மனித – யானை மோதலை குறைக்க என்ன வழி?
றிப்தி அலி
இலங்கை, பல்லூயிர் பெருக்கத்தின் முக்கிய இடம் என சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக இந்த சொர்க்கத் தீவு பாரிய அளவிலான காடழிப்புக்கு இரையாகி வருகின்றது.
எமது நாட்டின் பரப்பளவில் சுமார் 30 சதவீதம் அதாவது 19 இலட்சத்து 93 ஆயிரம் ஹெக்டயர் காடுகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாக்கப்பட்ட பகுதிகள் வனச் சட்டம், தேசிய மரபுரிமை மற்றும் காட்டு (வன) நிலச் சட்டம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களின் ஊடாக இக்காடுகள் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்தச் சட்டங்கள் கடந்த பல தசாப்தங்களாக அமுலிலுள்ள போதிலும், 1990ஆம் ஆண்டுக்கும் 2000ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 26 ஆயிரத்து எட்நூறு ஹெக்டயர் காடுகளை இலங்கை இழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
முறையற்ற அபிவிருத்தித் திட்டங்கள், வர்த்தக செயற்த்திட்டங்கள், சட்டவிரோத நில அபகரிப்பு மற்றும் பயிர்ச்செய்கை ஆகியனவே காடழிப்பிற்கான முதன்மையான காரணங்களாக உள்ளன.
இவ்வாறு, காடுகள் அழிக்கப்படுவதனால் அங்குள்ள விலங்குகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள் வரட்சியான சூழல் விலங்குகளின் உணவுத் தேவையினை மேலும் அதிகரித்துள்ளது.
இதனால், காடுகளில் வாழும் விலங்குகள் உணவு தேடி மனிதர்கள் வாழும் இடங்களை நோக்கி நகர்கின்றன. இவ்வாறு இடம்பெயர்கின்ற விலங்குகளில் பிரதானமானதாக யானை காணப்படுகின்றது.
இதன் காரணமாகவே மனித – யானை மோதல் ஏற்படுகின்றது. இந்த பிரச்சினை மனித, யானை சனத்தொகையில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் இதுவொரு நீண்ட காலப் பிரச்சினையாகக் காணப்படுகின்றது.
எனினும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு இதுவொரு புதிய விடயமாக காணப்படுகின்றது.
இந்த மாவட்டங்களில் மக்கள் செறிந்து வாழுகின்ற சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, நிந்தவூர், அட்டாளைச்சேனை காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, செங்கலடி, வெல்லாவெளி, புல்லுமலை, தாந்தாமலை, போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, வாகரை, கிரான் போன்ற பல கிராமங்களை நோக்கி தற்போது யானைகள் படையெடுக்கின்றன.
"நெல் அறுவடையினை அடுத்தே மேற்படி பிரதேசங்களை நோக்கி யானைகள் அவற்றின் உணவுகளைத் தேடி நகர்கின்றன. குறிப்பாக புத்தங்கல காட்டுப் பகுதியிலுள்ள யானைகள் வளத்தாப்பிட்டியின் ஊடாகவே அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களை நோக்கிச் செல்கின்றன" என சூழலியல் ஆய்வாளர் சுபுன் லஹிரு பிரகாஷ் தெரிவித்தார்.
இது போன்றே மட்டு. மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியிலிருந்தும் யானைகள் மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி நகர்கின்றன.
"இந்த நுழைவாயில்களை மூடி யானைகளின் வருகையினை தடுத்தால், குறித்த யானைகள் உணவின்றி காட்டுக்குள் உயிரிழக்க நேரிடும்" என ஆய்வாளர் சுபுன் கூறுகின்றார்.
கடந்த சில வருடங்களாகவே இப்பிரதேசங்களை நோக்கி வரும் யானைகள், பொதுமக்களின் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கின்றன. இதனால் பாரியளவினால் நஷ்டங்கள் ஏற்படுகின்றன.
எனினும், மிகச் சிறிய தொகையான நஷ்டஈடே இந்த அழிவுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது.இப்பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு மனித – யானை மோதல் புதிய பிரச்சினையாக தோன்றியுள்ளது.
இம்மோதலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார வேலி அமைக்கும் நடவடிக்கையின் கீழ் 2016ஆம் ஆண்டு வரை 4,211 கிலோ மீற்றர் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
எனினும், இத்திட்டம் நாடாளவிய ரீதியில் இன்னும் முற்றுப் பெறவில்லை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைக்கு 82.5 கிலோ மீற்றர் மின்சார வேலிகளே அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 103 கிலோ மீறறருக்கு மின்சார வேலிகள் அமைக்க வேண்டியுள்ளதாக மாவட்ட வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவிக்கின்றது.
பல கோடி ரூபா செலவளித்து நிர்மாணிக்கப்பட்ட இந்த மின்சார வேலிகளை உடைத்துக் கொண்டு மக்கள் வாழும் பிரதேசங்களில் குப்பைகள் கொட்டப்படும் இடங்களை நோக்கி யானைகள் நகர்கின்றன.
நாடளாவிய ரீதியில் குப்பைகள் கொட்டப்படும் 54 இடங்களில், 300 இற்கும் அதிகமான யானைகள் நடமாடுவது கண்டறியப்பட்டுள்ளது. யானைகள் குப்பைகளை உணவாக உட்கொள்வதன் காரணமாக பல்வேறு நோய்களுக்கு இலக்காகி உயிரிழக்கின்ற விடயம் அவற்றின் மரண பரிசோதனை அறிக்கைகளின் ஊடாகத் தெரியவருகிறது.
