குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இணக்கம்

குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இணக்கம்

குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தம்) சட்டமூலம் மற்றும் இலக்க சித்திரவதை மற்றும் வேறு கொடுரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சவமவாயம் (திருத்தம்) சட்டமூலம் ஆகியவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

நீதி அமைச்சர் எம்.யூ.எம்.அலி சப்ரி தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை  (22) நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் விசேட கூட்டத்திலேயே இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டது.

கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தம்) சட்டமூலம், 08.06.2021ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 1994ஆம் ஆண்டு 22ஆம் இலக்க சித்திரவதை மற்றும் வேறு கொடுரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சவமவாயம் (திருத்தம்) சட்டமூலம் மற்றும் ஒரு ஒழுங்குவிதி, நான்கு ஆண்டறிக்கைகள் என்பன இக்கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டன.

இவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க குழு இணங்கியது.  தற்பொழுது நிலவும் கொவிட்-19 தொற்றுநோய் சூழலின் கீழ் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அரசாங்க அதிகாரிகள் இக்கூட்டத்தில் ஒன்லைன் ஊடாக இணைந்துகொண்டனர்.

நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, சுசில் பிரேமஜயந்த பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்ஹ ஆகியோர் நேரடியாகக் கலந்துகொண்டிருந்தனர்.