சவூதியின் 'விஷன் 2030' இல் பெண்களுக்கு அதிக பங்கு: தூதுவர்

சவூதியின் 'விஷன் 2030' இல் பெண்களுக்கு அதிக பங்கு: தூதுவர்

சவூதி அரேபியாவின் 'விஷன் 2030' இல் பெண்களுக்கு அதிக பங்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்தார்.

விடியல் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குறித்த நேர்காணலின் முழுமை

கேள்வி: "விஷன் 2030" இல் பெண்களின் பங்கு பற்றி உங்களால் கூற முடியுமா?

பதில்: சவூதி அரேபியாவின் ஸ்தாபகர்  மன்னர் அப்துல் அஸிஸ் பின் அப்துல் ரஹ்மான் அல் சஊதின் காலத்திலிருந்து இரண்டு புனித ஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சஊதின் காலம் வரையில்,  சவூதி அரேபியாவில் பெண்கள், அந்நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் தீவிர பங்காளியாக மாறும் அளவுக்கு, வலுவூட்டல் மற்றும் கட்டியெழுப்புதல் செயற்பாடுகளின்  பல வெளிப்பாடுகளை அனுபவித்து வந்துள்ளதோடு அறிவியல், பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் போன்ற பல்வேறு துறைகளில் பல்வேறு தரத்தை அடைந்து கொள்வதிலும் வெற்றி கண்டுள்ளனர்.

சவூதி அரேபியாவின் "விஷன் 2030" என்ற மூலோபாயத்திட்டம் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெண்களுக்கு தேவையான முயற்சிகளை உள்ளடக்கி, அனைத்து மட்டங்களிலும் செல்வாக்கு மிக்க காரணியாக அவர்களை முன்னிலைப்படுத்துகிறது. சவூதி அரேபியா கண்டுவரும் வளர்ச்சி இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வகையில், பெண்களின் செயல்திறனை உயர்த்துவதற்கும் தொழில் சந்தையில் அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் அது ஒரு தனியான மூலோபாய இலக்கை முன்வைத்துள்ளது.

இதிலிருந்து, அனைத்துத் துறைகளிலுமான தேசிய வளர்ச்சியில் பயனுள்ள பங்காளியாக மாறக்கூடிய வகையில், சமூகத்தில் பெண்களின் நிலையை மேம்படுத்துவதை நோக்ககக் கொண்ட பல தீர்மானங்கள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் வெளியிடப்பட்டதன் மூலம், வலுவூட்டலை நோக்கிய பெண்களின் நகர்வு துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மற்றும் சவூதி அரேபியாவின் "விஷன் 2030", பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு வலுவூட்டுவதற்குமாக பல உறுதிமொழிகள், இலக்குகள் மற்றும் முன்முயற்சிகளை உள்ளடக்கியுள்ளது.

“விஷன் 2030”ல் இருந்து உருவாகும் திட்டங்களில் ஒன்றான தேசிய உருமாற்றத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று, தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே சவூதி பெண்களின் பொருளாதார பங்கேற்பு விகிதம் 2017ஆம் ஆண்டில் 17%ல் இருந்தது.

அது 2021ஆம் ஆண்டு 35.6% ஆக அதிகரித்துள்ளது. பெண்களின் பணிக்கான ஆதரவை ஊக்குவிப்பதோடு, விளையாட்டு அமைப்பில் அவர்கள் பங்கேற்கவும் அது உதவுகிறது. இவ்வாறே "விஷன் 2030" ஐ செயல்படுத்துவதில் பெண்களும் அதிக பங்கு வகிக்கின்றனர்.

கேள்வி: தொழிலாளர் சந்தையில் பெண்கள் வலுவூட்டல்  முயற்சி பற்றி ஒரு சிறு விளக்கத்தை வழங்க முடியுமா?

பதில்: பெண்கள் வலுவூட்டும் நோக்கில் சவூதி அரேபியா அரசால் ஆரம்பிக்கப்பட்ட பல முன்முயற்சிகள் உள்ளன, அவற்றில் மிக முக்கியமானது "பெண்கள் வலுவூட்டல்" முயற்சியாகும். இது மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் முன்முயற்சியாக தொடங்கப்பட்டது.

இந்த முன்முயற்சியானது, உயர் பதவிகளுக்கமர்த்துவதன் மூலம், பொது மற்றும் தனியார் துறைகளிலும், அனைத்து வேலை மட்டங்களிலும் பெண்களின் தரமான பங்கேற்பு விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வாறே அவர்களின் ஆற்றல்கள் மற்றும் திறன்களில் முதலீடு செய்தல் மற்றும் தத்தமது விருப்பங்களுக்கு ஏற்ப தொழில்களைத் தேர்வு செய்து கொள்ளக்கூடியவாறு தொழில் துறைகளை விரிவுபடுத்துதல், பாலின சமநிலையை அடைவதற்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான அளவு மற்றும் தரம் அடிப்படையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் அவர்களின் பங்களிப்பை அதிகரித்தல்.