இதற்கு சிறந்த உதாரணமாக ஒலுவில், அஷ்ரப் நகரிலுள்ள குப்பை மேட்டினை குறிப்பிட முடியும். சூழலுக்கு முற்றிலும் தீங்கு விளைவிக்கப்படும் வகையில் இங்கு கொட்டப்படும் குப்பைகளை நூற்றுக்கணக்கான யானைகள் உண்ண வருகின்றன. கடந்த வருடம் இக்குப்பை மேட்டில் பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்ட இரண்டு யானைகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது போன்று, கடந்த எட்டு வருடங்களில் இந்த குப்பை மேட்டில் குப்பைகளை உண்ட சுமார் 20 யானைகள் உயிரிழந்துள்ள விடயம் தற்போது தெரியவந்துள்ளது.
எனினும், அஷ்ரப் நகரிலுள்ள குப்பை மேட்டு வருகின்ற யானைகளின் எண்ணிக்கையினை குறைப்பதற்காக குறித்த குப்பை மேட்டினைச் சுற்றி பாரிய அகழிகள் தோண்டப்பட்டன. இந்த செயற்த்திட்டமும் வெற்றியளிக்காமையினால் குறித்த அகழிகளை உடைத்துக் கொண்டு யானைகள் குப்பை மேட்டினுள் நுழைந்துள்ளன.
இதேவேளை, இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் வரை மாத்திரம் 266 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் அதிகமான 56 யானைகள் அனுராதபுர வனவிலங்கு பிராந்தியத்திலும், 52 யானைகள் கிழக்கு மாகாணத்திலும், 51 யானைகள் பொலநறுவை பிராந்தியத்திலும் உயிரிழந்துள்ளன.
மனித – யானை மோதல் பிரதானமாக எட்டு மாகாணங்களின் 58 பிரதேச செயலகப் பிரிவுகளில் பரந்து காணப்படுகின்றது. இவற்றுள் அதிக மோதல் காணப்படும் பிரதேசமாக வெள்ளவாய, லுணுகம்வெஹர, அம்பாறை, போரதீவுப்பற்று, கோரளைப்பற்று தெற்கு, மகியங்கணை, தெஹியத்தக்கண்டி, வில்கமுவ, திம்புலாகல, வெலிகந்த, கெக்கிராவை, கல்கமுவை போன்ற பிரதேச செயலக பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இலங்கையில் ஏற்படும் மனித – யானை மோதலை குறைப்பதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றினை உருவாக்குவதற்காக புகழ்பெற்ற யானை நிபுணர் கலாநிதி பிரித்திவிராஜ் பெர்னாண்டோ தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று கடந்த 2020 ஓகஸ்;ட் மாதம் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் உட்பட அரச மற்றும் தனியார் துறையினரை உள்ளடக்கிய இந்த நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த 2020 டிசம்பரில் கையளிக்கப்பட்ட போதிலும், அதிலுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்த எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தினால் இதுவரை எடுக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில், குறித்த சிபாரிகளை அமுல்படுத்தவும், ஒருங்கிணைக்கவும், மேற்பார்வை செய்யவும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விசேட ஜனாதிபதி செயலணியொன்று கடந்த ஓக்டோபரில் நியமிகக்ப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த தேசிய வேலைத்திட்டத்தின் சிபாரிசுகளை அமுல்படுத்தும் நடவடிக்கை மிக மந்தகதியிலேயே இடம்பெறுவதாக சூழலியல் ஆய்வாளர் சுபுன் லகிரு குற்றஞ்சாட்டினார்.
"இந்த சிபாரிசுகளை முழுமையாக அமுல்படுத்தினால் மனித – யானை முரண்பாட்டினை குறிப்பிடத்தக்க அளவு குறைக்க முடியும். குறுகிய, நடுத்த மற்றும் நீண்ட அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த சிபாரிசுகளின் ஊடாக மனித – யானை முரண்பாட்டினை சகவாழ்வாக மாற்ற முடியும்" என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தற்போதைய சூழ்நிலையில் எமது நாட்டில் இடம்பெறும் மனித – யானை மோதலுக்கு தனியொரு நிறுவனமே பொறுப்புக் கூற வேண்டியுள்ளது. எனினும் குறித்த நிறுவனத்திடமுள்ள வளம் மற்றும் ஆளணிப் பற்றாக்குறையினால் இதனை மேற்கொள்ள முடியாதுள்ளது எனவும் சுபுன் குறிப்பிட்டார்.
"இந்த விடயம் தொடர்பிலான கடமைகளும், பொறுப்புக்களும் பரவலாக்கப்பட வேண்டும். அத்துடன் யானைகளுக்கான நிலைய வதிவிடங்களை உருவாக்கப்பட வேண்டும்" என அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, நாட்டிலுள்ள யானைகளையும் மனிதர்களையும் பாதுகாக்க கடுமையாக முயற்சிப்பதாகவும் இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவிக்கின்றது.
யானைகளின் வழித்தடங்களிலுள்ள பகுதிகளை கையகப்படுத்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்; நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது 16 வழித்தடங்களில் மனித குடியேற்றங்கள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றுக்கு நஷ்டஈடு வழங்கி குறித்த இடங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மனித – யானை மோதலை தடுப்பதற்காக நியமிக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டத்தின் சிபாரிசுகளை உடனடியாக அமுல்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். இதன் ஊடாக மனித – யானை மோதலை குறைக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
Comments (0)
Facebook Comments (0)