நன்கொடை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இந்தியா அதிகரித்தது
இலங்கையின் பொருளாதார தோற்றப்பாடுகளில் காணப்படும் துரிதமான மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நன்கொடை அடிப்படையிலான அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை இந்திய அரசாங்கம் அதிகரித்துள்ளது.
அதன் அடிப்படையில், இந்திய – இலங்கை உயர் பெறுபேற்று சமூக அபிவிருத்தி திட்டம் (HICDP) என்ற கட்டமைப்பின் கீழ் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் 9 திட்டங்களுக்குமான இறுதி ஒதுக்கீடானது 50 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பினைத் தொடர்ந்து குறித்த 9 திட்டங்களுக்குமான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடானது 3 பில்லியன் இலங்கை ரூபாவினை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஏனைய பல்வேறு துறைகள் உட்பட கல்வி மற்றும் சுகாதாரம் முதல் விவசாயம் வரையிலான சகல துறைகளையும் உள்ளடக்கியவகையில் இந்த திட்டங்கள் காணப்படுகின்றன.
HICDP கட்டமைப்பின் கீழ் இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 60க்கும் அதிகமான நன்கொடை அடிப்படையிலான திட்டங்கள் இந்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவற்றுக்கு மேலதிகமாக ஏனைய 20 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளன. HICDP கட்டமைப்புக்காக இரு நாடுகளும் 2005 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டிருந்ததுடன் ஒவ்வொரு 5 வருட காலப்பகுதியிலுமாக இதுவரை 3 தடவைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த திட்டங்களின் கீழான தனித் திட்டங்களுக்கான உச்சவரம்பும் ஒட்டுமொத்த நிதி மூலதனமும் 2023 ஜனவரியில் இந்திய அரசாங்கத்தால் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி பங்குடைமையானது 5 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படும் நிலையில் இதில் 600 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை அடிப்படையில் வழங்கப்பட்டதாகும்.
தேவைகள் மற்றும் முன்னுரிமை அடிப்படையிலும் மக்களை மையப்படுத்தியும் மேற்கொள்ளப்பட்டிருந்த திட்டங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வீடமைப்பு, வாழ்வாதார உதவிகள் போன்ற பல்வேறு துறைகளிலும் நாட்டின் பலபாகங்களிலும் பரவிக்காகணப்படுகின்றன.
1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை, ரயில் பாதை புனரமைப்பு, ஒன்றிணைந்த நீர் நிலை திட்டங்கள், இந்திய வீடமைப்பு திட்டம், மற்றும் யாழ்ப்பாணம் கலாசார நிலையம் ஆகியவை இந்திய அரசாங்கத்தால் இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கியத்துவமிக்க திட்டங்களில் உள்ளடங்குகின்றன.
Comments (0)
Facebook Comments (0)