மேலும் மனித, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் தடைகளை முறியடித்தல் போன்ற இன்னோரன்ன காரணிகளையும் நோக்காக்கொண்டது.

கேள்வி: பெண்கள் வலுவூட்டல்  தொடர்பாக சவூதி அரேபிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

பதில்: சவூதி அரேபிய  அரசாங்கம் தகுதிவாய்ந்த பெண்களை பல உயர் பதவிகளில் அமர்த்துவதற்கு ஆர்வமாக இருப்பதால், தலைமைத்துவம் மற்றும் நிர்வாகப் பதவிகளூடாக  திறம்பட பங்களிப்பதில் பெண்களின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, அபிவிருத்தி முயற்சிகளைத் துரிதப்படுத்துவதில் பெண்களை அதிகம் இணைத்துக் கொள்ளும் நோக்கில் பல சட்டங்களும் சீர்திருத்தங்களும் கடந்த சில  ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

2013ஆம் ஆண்டில் ஷூரா சபையில் 20% இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யும் அரச அங்கீகாரம் வழங்கப்பட்டது, மேலும் நகராட்சி நிர்வாகக் குழுவிற்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டர்கள் மற்றும் பல பெண்கள் அரசாங்கத் துறையில் தலைமைப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டார்கள்.

அனைத்து துறைகளிலும் பெண்கள் வலுவூட்டல் செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக சவூதி அரேபியா மேற்கொள்ளும் மிக முக்கியமான நடவடிக்கைகள் பின்வருமாறு:

• பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் பல சட்டக் கட்டமைப்புகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவை பிரகடனம் செய்யப்பட்டன. அவற்றில் முக்கியமானவைகளாக, பணி தொடர்பான சட்டம், பயண ஆவணங்கள் தொடர்பான சட்டம், சிவில் சட்டம், சமூக காப்பீட்டுச் சட்டம், போக்குவரத்துச் சட்டம் மற்றும் தனியார் சட்டம், போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

பொதுவாக  இவ் அனைத்து சட்டங்களும் பெண்கள் வலுவூட்டப்படுவதற்கும் அவர்களின் சிவில் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்குமான உத்தரவாதங்களை வழங்குகின்றன.

• சவூதி அரேபியாவின் பொது பட்ஜெட்டின் கட்டமைப்பிற்குள் "பெண்கள் வலுவூட்டல் முன்முயற்சி" பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பது.

• பல்வேறு துறைகளில் நவீன வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பெண்கள் வலுவூட்டல் செயற்பாடுகளில்  பங்களிப்புச் செய்யும் கல்வித் துறைகளை உருவாக்குதலும் அவற்றை  மேம்படுத்தலும்.

• பெண்களின் நிலையை/அந்தஸ்த்தை மேம்படுத்தவும், சமூக, பொருளாதார மற்றும் அறிவு ரீதியில் அவர்களை வலுவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் கூட்டாண்மை முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதற்குமாக குடும்ப விவகார கவுன்சிலில் மகளிர் குழுவொன்றை நிறுவுதல்.

• சவூதி மனித உரிமைகள் ஆணையம் அதன் பல்வேறு குழுக்களுக்கு மத்தியில் பெண்களுக்கான பிரத்தியேகமான ஒரு குழுவை உருவாக்கியுள்ளது. அக்குழு அனைத்து துறைகளிலும் சர்வதேச தரத்திற்கு ஏற்ப பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது.

• பாலின சமநிலை மையம் நிறுவப்பட்ட்டுள்ளமை

கேள்வி: சவூதி அரேபியாவில் பெண்கள் வலுவூட்டலின் மிக முக்கிய அம்சங்கள் பற்றி ஒரு சிறு விளக்கம் தர முடியமா?

பதில்

1. பாலின சமத்துவம்

இஸ்லாமிய “ஷரிஆ” விலிருந்து உருவான சவூதி அரேபியாவின் சட்டங்கள், நீதியை நிலை நாட்டும் நோக்கில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான முழு சமத்துவக் கொள்கையை ஏற்றுக்கொள்கின்றன.

பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக, இரு பாலினருக்கும் ஓய்வூதிய வயதை ஒருங்கிணைத்தல், ஊதியம், வேலை வகை, புலம் மற்றும் வேலை நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் பாலின பாகுபாட்டைத் தடுப்பது, அத்துடன் முன் அனுமதி பெறாமல் பெண்கள் வணிகத்தில் ஈடுபடுவதை சாத்தியமாக்குவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை சவூதி அரேபிய மேற்கொண்டுள்ளது.

2. வேலைச் சூழல் மற்றும் ஊதியத்தில் சமத்துவம்

வேலைக் கட்டமைப்பில் உள்ள பாகுபாடுகளை ஒழிக்க, தொழிலாளர்கள் தொடர்பான சட்டம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பல உரிமைகள் மற்றும் கடமைகளை சமமாக வழங்கியுள்ளது. அதாவது வேலையின் பெருமானமும் தரமும் சமமாக இருந்தால் அவர்களுக்கு சம ஊதியம் வழங்குவது அத்தோடு வேலை தேடல் மற்றும் வேலை பெறுவதற்கான பயிற்சி திட்டங்களில் முழுமையான சமத்துவம் பேனல்.

