில் நீதி அமைச்சு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியது.
இதனால் குறித்த அறிக்கை தொடர்பில் பரிந்துரையொன்றினை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் விவகார அமைச்சின் ஊடாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை நீதி அமைச்சர் தலதா அதுகோரள கோரியிரிந்தார்.
இதனையடுத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பில் இதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து கடந்த பல மாதங்களாக பேச்சு நடத்தி வந்தனர்.
இந்த சமயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஆலோசனையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசிற்கு ஆதரவாகவே பெரும்பாலான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வந்தமையும் முக்கிய விடயமாகும்.
இவ்வாறான நிலையில் நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதலினை அடுத்து முஸ்லிம் திருமண மற்றும் விவகாரத்து சட்டத்தினை ஒழிக்கும் நடவடிக்கையினை சில இனவாத சிந்தனை கொண்ட மாற்று மத பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இதன் ஒரு அங்கமாக, முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையினை 18ஆக நிர்ணயித்தல் தொடர்பான தனிநபர் சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் தயாராகினர்.
இதனை அறிந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த ஜுலை 11ஆம் திகதி அவசரமாக பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடி இந்த விடயத்தில் முக்கியமான தீர்மானமொன்றை மேற்கொண்டனர்.
1. ஆண், பெண் என்ற வேறுபாடின்றி அனைவரினதும் வயதெல்லை 18ஆக காணப்பட வேண்டும்
2. மணமகளின் ஒப்புதலை பெறுவதற்காக திருமண பதிவு பத்திரத்தில் அவரும் கையொப்பமிடல்
3. பெண் காதி நீதிபதிகளை நியமித்தல்
4. காதி நீதிபதியின் தகைமையினை சட்டத்தரணியாக தரமுயர்த்தல்
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இதன்போது நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த தீர்மானங்கள் ஓய்வுபெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரின் சிபாரிசுகளில் உள்ளடங்கியிருந்தவையாகும்.
இந்த கூட்டத்தில் முஸ்லிம் விவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர். முஸ்லிம் திருமண மற்றும் விவகாரத்து திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்த சிபாரிசுகளுடனான அமைச்சரவை பத்திரமொன்றினை நீதி மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு ஆகியன இணைந்து விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கு முன்னர் குறித்த அமைச்சரவை பத்திரம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு வழங்கப்படவுள்ளமை முக்கிய விடயமாகும்.
இவ்வாறான நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு உலமாக்கள் உட்பட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பாரிய எதிர்ப்பினை வெளியிட்டது.
அதனுடன் மாத்திரம் நின்றுவிடாது சில உலமாக்கள் பகிரங்கமாக சமூக ஊடங்களில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக விமர்ச்சித்தனர். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் நேரடியாக தொடர்புபட்ட சில உலமாக்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, ஜம்இய்யதுல் உலமாவினை தர்மசங்கடத்திற்குள்ளாக்கும் நிலைக்கு கொண்டுசென்றது.
பல்வேறு துருவங்களாக காணப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரு கொடையின் கீழ் கொண்டு வந்த பெருமை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவையும், அதன் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தியையுமே சாரும்.
நாட்டில் பாரிய சக்கியாக காணப்படும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு இந்த தீர்மான விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தி, தீர்வு காண்பதற்கு முன்னரே சமூக ஊடகங்கள் வாயிலாக சில இளம் உலாமாக்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான பிரசாரத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, ஜம்இய்யதுல் உலமாவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி ஆங்கில மொழி மூலம் அதன் செயலாளரினால் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானிற்கு அனுப்பப்பட்டதாக போலியான கடிதமொன்று தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டன.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (ஜுலை 22) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கும் இடையில் அதன் தலைமையகத்தில் முக்கிய கூட்டமொன்று இடம்பெற்றது.
இதன்போது, இந்த கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு எதிரான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா செயற்பாட்டினை பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கடுமையாக விமர்ச்சித்ததுடன் இந்த தீர்மானம் தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதனையடுத்து அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், பைஸர் முஸ்தபா மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் றிஸ்வி ஆகியோரைக் கொண்ட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது.
இந்தக் குழுவின் சிபாரிசுகள் எதிர்வரும் ஜுலை 29ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன்னர் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது. எவ்வாறாயினும், முஸ்லிம் திருமண மற்றும் விவகாரத்து திருத்தச் சட்டத்திற்கான பரிந்துரை விடயத்தில் கால இழுத்தடிப் போதும். சில தனிநபர்கள் மற்றும் குழுக்களின் தேவைக்காக இன்னும் கால நேரத்தினை இழுத்தடிக்கப்படக் கூடாது.
இஸ்லாமிய சட்டம் அமுலில் இல்லாத நாட்டில், இஸ்லாமிய சட்டத்தினைப் போன்று நாட்டுச் சட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என உலமாக்களே தெரிவித்து வருகின்றனர்.
இது போன்று இந்த முஸ்லிம் திருமண மற்றும் விவகாரத்து திருத்தச் சட்ட விடயத்திலும் நாட்டின் தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு அனைவரும் தரப்பினரும் இணைந்து சிறந்த தீர்மானத்தினை மேற்கொண்டு திருத்தச் சட்டமூலத்திற்கான பரிந்துரைகளை சமர்ப்பித்து விரைவில் சட்டமாக்க வேண்டும்.
இதனையே இலங்கை வாழ் முஸ்லிம் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
-றிப்தி அலி-
Comments (0)
Facebook Comments (0)