கேள்வி: வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாப்பதற்காக சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

பதில்: சவூதி அரேபியாவின் சட்டங்கள், வன்முறையை அதன் அனைத்து வடிவங்களிலும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை, குற்றமாக பிரகடனம் செய்துள்ளது.

செப்டம்பர் 2013ம் ஆண்டில் வெளியிடப்பட்ட “துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பு” தொடர்பான சட்டம் துஷ்பிரயோகத்தை, அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும்  தடைசெய்து குற்றமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தில் விஷேட பிரிவொன்று உருவாக்கப்பட்டு வன்முறைகள் தொடர்பான புகார்கள், அறிவிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மேலும் புகார்கள், அறிவித்தல்களைப் பெற்றுக்கொள்ள அனைத்து பிராந்தியங்களிலும் கவர்னரேட்டுகளிலும் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் துறையில் தேசிய குடும்பப் பாதுகாப்புத் திட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது. இத்திட்டமானது, தடுப்பு மற்றும் ஆதரவுத் திட்டங்களை வழங்குவதன் மூலமும் விழிப்புணர்வைப் பரப்புவதன் மூலமும் வன்முறைகளிலிருந்து குடும்பத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

அத்தோடு, சவூதி அரேபியாவில் பாதுகாப்பான குடும்பச் சூழலை உருவாக்குவதற்காக துறைசார் வல்லுநர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் தொழில்முறைசார் கூட்டாண்மைகளையும் உருவாக்கிச் செயற்படுகிறது.

கேள்வி: சவூதி அரேபியாவில் அரசியல் மற்றும் பொது வாழ்வில் பெண்களின் வகிபாகம் குறித்து தெளிவுபடுத்த முடியுமா?

பதில்: சவூதி அரேபியாவில் பெண்கள் பல அரச நிறுவனங்களில் தலைமைப் பதவிகளை வகிக்கின்றனர், மேலும் ஷூரா கவுன்சில் அங்கத்தவர்களாக  பெண்கள் குறைந்த பட்சம் (20%)  உள்ளனர்,

பெண்கள் ஷூரா கவுன்சிலில் பல விஷேட குழுக்களின் தலைமை மற்றும் உறுப்பினர் பதவிகளையும் வகித்து வருகின்றனர். ஷூரா சபையில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை (97) பேர் ஆகும்.

மனித உரிமைகள் ஆணையத்தில்  (12) பெண்கள் பணி புரிகின்றனர். இது ஆணையத்தின் மொத்தத் தொழிலாளர்கள் தொகையில் (50%) ஆகும், மற்றும் பெண்கள் ஷூரா கவுன்சிலின் உரிமையகளுக்கான குழுவில் (ஷூரா கவுன்சிலில் உள்ள விஷேட குழுக்களில் ஒன்று)  உறுப்பினர்களாக 70% விகிதம் உள்ளனர். 

கீழ்வரும் அட்டவணை, 2022 ஆம் ஆண்டில் பல துறைகளில் பெண்களின் பங்கேற்பை விளக்குகிறது:

கேள்வி: சவூதி அரேபியாவின் தொழில் சந்தையில் பெண்கள் வலுவூட்டல் குறிகாட்டி பற்றிக் குறிப்பிட முடியுமா?

பதில்: பெண்கள் வலுவூட்டல் செயற்படுகளிலும் தொழில் சந்தையில் அவர்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரிப்பதிலும் சவூதி அரேபியா பெரும் முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.

சவூதி அரேபியாவின் "விஷன் 2030" க்கு இணங்க, சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த முயற்சிகள் மற்றும் சட்ட ஏற்படுகள், பெண்கள் வலுவூட்டல் இலக்குகளில் பிரதிபலிப்பதை அவதானிக்க முடிகிறது.

2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சவூதி அரேபியா பெண்களின் பங்கேற்பு விகிதம் 32.4% இலிருந்து 2022ஆம் ஆண்டின் அதே காலாண்டில் 35.6% ஆக அதிகரித்துள்ளது.

அவ்வாறே 2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில்பெண்களின் வேலையின்மை விகிதம் 22.3% இலிருந்தது. 2022ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் அது 19.3% ஆகக் குறைந்துள்ளது.

உலக வங்கியால் வெளியிடப்பட்ட பெண்கள் மற்றும் சட்டப் பணி அறிக்கை, பல துறைகளில் பெண்கள் வலுவூட்டல் செயற்படுகளில் சவூதி அரேபியா அடைந்துள்ள பெரும் முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளது.

பெண்கள் வலுவூட்டல் செயற்படுகளில் சவூதி அரேபியாவின் குறியீடு 2019 ஆம் ஆண்டில் 25.63 புள்ளிகளாக இருந்தது, அது 2022ஆம் ஆண்டு 80 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.